பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்


ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால், அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தனது மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பான விசாரணையில் ராஜீவ்காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு தொடர்பாக புதிய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.

நீதிபதி எல்.நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பேரறிவாளன் உள்ளிட்டோர் தொடர்புபடுத்தப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி கொலையில் பெல்ட் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணையின் நிலவர அறிக்கையை, கடந்த ஜனவரி 14ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மத்திய அரசு.

இந்த அறிக்கைக்கும், முன்பு சமர்பிக்கப்பட்ட அறிக்கைக்கும் எந்த விதமான வித்தியாசத்தையும் காணமுடியவில்லை என்ற அதிருப்தியையும் முந்தைய விசாரணையின்போது நீதிபதிகள் வெளிப்படுத்தியிருந்தனர். புதிய நிலவர அறிக்கையை இந்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அப்போது மத்திய அரசை நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வழக்கின் விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம் என்று நீதிபதி நாகேஸ்வர் ராவ் கூறியிருந்தார்.

புதிய நிலவர அறிக்கை குறித்து விசாரித்த நீதிபதிகள், இந்த அறிக்கை, பேரரிவாளன் தரப்பால் பார்க்கப்பட்டதா என்றும் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட பேரரிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு செய்துள்ளது என்பதற்கான பதிலை இரு வாரங்களில் தெரிவிக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>