தமிழர்கள் தண்டனைக்குட்படுத்தும், செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்!

செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்!

செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்!

உலகில் எங்கும் கிடைக்காத அபூர்வ ரக மரவகையைச் சேர்ந்தது செம்மரம்.

ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்த்பூர் மாவட்டங்களில் பலகொண்டா, நல்லமல்லா, சேசாச்சலம் வனப்பகுதிகளில் சுமார் 5,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சுமார் 1.4 கோடி மரங்கள் கொண்ட செம்மரக்காடு. ஆந்திர எல்லையில் வட தமிழ்நாட்டின் மாவட்டங்களிலும் கணிசமான செம்மரங்கள் உண்டு.


ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


செம்மரங்கள் அணுக் கதிர் வீச்சை கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது. அறை வடிவமைப்பு, விளையாட்டுக் கருவிகள், பொம்மைகள், இசைக் கருவிகள், அழகுசாதன பொருட்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பு என பயன்படுத்தப்படுகின்றன.

செம்மர ஏற்றுமதி 1998-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அருகிவரும் தாவர, விலங்கு பொருட்களின் பன்னாட்டு வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தின் (CITES – Convention on International Trade in Endangered Species) மற்றும் (IUCN – International Union for Conversation of Nature) உறுப்பு நாடுகளும் செம்மர வர்த்தகத்தை தடை செய்திருக்கின்றன, ஆனால் “சுதந்திர சந்தை”யும், முதலாளித்துவ முதலீடும் அளிக்கும் உந்துவிசை உள்ளூர் ரவுடிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதல் பன்னாட்டு கடத்தல்காரர்கள் வரை இயக்குகிறது.

அப்படித்தான் கடந்த மார்ச் 9-ஆம் தேதி செம்மரம் வெட்டியதாக கூறி ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திற்குட்பட்ட வனப் பகுதியில் 179 தமிழக தொழிலாளர்களை கைது செய்துள்ளது ஆந்திர வனத்துறை. கைது செய்தவர்களை அரை நிர்வாண நிலையில், பின்பக்கமாக கைகள் கட்டப்பட்ட நிலையில், தார்ப்பாய் போட்டு மூடி அடி மாடுகளைப் போல லாரிகளில் அடைத்து காஜூபேட்டை வனஅலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதை. இதே போல் கடந்த 2015 ஏப்ரலில் 20 தமிழர்களை என்கவுன்டர் செய்து கொன்றது ஆந்திர வனத்துறை. வரிசையாக கிடத்தி வைக்கப்பட்ட பழைய செம்மரக்கட்டைகள், தடம்புரளாமல் இருந்த காலணிகள், சிதறாமல் இருந்த ஆடைகள் சொன்னது திட்டமிட்ட போலி என்கவுன்டார் என.

கடத்தல்காரர்கள் வைத்துள்ள முகவர்கள் தமிழக மலை கிராமங்களுக்கு சென்று அதிக பணம் தருவதாக ஆசை காட்டி செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர். வெட்டப்பட்ட செம்மரங்கள் வனத்தை, மாநிலத்தை, துறைமுகத்தை, விமான நிலையத்தை கடந்து நேபாளம், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களை கடந்து பர்மா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் சீனாவிற்கும்… கொச்சின், சென்னை, விசாகப்பட்டிணம், குஜராத் துறைமுகங்களை கடந்து அரபு மற்றும் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு செம்மரங்கள் கடத்துவது அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடத்தல் மாபியாக்கள் இவர்களின் துணையில்லாமல் சாத்தியமில்லை.

ரெட்டி நாராயணன், மகேஷ் நாயுடு, கெங்கி ரெட்டி, விஜயானந்த் ரெட்டி, சங்கர் நாயுடு இவர்கள் ஆந்திராவிலுள்ள முக்கியமான செம்மர கடத்தல் புள்ளிகள். இவர்கள் அங்குள்ள பிரதான கட்சிகளான தெலுங்கு தேசம், YSRC, ஜெய் சமைக் ஆந்திரா கட்சிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் கெங்கி ரெட்டி, சந்திரபாபு நாயுடுவின் முன்னால் நண்பருங் கூட. இது தவிர அருகில் உள்ள மாநிலங்களின் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடத்தல் புள்ளிகளுக்கும் தொடர்புண்டு.

