தபால்துறை தேர்வில் மீண்டும் தமிழ்; அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!

தபால்துறை தேர்வில் மீண்டும் தமிழ்; அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி.க்கள் கொடுத்த நெருக்கடியால், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ‘தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இத்தேர்வு நடத்தப்படும்,’ என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை குறித்த சர்ச்சையின் சூடு தணிவதற்குள், தபால் துறை பணிகளுக்கான போட்டித் தேர்வில் தமிழ் மொழி திடீரென நீக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைத் தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க எழுப்பியதைத் தொடர்ந்து, ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தமிழகத்தில் ரயில்வே, தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில்
திணிக்கப்படுவதாகவும் இதனால் தமிழக மக்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் பல்வேறு சமூக அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்ற சூழலில், தபால்துறை பணிகளுக்கான தேர்வும் சர்ச்சையானது.

இந்திய தபால் துறை சார்பில் தபால்காரர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த 14ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. வழக்கமாக இத்தேர்வுகள், அந்தந்த மாநில மொழிகள், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் நடத்தப்படும். ஆனால், இம்முறை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்வித்தாள் இருக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக, தமிழ் உட்பட மாநில மொழியில் படித்த மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. தமிழ் மொழியை புறக்கணித்த மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிட தடை விதித்தது. கடும் எதிர்ப்புக்கிடையே, இத்தேர்வு கடந்த 14-ம் தேதி நாடு முழுவதும் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடந்து முடிந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பிராந்திய மொழியில் நடத்தப்படாத தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திமுக, அதிமுக கட்சி எம்பி.க்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், மாநிலங்களவை கூடியதும் எம்பி.க்கள் மீண்டும் இவ்விவகாரத்தை கிளப்பினர். ‘தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்,’ என முழக்கமிட்டனர். அவர்களுடன் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.

அவைத் தலைவரும், துணைத் தலைவரும் சமாதானப்படுத்த முயன்றும், தமிழக எம்பி.க்கள் தொடர்ந்து அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது, ‘மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை (இன்று) விளக்கம் அளிப்பார்,’ என துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உறுதி அளித்தும் ஏற்கவில்லை. இதன் காரணமாக, பிற்பகல் 2.30 மணி வரை 3 முறை அடுத்தடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், அவைக்கு வந்த மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த 14ம் தேதி நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அவர் கூறுகையில், ‘‘இத்தகவலை தெரிவிக்க தாமதமானதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழியிலும் மீண்டும் தேர்வு நடத்தப்படும். இந்த அரசு தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கிறது,’’ என்றார். அமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்ற தமிழக எம்பி.க்கள், அவருக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>