தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் , ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

 

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 164.66 கோடி ஆகும். உணவு பதப்படுத்தல் அமைச்சகத்தால் ரூ 27.99 கோடி மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3100 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ள இந்த திட்டங்கள் மூலம் அவற்றுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் சுமார் 16,500 விவசாயிகள் பயனடைவார்கள்.

உணவு பதப்படுத்தல் வாரம் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இத்திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.

தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களின் விவரம் வருமாறு:

* ஈரோடு மாவட்டத்தின் புஞ்சைகிளாம்பாடியில் எஸ்கேஎம் எக் புரோடக்ட்ஸ் எக்ஸ்போர்ட் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் உணவு பதப்படுத்தல் பிரிவு. இதன் மதிப்பீடு ரூ 15.10 கோடியாகும். இதன் மூலம் 20 விவசாயிகளுக்கு பலன் கிடைத்து, 250 நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 740 மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

* திருப்பூர் மாவட்டத்தின் சிவன்மலை கிராமத்தில் உள்ள இந்திய உணவு பூங்காவில் சாம்சன் சிஎன்ஓ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உணவு பதப்படுத்தல் பிரிவு. இதன் மதிப்பீடு ரூ 6.41 கோடியாகும். இதன் மூலம் 1550 விவசாயிகளுக்கு பலன் கிடைத்து, 80 நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 250 மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

* மத்திய பொதுப்பணித் துறையால் கட்டப்பட்ட ரூ 1.50 கோடி மதிப்பிலான தானிய அறிவியலுக்கான உயர்சிறப்பு மையம். இரு ஆய்வகங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையம், பல்வேறு உணவு தானியங்கள் குறித்த தர ஆய்வுகளை மேற்கொள்ளும்.

* இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி அறிவியலுக்கான பள்ளி. பல்வேறு நவீன வசதிகளுடன் இது நிறுவப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>