ஆந்திர அரசியல் கட்சிகளும், செம்மர கடத்தலும் :

ஆந்திரா உட்பட ஒன்பது மாநிலங்களில் செயல்பட்டு வந்த அக்ரிகோல்ட் நிதி நிறுவனம் மூடப்பட்டதால் அதில் பணம் போட்ட 33 லட்சம் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர். ஆந்திராவிலுள்ள இந்நிறுவனத்தின் சொத்துக்களை சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகவுள்ள புல்லாராவ் வாங்க முயல்கிறார் என YSR காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பிரச்சனையை எழுப்ப, உடனே சந்திரபாபு நாயுடு “ஆதாரம் இருந்தால் தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றதுடன் கூடுதலாக, “செம்மர விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்கிற பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது யாரையும் விடமாட்டேன், செம்மரம் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் சிறப்பு சட்டம் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்வேன்” என்றதும் YSR காங்கிரஸ், காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் அடங்கிவிட்டன.

காரணம் ஆந்திர அரசியலில் கோலோச்சும் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தொடங்கி, எதிர்கட்சியான YSR காங்கிரஸ் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைகளும் செம்மர கடத்தலில் ஈடுபடுகின்றனர். அதனால்தான் செம்மரம் பற்றி சந்திரபாபு நாயுடு பேசியதும், அக்ரிகோல்ட் நிதி நிறுவனம் பற்றி பேச எதிர்கட்சிகள் தயங்கின.

கடப்பா, நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் இந்த செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தேர்தல் நேரத்தில் நிதி அளிப்பவர்களாக இருக்கிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளின் சொந்தக்காரர்கள் பங்கெடுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் உதவுகிறார்கள். கடத்தல்காரர்கள் அரசியல் தொடர்புகளோடு செயல்படுகிறார்கள்.

இவர்கள் YSR காங்கிரஸ் அல்லது தெலுங்கு தேசம் கட்சியோடும், சமைக்யா ஆந்திரா கட்சியுடனும் இணைந்து செயல்படுவதாக ஜூன் 05, 2014 தேதி பேட்டி அளித்திருக்கிறார் சித்தூரின் உயர் காவல்துறை அதிகாரியான (SP) P.H.D ராமகிருஷ்ணா.

ஆந்திராவின் முக்கிய அரசியல்வாதிகளின் பலரின் மொத்த வருவாய் ஆதாரமும் நேரடி செம்மர கடத்தலாலும், அக்கடத்தலுக்கு மறைமுகமாக உடந்தையாக இருப்பதன் மூலமே வருகிறது.

புரோக்கர்கள் (முகவர்கள்) வலையில் சிக்கும் தமிழர்கள் :

போதிய மழை இல்லாததால் விவசாயம் மற்றும் பிற மலைவாழ் தொழில்களும் முடங்கி போனதால் பெரும்பாலானோர் அருகில் உள்ள நகரங்களுக்கு கட்டிட கூலி தொழிலாளர்களாக, கட்டிடத்திற்கு வண்ணம் அடிக்கும் வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். வேலையில்லாமல் வறுமையில் வாடுபவர்களையும், பண ஆசைக்கு இணங்குபவர்கள்தான் முகவர்களின் முதல் இலக்கு.

ஆந்திராவிலும், தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான முகவர்கள் செம்மர கடத்தல் தொழிலில் உள்ளனர். அவர்கள் வெளியே தெரியாதபடி தொழிலதிபர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். அவர்கள் நேரடியாக இறங்காமல் தங்களுக்கு கீழ் உள்ள புரோக்கர்கள் வழியே ஆள் பிடிக்கும் வேலை செய்கின்றனர்.

இப்படி அழைத்துச் செல்லப்படும் கூலித்தொழிலாளர்களுக்கு செம்மரத்தை 8 அடி, 10 அடி நீளத்திற்கு வெட்டி, செதுக்கி காட்டுக்குள்ளேயே சில கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வாகனங்கள் இருக்குமிடத்தில் செம்மர கட்டைகளை சேர்க்க வேண்டும்.

