மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தூய்மை மற்றும் துப்புரவு தொடர்பான அளவுக்கோல்களை முன்வைத்து சமீபத்தில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்தியாவில் உள்ள 690 மாவட்டங்களில் உள்ள 17,400 த்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 31 ஊரக மாவட்டங்களில் உள்ள 800க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த தூய்மை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாதிரி தூய்மை ஆய்வுகள் கீழ்க்கண்ட முக்கிய 3 காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பொது இடங்களாகிய பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றில் தூய்மை குறித்து நேரடி கள ஆய்வு 30 சதவீதம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக கிராமப்புறங்களில் பல்வேறு தகவல்கள் அறிந்த முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் தூய்மை குறித்த கருத்து 35 சதவீதம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மைக்கான கட்டமைப்பு வசதிகளின் செயல்திறன் முன்னேற்றம் குறிப்பாக வீடுகளில் கழிப்பறை வசதிகள், ஒருங்கிணைந்த சமுதாய கழிப்பறைகள் ஆகியவை பற்றி 35 சதவீதம் பற்றி கள ஆய்வு செய்யப்பட்டது.
அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாட்டை தேசிய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரக தூய்மை கணக்கெடுப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டதற்கான மத்திய அரசின் தேசிய விருதை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.