“இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். அவர்கள் எவரும் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லத் தேவையில்லை” – ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இப்படி முழங்குகிறார்கள்.
“இலங்கை அகதிகள் 90 சதவிகிதம் பேர் இலங்கைக்குத் திரும்பிச் செல்லவே விரும்புகிறார்கள். அவர்கள் அங்கே குடியமர்த்தப்பட வேண்டும்” – பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் ஓயாமல் இப்படி முழங்கிக் கொண்டிருக்கிறார்.
இவற்றுக்கு நடுவே, “இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதுதான் சரியான தீர்வு. அதைத்தான் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுத்தியுள்ளோம். அவரும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்” என்று நடுவாந்திரமாக ஒரு விஷயத்தை முன்வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இவர்கள் ஆயிரம் பேசட்டும். ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிக முக்கியம். அதைத் தெரிந்துகொள்வதற்காக, அந்த மக்களிடையே கருத்துக் கேட்பு நடத்தத் திட்டமிட்டு, அதன்படியே நடத்தி முடித்துள்ளோம்.
இந்த நிலையில், கருத்துக் கேட்பு நடத்தியதற்காக ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது அதிரடியாக வழக்குகளைப் பாய்ச்சி, பயமுறுத்தும் வேலையை ஆரம்பித்திருக்கின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள்.
கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது தெரிந்ததும் டிசம்பர் 27-ம் தேதி காவல் தரப்பு திடீரெனப் பரபரப்பானது. நிருபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்தன. எதுவாக இருப்பினும் எதிர்கொள்ளக் காத்திருந்தோம். அடுத்தநாள் (டிசம்பர் 28) கன்னியாகுமரி மாவட்ட நிருபர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர் மீது மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை காவல் நிலையங்களில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிவு 447 – குற்றமுறு அத்துமீறி நுழைதல் (குற்றம்புரியும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைதல்);
பிரிவு – 188 அரசாங்க அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படியாமல் இருத்தல். அதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்;
பிரிவு-505 (1) பி மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராகக் குற்றம்புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், பிரசுரங்களை விநியோகித்தல் ஆகியவைதான் அந்தப் பிரிவுகள்.
இதில் பிரிவு-505 (1) பி என்பது, பிணையில் விட முடியாத சட்டப்பிரிவாகும். ‘குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அப்படியான சூழலில் இத்தகைய கருத்துக் கேட்பு எப்படிக் குற்றச்செயலாகும் என்பதுதான் புரியவில்லை. இவற்றின் மூலமாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுமா, இத்தகைய கேள்விகளை அந்த அகதிகளிடம் கேட்டு, கருத்துகளைப் பெற்றது அத்துமீறலா, அதன் மூலமாக யாருக்கெல்லாம் பிரச்னை உருவாகியிருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.
கருத்துக் கேட்பு என்பது, காலம்காலமாக நடத்தப்படும் ஒரு விஷயமே. கடந்த காலங்களில் அரசியல் மாற்றங்கள், பொதுமக்களுக்கான தேவைகள், கல்வி தொடர்பான மாற்றங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் கருத்துக் கேட்புகளை விகடன் நடத்தியுள்ளது. விகடன் இணையதளம் மூலமாகவும் அடிக்கடி கருத்துக் கேட்புகள் நடத்தப்படுவது வழக்கமே. அனைத்துமே பொதுநலன் கருதி எடுக்கப்படுபவையே. யாரும் இதையெல்லாம் ஒரு பிரச்னையாகப் பார்த்தது கிடையாது. காரணம், அதிலிருக்கும் பொதுநலன்தான். அப்படியிருக்க, இலங்கை அகதிகளிடம் கருத்துக் கேட்பு நடத்தியது பெருங்குற்றம்போல் சித்திரித்து, பிணையில் வர முடியாத பிரிவின்கீழ்கூட வழக்கு பதிவுசெய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதற்காக மக்களின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் அரசுகள், தற்போது ஊடகங்களின் பேனா முனையையும் உடைத்திருக்கின்றன.
- விகடன்