மொத்தம் 5 அடுக்கு முதல் 7 அடுக்கு கொண்ட இக்கடத்தல் தொழிலில், முதல் அடுக்கு செம்மரத்தை வெட்டி செதுக்கி வாகனம் உள்ள இடம் வரை பல்வேறு சங்கேத மொழிகளுடன் முன்னெச்சரிக்கையாக சேர்ப்பதுதான் மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் வேலை. அதை வாகனத்தில் ஏற்றி போக்குவரத்து செய்ய இரண்டாவது அடுக்கு குழு வேலை செய்யும். அதை தரை வழியாக, விமான நிலையம் மற்றும் துறைமுகம் வழியாக சென்று சர்வதேச கடத்தல்காரர்கள் வரை பல அடுக்குகளாக கைமாறும். இதில் காவல் மற்றும் வனத் துறையிடம் அகப்படுவது 1 முதல் 4 ஆம் கட்ட ஆட்கள் மட்டுமே. திமிங்கலமான சர்வதேச கடத்தல்காரர்கள் சிக்குவது கிடையாது.

செம்மர கடத்தலில் பெருமளவுக்கு பணம் விளையாடுகிறது. இதில் அரசியல் கலந்திருக்கிறது. 1 டன் செம்மரம் வெட்டினால் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கில் உள்ள தொழிலாளர்களுக்கு மொத்தமாக இரண்டு இலட்சம் வரைதான் செலவாகிறது. மரத்தை சர்வதேச சந்தையில் விற்பவர்கள், 3 தரமாக வகைப்படுத்தி 25 இலட்சம் முதல் 1.9 கோடிவரை (ஏறக்குறைய இரண்டு கோடி) இலாபம் பார்க்கின்றனர். பெருமளவு பணம் கொட்டுவதால் புதிது புதிதாக கடத்தல்காரர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். சில ஆயிரம் சம்பாதிக்கும் ஏழை கூலித் தொழிலாளர்கள் உயிரை விடுகின்றனர். சிறையில் சித்திரவாதையை எதிர் கொள்கின்றனர். பெரிய அளவில் இலாபம் பார்க்கிறவர்கள் சிக்குவதில்லை, சிக்கினாலும் ராஜமரியாதையுடன் வலம் வருகின்றனர்.

துபாயில் உள்ள பிரபல தொழிலதிபர் ஷாகுல்தான் இந்த தொழிலின் மூளை என கண்டறிந்துள்ளனர். இவருக்கு கீழ் உள்ள 5 பேர் கொண்ட சர்வதேச டீம்தான் பர்மா, சீனா, துபாய், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாட்டில் இருக்கின்றனர். இவர்களுக்கு கீழ் உள்ளவர்கள்தான் கெங்கிரெட்டி, சவுந்தரராஜன், லட்சுமணா, சண்முகம், மூசா, மஸ்தான் வாலி, மும்பையை சேர்ந்த அலிஅபுபக்கர், பாபி இப்ராகிம், ஆர் செல்வாராஜ், ரியாஸ்கான், அப்துல் அமீது, முகேஷ் பதனி, மணிஅண்ணன், நாகராஜன், மெட்ராஸ் சரவணன் மற்றும் சீனாவை சேர்ந்த யங்பிங், சென்யீ பியன். இவர்கள் எல்லாம் 2015 மற்றும் 2016-ல் கைது செய்யப்பட்டு மும்பை மற்றும் ஆந்திர சிறைகளில் உள்ளனர். ஆனாலும் செம்மர கடத்தல் கனகச்சிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சிக்கியவர்களை விட சிக்காமல் இருக்கும் பெரும் புள்ளிகள்தான்.

National Campaign for De-notified Tribe’s Human Rights (NCDNTHR) – ன் அறிக்கை :

நன்கு திட்டமிட்ட, கட்டமைக்கப்பட்ட செம்மர கடத்தல் தொழிலில் பெரும்பாலானோர் ஈடுபடுகின்றனர். ஆனால் கொள்ளை கூட்டத் தலைவன் யாரென்று தெரியாது. செம்மர கடத்தல் வலைப் பின்னல் மற்றும் செயல்பாடு என்பது ஒரு போருக்கு வகுக்கப்படும் போர் தந்திரத்திற்கு குறைவானதல்ல.

2014-ல் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட National Campaign for De-notified Tribe’s Human Rights (NCDNTHR) என்ற அமைப்பு, செம்மர கடத்தலுக்கு எதிரான ஆந்திர சிறப்பு படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட தமிழக பழங்குடி மக்களின் நிலையை அறிய உண்மை அறியும் குழுவை அமைத்து, செம்மரம் வெட்ட பயன்படுத்தப்படும் மக்களின் ஊர்களில் ஆய்வை மேற்கொண்டனர். இந்த உண்மை அறியும் குழுவில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த வழக்கறிஞர்கள், பழங்குடி தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த ஆய்வில் கடத்தல்காரர்கள் பெரும்பாலும் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டத்திலுள்ள ரெட்டி மற்றும் கம்மா நாயுடு சமூகத்தை சார்ந்த, அரசியல் தொடர்புடைய (தெலுங்கு தேசம், YSR காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்) பிரமுகர்களாக இருக்கிறார்கள் என தெரிவிக்கிறது.

