உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
முன்னதாக, கடந்த ஜூன் மாத இறுதியில் உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. அதற்கு எதிர்ப்பு எழுந்து அகற்றப்பட்ட சூழலில், திங்கள் கிழமை மீண்டும் அந்த சிலை வேறிடத்தில் நிறுவப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலை நாமக்கல் மாவட்டத்தில் 12 அடி உயரத்தில் செய்யப்பட்டது. இந்தச் சிலையை ஹரித்வாருக்குக் கொண்டு செல்வதற்கான பயணம், திருவள்ளுவரின் கங்கா பயணம் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியது.
பின்னர், இந்த சிலை ஹரித்வாரில் உள்ள சங்கராச்சாரியா சவுக் என்ற இடத்தில் நிறுவப்பட்டு ஜூன் 29-ஆம் தேதி திறப்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், திருவள்ளுவர் சிலையை அங்கே நிறுவுவதற்கு சில பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால், தம் கோதி விருந்தினர் மாளிகையில் உத்தரப்பிரதேசம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் ஆளுநர் முன்னிலையில் சிலை திறக்கப்பட்டது.
அப்போது, அங்குள்ள சில மதவாத அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டுக் கிடந்தது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இது குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினார். பின்னர், திருவள்ளுவர் சிலை குறித்த சர்ச்சையை ஏற்படுத்திய சாதுக்களுடன் அந்த மாநில அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு கண்டவுடன், திங்கள் கிழமை மாலை அந்த சிலை வேறிடத்தில் மாற்றியமைக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலையை நிறுவ முன்முயற்சிகள் எடுத்த பாரதீய ஜனதா எம்.பி. தருண் விஜய் இதுகுறித்து பிபிசி தமிழோசையிடம் பேசும்போது, ”திருவள்ளுவர் குறித்து சில சாதுக்களின் தவறான புரிதலால் திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகமும் திருவள்ளுவரின் மகிமை புரியாமல் அச்சிலைக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை” என்று கூறினார். மேலும்,அவர் கூறுகையில், ”தற்போது அந்த சாதுக்களுக்கு திருவள்ளுவரின் பெருமை புரிய வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு, அவை வெற்றியடைந்துள்ளது” என்று கூறினார்.
”இன்று நடந்த நிகழ்வில் உத்தராகண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் கலந்து கொண்டார். சில உள்ளூர் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்த தருண் விஜய், மேலும் கூறுகையில், ”திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு வட இந்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இந்தி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். அப்போது தான், திருவள்ளுவர் சிறப்பை அறியாமல் இந்தியாவின் ஒருமைப்பாடு முழுமைப் பெறாது என்று மக்கள் புரிந்து கொள்வர்” என்று திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டினார்.