அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது: பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு

 

2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை தமிழ் எழுத்தாளர் அம்பை பெறுகிறார். அதேபோல் பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் மு.முருகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை செய்யும் படைப்பாளிகளுக்கு ஒன்றிய அரசால் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தமிழ் பெண் எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1962ல் எழுதத் தொடங்கிய அம்பை பெண்களின் உளச்சிக்கல்களை, அரசியலை, காதல், காமத்தை என பெண்களின் உலகத்தை, வலியை பல்வேறு பரிமாணங்களின் எழுதக்கூடியவர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் புலமைபெற்ற அம்பை தமிழ், ஆங்கிலம் என 14க்கும் மேற்பட்ட முக்கிய நூல்களை எழுதியுள்ளார். அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறார். அதேபோல், பால புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் மு.முருகேஷ் ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ கவிதைகளில் இயங்கி வருபவர். சிறுவர் இலக்கியங்களில் முக்கிய பங்காற்றி வரும் இவர், 8 கவிதை நூல்கள், 11 ஹைக்கூ கவிதை நூல்கள், 18 குழந்தைகளுக்கான நூல்கள் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். எழுத்தாளர் மு.முருகேஷ் ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற குழந்தை இலக்கிய நூலுக்கு பால புரஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பால புரஸ்கார் விருதுக்கு தேர்வான  மு.முருகேஷ் கூறுகையில், ‘‘இது தமிழகத்திற்கும், புதுக்கோட்டைக்கும்  கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். ஒவ்வொரு சிறுகதைக்கும் படங்கள் வரையப்பட்டுள்ளன. குழந்தைகள் வரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பால  புரஸ்கார் சாகித்ய விருது கிடைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு  தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய உழைப்புக்கு கிடைத்த  அங்கீகாரமாக இந்த விருதையும், முதல்வரின் பாராட்டையும் எடுத்து கொள்கிறேன்’’ என்றார்.


* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் அம்பை மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் கவிஞர் மு.முருகேஷ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: தனது ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள். தமிழில், பல ஆண்டுகளுக்கு பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும். கவிஞர் மு.முருகேஷ், ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். சிறார்களுக்கான எளிய – இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>