உண்மை அறியும் குழுவிலிருந்த கடப்பாவை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயஸ்ரீ 2013-ல் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்ட வன அதிகாரிகள் மரணத்திற்கு பிறகே தமிழர்களின் தொடர்பு வெளி வர தொடங்கியதாக குறிப்பிடுகிறார். மேலும் வேலையின்மையால் வறுமையில் வாடும் ஏழை மக்கள்தான் குறைந்த கூலிக்கு ஆந்திர கடத்தல்காரர்கள், புரோக்கர்களின் இலக்கு எனவும், ஆந்திர பகுதியில் காவல் துறையின் கெடுபிடியால் அங்குள்ள கூலி தொழிலாளர்கள் வழக்கிற்கும் சேர்த்து அதிக கூலி கேட்பதால், தமிழக கூலி தொழிலாளர்களை புரோக்கர்கள் நாடுவதாகவும் பதிவு செய்கிறார்.

மேலும் இக்கடத்தல் நான்கு அடுக்குகள் கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் உள்ளவர்கள் மரங்களை வெட்டி, சீர் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு எடுத்து செல்பவர்களாகவும், இரண்டாம் இடத்திலுள்ளவர்கள் அதை ஏற்றி செல்பவர்களாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் மூன்றாவது அடுக்கில் உள்ளவர்களாகவும், நான்காவது அடுக்கிலுள்ளவர்கள் ஒட்டுமொத்த கடத்தலை இயக்கும் அரசியல் தொடர்புடைய கடத்தல் தலைவனாக இருப்பதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவதாக உள்ள பெரும்புள்ளி நேரடியாக இயங்காமல் புரோக்கர்கள் மூலம் மற்றவர்களை இயக்கும் சக்தியாக உள்ளார்.

செம்மரம் இருக்குமிடத்தில் அருகே உள்ள வனகிராம மக்கள் முதல் அடுக்கில் உள்ளவர்களுக்கு வழி காட்டுதல், உணவு மற்றும் தண்ணீர் வழங்குதல் என உதவுகிறார்கள்.

இரண்டாவது அடுக்கில் செம்மரம் கடத்தும் வாகனங்களுக்கு, காவல்துறை மற்றும் வனத்துறையில் உள்ள அதிகாரிகள் சிலர் கடத்தல்காரர்களோடு செய்துள்ள ஒப்பந்தப்படி, இரண்டு வாகனத்தில் 1 டன் அளவு செம்மரங்கள் பிரதான சாலையில் பிடிபடுவது போலவும், எட்டு வாகனத்திலுள்ள 10 டன் அளவுள்ள செம்மரங்கள் கடத்தல்காரர்களின் குறிப்பிட்ட இலக்கை அடையவும் உதவுகின்றனர் எனவும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்!

செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்!

கொள்ளைக் கூட்டத் தலைவர்களாக ரெட்டி, கம்மா நாயுடு பிரமுகர்கள் :

கடப்பா, சித்தூர் மாவட்டங்களை சேர்ந்த ரெட்டி மற்றும் நாயுடு சமூகத்தை சேர்ந்த செம்மர கடத்தல்காரர்கள் பலர் ஒப்பந்ததாரர்களாக தொடங்கி, குறுகிய காலத்தில் சாராய வியாபாரிகளாகவும், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களாகவும் அரசியல்வாதிகளின் துணையோடு கடந்த 10 ஆண்டுகளில் பெரும் செல்வந்தர்களாக உயர்ந்துள்ளதாக அவ்வறிக்கை சுட்டி காட்டுகிறது.

ஆந்திர அரசியலில் அதிகார போட்டி ரெட்டி, நாயுடு சமூகங்களுக்கு இடையே உள்ளது. இந்த இரு சமூக அரசியல் புள்ளிகள்தான் முக்கிய செம்மர கடத்தல் மன்னர்களாக உள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் யாராவது ஒரு செம்மர கும்பலின் கட்டுப்பாட்டில் தான் ஆந்திர ஆட்சியே இருக்கும். ஏனென்றால் செம்மர கடத்தல்காரர்கள் பொது தேர்தலின் போது அங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு நிதி அளிக்கின்றனர்.

