இந்தியாவில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தலைவராக உள்ளார். என்.சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் மோகனுர். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளி படிப்பை அரசுப் பள்ளியில்தான் படித்தார். கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தவர். வழக்கமாக டாடா குழுமத்தில் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்களே தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள். சந்திரசேகரன்தான் முதன்முறையாக அந்த மரபை உடைத்து தலைவரானார். டி.சி.எஸ் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக 1987-ம் ஆண்டு சந்திரசேகரன் பணியைத் தொடங்கினார். படிப்படியாக உயர்ந்து, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானர். டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்திரியின் நீக்கத்துக்குப் பிறகு, டாடா சன்ஸ் குழுமத்துக்கே தலைவராக நியமிக்கப்பட்டார்.
மும்பையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற என்.சந்திரசேகரன், ஆத்திசூடியும், திருக்குறளும் டாடா நிறுவனத்தை வழி நடத்த தனக்கு உதவிகரமாக உள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் பேசிய என்.சந்திரசேகரன், ”தமிழகத்தைச் சேர்ந்த நான், தமிழில்தான் படித்தேன். அப்போதெல்லாம், 3-ம் வகுப்பு வரை புத்தகங்கள் கிடையாது. பாடத்திட்டமும் கிடையாது. எங்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களைத்தான் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள். அவ்வையார் எழுதிய ஆத்திசூடியையும் திருவள்ளுவரின் திருக்குறளையும் கற்றுக்கொடுத்து எங்களை வளர்த்தனர். 10 வயதுக்குள் நாம் கற்கும் விஷயங்கள்தான் நம்மை நல்வழிப்படுத்தும். இப்போது, டாடா சன்ஸ் இயக்குநர்கள் கூட்டத்தில் தினமும் நான் பல்வேறு முடிவுகளை எடுக்கிறேன். அதற்கு, திருவள்ளுவரும் அவ்வையாரும்தான் உதவியாக இருக்கின்றனர்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.