தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தஞ்சை பெரிய கோவிலில் பிப். 5-ல் குடமுழுக்கு நடைபெறுகிறது.
பெரிய கோவில் சைவ வழிபாட்டு தலமாகும். இதனால் இங்கு தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் சுந்தரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே தமிழர்களின் அடையாளமான தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக தமிழக தலைமை செயலர், தமிழ் வளர்ச்சித்துறை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கவும், பெரியகோவில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டும் விசாரணையை ஜன. 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- இந்து தமிழ்