செம்மர கடத்தல் பணப் பரிமாற்றத்தில் பெண்கள் – விமான பணிப்பெண் சங்கீதா சாட்டர்ஜி :

சென்னை பர்மா காலனியை சேர்ந்த லட்சுமணன் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு பொருட்களை கடத்துவதில் கில்லி. 2010-ல் செம்மர கடத்தல் தொழிலுக்கு வந்தவன் 2014-ல் கைதானபோது 32 செம்மர கடத்தல் வழக்கு போடப்பட்டது. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 2015-ல் வெளியே வந்தவன் இரண்டு மாதத்திலேயே கைது செய்யப்பட்டு கடப்பா சிறையில் அடைக்கப்பட்டான். ஆனாலும் இவனது டீம் கடத்தல் தொழிலை கனகச்சிதமாக செய்து கொண்டிருந்தது. இவனுடைய டீமில் இருந்த ஒருவனை காவல்துறை பிடித்து விசாரித்த போதுதான் விமான பணிப்பெண் சங்கீதா சாட்டர்ஜி பற்றி தெரிய வருகிறது.

சென்னை மும்பை கொல்கத்தா என விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது அறிமுகமாகி நெருக்கமான சங்கீதாவை தொழில் பார்ட்னராக்கி பண பறிமாற்றத்தை நடத்தியுள்ளான். சங்கீதாவின் வங்கி கணக்கு லாக்கர் போன்றவற்றை 2016 ஜனவரியில் சோதனை செய்த போது 30 கோடிக்கு பண பரிமாற்றம் நடைப்பெற்றதை கண்டறிந்து கைது செய்ய முயன்ற போது, அவருக்காக 30 வழக்கறிஞர்கள் கொல்கத்தா மாநகர நீதிமன்றத்திற்கு வந்து முன் ஜாமின் வாங்கினர். சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் 2016 மே மாதம் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறபிக்க, சித்தூர் ASP கிரிதர் தலைமையில் மார்ச் 29-ஆம் தேதி கொல்கத்தா சென்று கைது செய்தது. வீடு, வங்கி லாக்கரில் சோதனை செய்த போது 6 கிலோ தங்கம், 1 கிலோ வெள்ளி, லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. சித்தூரில் பிரபல தொழிலதிபராக உள்ளவரின் வலதுகரம் “புல்லட்” ரமேஷ் மூலம் நாகாலாந்தில் வாங்கியதாக சங்கீதா கூறியதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நகர போலிஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்தே ஆந்திர தனிப்படை காவல் துறையினருக்கு நெருக்கடி வரும் அளவுக்கு அதிகாரிகள் மட்டத்தில் சங்கீதா சாட்டர்ஜிக்கு செல்வாக்கு இருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

தெலுங்கு நடிகை நீது அகர்வால் :

சாதாரண எலுமிச்சை வியாபாரியாக இருந்த மஸ்தான் வாலி செம்மர கடத்தல் மூலம் வளர்ச்சி பெற்று சினிமா தயாரிப்பாளராகவும், YSR காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். தான் தயாரித்த “பிரேம பிரயாணம்” என்ற திரைப்படத்தில் நடித்த நீது அகர்வாலுடன் பழக்கம் அதிகரிக்கவே இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்தினர். செம்மர கடத்தலில் கிடைத்த பணத்தை மஸ்தான் வாலி, நீது அகர்வாலின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளார்.

சங்கர் நாயக் மற்றும் பாலு நாயுடு என்ற கடத்தல்காரர்களுக்கு இவரது வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்ததாக நீது அகர்வால் 2016-ல் கைது செய்யப்பட்டுள்ளார். 34 டன் செம்மரம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக IPC மற்றும் வனத்துறை சட்டத்தின் படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மஸ்தான் வாலியும் கைது செய்யப்பட்டு கடப்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கரகாட்டக்காரி காட்பாடி மோகனாம்பாள் :

செம்மரம் வெட்ட தொழிலாளர்களை அனுப்பியதாகவும், பணப்பரிமாற்றம் செய்ததாக இவரது வீட்டில் சோதனை செய்ததில் 4 கோடி பணமும், 73 சவரன் தங்க நகைகளும், 8.5 கோடி மதிப்பிலான அடமான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆந்திர DSP ராமகிருஷ்ணய்யா :

