இலங்கைப் போரின் போது அந்நாட்டில் இருந்து இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும், என இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இயங்கி வரும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கிளப் சிறப்புக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆஸ்டின் பெர்னான்டோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைத் தூதர் ‘2015க்கு பிறகு: இலங்கையில் நல்லிணக்க மைல்கற்கள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
”கிட்டத்தட்ட 5 ஆயிரம் அகதிகள் ஏற்கெனவே இலங்கைக்குத் திரும்பிவிட்டார்கள். தற்போது எஞ்சியுள்ள அகதிகளையும் சொந்த நாட்டிற்கே அழைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
கடந்த 2009-ம் ஆண்டோடு முடிவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரின் காரணமாக கிட்டத்தட்ட 1 லட்சம் அகதிகள் இந்தியாவுக்குத் தஞ்சம் தேடி வந்தனர். இந்த மக்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் இந்தியாவில் தங்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். மற்றவர்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள்,
இதுகுறித்து அவர்களிடம் பேசுவதற்காக விரைவில் தென்னிந்தியாவில் அமைந்துள்ள அகதி முகாம்களுக்கு நேரிடையாகச் செல்லும் திட்டம் உள்ளது. நாம் அவர்களது பிரச்சினைகளை கூர்ந்து கவனிப்போம் என்று அவர்களிடம் சொல்வோம். அதே நேரத்தில் அவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு ஒரு இடம் தேவை.
அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அவர்கள் குழந்தைகளுக்குப் படிப்பு வேண்டும். அதுமட்டுமின்றி நாடு திரும்பிய உடன் அவர்களுக்கென்று ஒரு வேலை வேண்டும்.இந்த மக்களை மீண்டும் அழைத்துச் செல்வதற்கான காலக்கெடு ஏதேனும் கொழும்பு நிர்ணயித்துள்ளதா? என்ற உங்கள் கேள்விக்கு எனது பதில் இதுதான்.
அதற்கெல்லாம் சிறிதும் நேரம் இல்லை. எவ்வளவு சீக்கிரம் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதைச் செய்ய விரும்புகிறோம்.ஏனென்றால் நிறைய சட்டரீதியான சிக்கல்கள் இதில் உள்ளன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்”.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட துணைத் தூதர் பேசுகையில், ”நான் இந்த மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இப்பிரச்சினையில் கொழும்புவும் டெல்லியும் ஒரு தீவிரமான பேச்சுவார்த்தையை உடனே நடத்தும் தேவை உள்ளது” என்றார்.