நீண்ட காலமாக நோயாளிகளாக இருப்போரை தொடர்ந்து பராமரித்து வருவது மிகவும் கடினம். அதிலும், படுத்தபடுக்கையாய் இருப்போருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்வது மேலும் கடினம். அவர்களை கவனிப்பதற்கே பலர் தேவைப்படுவர். படுத்தப்படுக்கையில் இருக்கின்ற நோயாளிகள் சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் அவர்கள் படுத்திருக்கும் படுக்கையில் இருந்து தூக்கிச் செல்ல வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், அந்த படுக்கையில் இருந்தவாறே அவர்கள் சிறுநீர், மலம் கழித்துவிட, அவற்றை கழிவறைக்கு எடுத்து சென்று கொட்ட வேண்டியிருக்கும்.
படுத்தப்படுக்கையாய் எழும்புவதற்கு சிரமப்படும் நோயாளிகள் தாங்களே இயற்கை கடமைகளை நிறைவேற்றி கொள்ள வசதியையும் வழங்கியுள்ளது மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சரவணமுத்து கண்டுபிடித்துள்ள “டாய்லெட் படுக்கை”.
தென்காசியில் பிறந்து, பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்து தற்போது தளவாய்புரத்தில் வசித்து வருகிறார் சரவணமுத்து. இவர் கண்டுபிடித்துள்ள படுக்கையில் நோயாளிகள் சிறுநீர் கழிக்க வேண்டும் அல்லது டாய்லெட் செல்ல வேண்டும் என்றால், அவர்களின் கையில் ரிமோட் இருக்கும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
முதலில் ஒரு பட்டனை அழுத்தியவுடன், முன்பக்கத்தில் இருக்கும் துளை ஒன்றை மூடியவாறு இருக்கும் கதவு திறக்கும். அடுத்ததாக இந்த படுக்கையில் பொருத்தப்பட்டுள்ள டாய்லெட் ஒன்று சரியான இடத்திற்கு வந்து நிலைபெற்றுவிடும்.
இந்த துளையின் கதவு தள்ளிச் சென்றுவுடன், அந்த படுக்கையில் பொருத்தப்பட்டுள்ள டாய்லெட் பாத்திரம் இந்த துளை பகுதியில் வந்து பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறுநீர் போகலாம் அல்லது மலம் கழிக்கலாம். இந்த படுக்கையிலேயே தண்ணீர் தொட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. . படுக்கை பக்கத்தில் இருக்கும் ரிமோட்டை இயக்கினால், தண்ணீர் பாய்ந்து இந்த டாய்லெட்டை சுத்தம் செய்துவிடும்.
இந்த தண்ணீரும், கழிவும் சேர்ந்து கீழே இணைக்கப்பட்ட குழாய் வழியாக, கழிவுத் தொட்டிக்கு சென்றுவிடும். மூன்றாம் வகுப்புக்கு பின்னர் படிப்பை முடித்துவிட்டு, சிறு வயதிலேயே தனது தந்தையோடு கார் மெக்கானிக் வேலை செய்ய தொடங்கினார் சரவணமுத்து.
மெக்கானிக் மனநிலையிலேயே வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டிருப்பது சரவணமுத்துவின் பழக்கம். கார் மெக்கானிக், டிங்கரிங் செய்வதிலும் வித்தியாசமான முறைகளை இவர் கையாண்டு வந்துள்ளார். மெக்கானிக் மற்றும் வெல்டிங் வேவை செய்து கொண்டிருந்த சரணவமுத்து, தொழிற்கல்வி மற்றும் பொறியியல் மாணவர்களின் புராஜெட் பணிகளையும் செய்து கொடுத்து வருவாய் ஈட்டி வந்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் செய்வதற்காக கொண்டுவரும் புராஜெட்டில் இருக்கும் குழப்பங்களை அந்த மாணவர்களுக்கு புரிய வைத்து, வேறு மாதிரியாக, வித்தியாசமாக செய்வதற்கு இவர் ஆலோசனைகளை கொடுத்தும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் செய்து கொடுத்திருந்த சில புராஜெட்டுகளுக்கு விருதுகளும் கிடைத்துள்ளன.
2015ஆம் ஆண்டு இந்த டாய்லெட் படுக்கையை சரவணமுத்து கண்டுபிடித்தார். அந்த படுக்கை முழுவதையும் செய்ய வசதியில்லாத காரணத்தால், அதற்கான மாதிரியை மட்டுமே செய்திருந்தார். இது பற்றி செய்தி ஒன்று வெளிவரவே, சென்னையில் ஆறு மாதங்களாக படுத்தப்படுக்கையான தாயை வைத்து பராமரித்து வந்த குருமூர்த்தி என்பவர் அந்த செய்தியை வாசித்து, சரவணமுத்துவை தொடர்பு கொண்டுள்ளார்.
குருமூர்த்தியிடம் நிதியுதவி பெற்று முதல் “டாய்லெட் படுக்கையை” செய்து முடித்து அவரிடம் வழங்கியுள்ளார் சரவணமுத்து. மேலும், இந்த படுக்கை இயங்குகின்ற காணொளியை பதிவு செய்து இந்திய ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளார் சரவணமுத்து. இவ்வாறு அவர் அனுப்பிய பல கண்டுபிடிப்புகளில், இதுமட்டும் சிறந்த கவனம் பெற்றுள்ளது. இந்திய ஆராய்ச்சி மையத்தில் இருந்து வந்து அவரது கண்டுபிடிப்பை பார்த்து சென்றுள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை இந்த கண்டுபிடிப்பை எவ்வாறு மேம்படுத்தி வருகிறார் என்று இந்திய ஆராய்ச்சி மையத்தில் இருந்து தொடர்ந்து வந்து பார்த்து சென்றுள்ளனர்.
2019ஆம் ஆண்டு ஜனவரியில் வந்து பார்த்து ஆய்வு செய்தவர்கள் மிக சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் இந்திய ஆராய்ச்சி மையம் அறிவியல் கண்காட்சி ஒன்றை நடத்துவதாகவும், அதில் சரவணமுத்து கலந்துகொள்ள வேண்டுமெனவும் இந்திய ஆராய்ச்சி மையம் கேட்டுக்கொண்டது.
இந்த கண்டுபிடிப்பை காந்தி நகருக்கு அனுப்பும் செலவு முதல் எல்லாவற்றையும் இந்திய ஆராய்ச்சி மையமே செய்துள்ளது. குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற இந்த கண்காட்சியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கி வைத்தார். காந்தி நகரில்தான் தேசிய புத்தாக்க நிறுவனம் உள்ளது.
இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 167 கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில், தனது கண்டுபிடிப்பான “டாய்லெட் படுக்கை” முதலில் வைக்கப்பட்டதை பார்த்து மிகவும் பெருமிதம் அடைந்ததாகக் கூறுகிறார் சரவணமுத்து.
அந்த அரங்கில் தனது கண்டுபிடிப்பு தேசிய அளவில் இரண்டாவது இடம்பெற்று விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றதாக சரவணமுத்து குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற 10 மாநிலங்களில் தமிழ் நாட்டில் இருந்து தனக்கு கிடைத்ததால் பெருமிதம் அடைந்ததாக கூறுகிறார் சரவணமுத்து.