ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் அவரது கண்டுபிடிப்பான ‘அக்னி ஏவுகணை’ கண்காட்சியில் இடம் பெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாடு கழகம் (டி.ஆர்.டி.ஓ.,) சார்பில் ரூபாய் 15 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடக்கிறது. கலாம் 2-ம் ஆண்டு நினைவு நாளான ஜூலை 27 ல் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க உள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
விழாவில் முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, வெங்கையாநாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திறப்பு விழா அன்று நினைவிடம் வளாகத்தில் கண்காட்சியகம் அமைத்து, அதில் கலாம் வாழ்க்கை வரலாறு, இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ.-ல் அவர் பணியாற்றிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், கலாம் கண்டுபிடித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி ஏவுகணை’ இடம் பெற உள்ளது. திறப்பு விழாவுக்கு சில நாட்களே உள்ளதால், ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ.-ல் இருந்து 60 அடி நீளத்தில் ‘அக்னி ஏவுகணை’-யின் மாதிரி வடிவம் லாரி மூலம் அவரது நினைவிடத்திற்கு கொண்டு வரப்பட்டது.