2016-ல் சேசாச்சலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பலுடன் ஆந்திர காவல்துறையினர் தொடர்பு வைத்துள்ளதாக புகார் வந்ததை தொடர்ந்து, கடப்பா மாவட்டத்தில் சில SI க்கள் உட்பட 31 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடப்பா மாவட்டம் மைதுகூரு DSP ராமகிருஷ்ணய்யா-விற்கு செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, ஆந்திர மாநில DGP சாம்பசிவராவ் கடப்பா மாவட்ட SP ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவிட, விசாரணையில் செம்மர கடத்தல்காரர்களுக்கு உதவியதையும், லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தீர்ப்புக்கு முன்பே தண்டனை (போலி என்கவுன்ட்டர்) :

கடந்த 15-12-2013 அன்று திருப்பதி அருகே பெத்தகேளுபண்டலு என்ற இடத்தில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்வர்களை பிடிக்கச் சென்ற ஆந்திர பாரஸ்ட் ரேஞ்சர்கள் டேவிட் கருணாகர் மற்றும் என்.ஆர். ஸ்ரீதர் ஆகிய இருவா் கடத்தல்காரர்களால் கற்களால் அடித்தே கொல்லப்பட்டார்கள்.

இது தொடர்பாக 450 பேர்கள் மீது வழக்கு பதிந்த ஆந்திர போலீஸார் 359 பேர்களை கைது செய்தனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் 50 பேர்களும், கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும் 15 பேர் தவிர மற்ற அனைவரும் தமிழர்கள் என்பது வேதனையான விஷயம்.

அதில் 4 சிறார்களும் (Juvenile Accused) அடங்குவாா்கள். வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கைதான தமிழர்களில் 6 பேர் சிறையிலேயே தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்பது மற்றொரு சோகம்.

அதே சமயம் ஆந்திராவைச் சேர்ந்த 50 பேர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே சுதந்திரமாக வெளியே வந்த நிலையில் மற்ற தமிழர்கள் அனைவரும் இன்னும் சிறையிலேயே சிரமப்பட்டுக் கொண்டு வழக்கு விசாரணையை சந்திக்கின்றனர்.

சிறப்பு நீதிமன்றம் :

சுமார் 359 பேர்கள் மீதான வழக்கு நடத்துவதற்கு நீதிமன்றத்தில் இடம் பற்றாகுறை என்பதால் திருப்பதி வெங்கடேஷ்வரா கல்லூரியில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அங்கு விசாரணை நடைப்பெற்று வந்தது. வழக்கில் ஆந்திர அரசு தரப்பு விசாரணை முடிந்து நாள் ஒன்றுக்கு 10 பேர்கள் வீதம் குற்றவாளிகளிடம் கேட்கப்படும் பிரிவு 313 CrPC கேள்வி கேட்கப்பட்டு வந்தது.

இவ்வழக்கில் தமிழர்களுக்கு எப்படியாவது தண்டனை வழங்க வேண்டும் என்றிருந்த நிலையில் வழக்கில் விசாரிக்கப்பட்ட ஆந்திர அரசு தரப்பு சாட்சிகள் யாரும் குற்றவாளிகளை அடையாளம் காட்ட இயலாத நிலையில் தமிழர்கள் வழக்கிலிருந்து விடுதலையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் தப்பிவிடுகிறார்களே என்ற கோபம் ஆந்திர காவல் மற்றும் வனத்துறையினரின் ஆழ்மனதில் இருந்த நிலையில்தான் திருப்பதியில் ஆந்திர காவல் மற்றும் வனத் துறையினர் 2015 ஏப்ரல் 6-ஆம் தேதி காட்டுமிராண்த்தனமான 20 தமிழர்களை சுட்டு போலி நாடகத்தை அரங்கேற்றினர்.

20 பேர் கொல்லப்பட்ட வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அதிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவும், தமிழர்களை மோசமானவர்களாக காட்டவே செம்மரம் வெட்ட வாந்ததாக தொடர்ந்து தமிழர்களை கைது செய்வதை, சித்திரவதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் ஆந்திர அதிகாரிகள்.

தேசிய மனித உரிமை ஆணையம், ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேருக்கும் 5 ஏக்கர் நிலமும், 25 இலட்சம் நிதியும் தரவேண்டுமென அறிவித்தது. தமிழக அரசோ அதனை ஆந்திர அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு ஆந்திர அரசு தடை பெற்றுள்ளது. அதை நீக்கத் தமிழக அரசோ, தேசிய மனித உரிமை ஆணையமோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்.

இதே பின்னணியில் கடந்த 29 மே மாதம் 2014இல் முன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் திருவண்ணாமலையின் போருர் தாலுகாவினைச் சேர்ந்த தனியார் ஆட்டமூர் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மட்டுமல்லாது கூலிகளாகப் பணி செய்த வாராதி எனும் தமிழர் 2011 ஆண்டிலும், முருகன், சம்பரியன் மணி 2012இலும் ஆந்திர அரசினால் கொலை செய்யப்பட்டனர்.

ஆந்திர அரசின் நரித்தனம் :

செம்மரம் வெட்டி கடத்த வந்ததாக கூறி கைது செய்பவர்கள் மீது FIR போடும் போது, இந்திய தண்டனை சட்டம் 307-ஐயும் போட்டு கொலை முயற்சி என்ற குற்றத்தையும் சேர்த்து விடுவார்கள். ஏனென்றால் செம்மர கடத்தல் திருட்டு வழக்கின் கீழ் வரும். அதற்கு உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடும். கொலை முயற்சி என்ற பிரிவையும் சேர்த்தால், அதற்கு உடனடியாக ஜாமீன் கிடைக்காது.

கைப்பற்றப்பட்ட செம்மரங்கள் :

உதாரணத்திற்கு 2013-14-ஆம் ஆண்டுகளில் மராட்டியத்தில் 151.23 டன்னும், குஜராத்தில் 108.47 டன்னும், தமிழ்நாட்டில் 42.32 டன்னும், மேற்குவங்கத்தில் 32.92 டன்னும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதவிர கர்நாடகா, கேரளா, நேபாள எல்லை, வடகிழக்கு மாநிலங்களிலும் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது செம்மர கடத்தலின் சர்வதேச வலைப்பின்னல் வலிமையோடு எப்படி செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

போலி என்கவுன்ட்டர்க்கு எதிரான மனிதஉரிமை அமைப்புகளின் குரல்கள் :

  • இது திட்டமிட்ட படுகொலை. இத்தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து காவலர்கள் மீதும் IPC Sec 302-ன் படி கொலை வழக்காக FIR பதிவு செய்யப்பட வேண்டும் – சிலகா சுதாகர் (General Secretary, APCLC)
  • இது கொடூரமான படுகொலை. இதில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் – S ஜீவன்குமார் (President, Human Rights Forum)
  • இத்தாக்குதல் தொடர்பாக சுதந்திரமான விசாரணை செய்யப்பட வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக இப்படுகொலை நிகழ்ந்திருந்தால் உரியவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படவேண்டும் – Amnesty International
  • இது மனிதஉரிமை மீதான கொடூர வான்முறை, அரசு இது பற்றி விரிவான அறிக்கையை அளிக்கவேண்டும் – NHRC
  • ஆனால் தமிழக அரசோ சிபிஐ விசாரனை கோராமல், வெள்ளை அறிக்கை கோராமல், மென்மையான குரலில் “நம்பத்தகுந்த விரைவான விசாரனைக்கு உத்தரவிடவேண்டும்” என முடித்து கொண்டது துரதிஷ்டமே.

தேசிய வனங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கொல்லப்படுவதும், சித்திரவதைக்குள்ளாவதும் தமிழக ஏழை எளிய பழங்குடி கூலி தொழிலாளர்கள் மட்டுமே.

ராஜமுந்திரி சிறையில் 200 பேரும், சித்தூர் சிறையில் 150 பேரும், கடப்பா சிறையில் 900 பேரும், நெல்லூர் சிறையில் 250 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பல்வேறு சிறைகளில் சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளனர். இவையெல்லாம் வெளியில் தெரிந்தவை மட்டுமே. தெரியாத பாதாள உலகின் இரசியங்கள் எவ்வளவோ!

தமிழர்கள் மட்டுமே செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதைப் போலவும், இரு மாநில பிரச்சனையாகவும் ஒரு பிம்பம் வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பிம்பத்தை உடைக்கவும், தமிழக தொழிலாளர்களை காப்பாற்ற உறுதி எடுப்போம்.

  • – கி. முத்தமிழ்வேந்தன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: