சட்டவிதிகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள நிர்வாக அதிகாரியை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, சங்கத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
1950-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கமானது தமிழ் மொழி, தமிழ்க் கலை – பண்பாடு ஆகியவற்றை வளர்த்தல், தமிழர் – கன்னடர் நல்லுறவை வளர்த்தல் ஆகியவற்றை குறிக்கோள்களாக கொண்டு செயல்படுகிறது. சாதி, மத, அரசியல் கட்சி வேறுபாடுகளின்றி, சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர்களின் உரிமைகளை பேணும் அமைப்பாகும் இயங்கி வருகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இந்த நிலையில், சங்கத்தில் சில சட்ட விதிமீறல்கள் இருப்பதாக கூறி கூட்டுறவு துறை மாவட்ட பதிவு அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 2018-2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்சங்க ஆட்சிமன்ற, செயற்குழு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சங்கத்தின் ஆட்சிமன்ற, செயற்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால், அரசு சார்பில் சங்கத்தை நிர்வகிக்க நிர்வாக அதிகாரியை நியமிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், சங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்க நிர்வாக அதிகாரியை நியமிக்க பரிந்துரைத்து கூட்டுறவு துறை முதன்மைச் செயலருக்கு பிப். 4-ஆம் தேதி பரிந்துரைத்திருந்தார். இதை ஏற்றுக்கொண்டுள்ள கர்நாடக அரசு, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நிர்வாக அதிகாரியை நியமித்ததன் மூலம் கர்நாடக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இது தொடர்பான ஆணையை மார்ச் 14-ஆம் தேதி கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த ஆணையில் கூறியிருப்பதாவது:-
பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சங்கத்தின் ஆட்சிமன்றக் குழுவின் பதவிக்காலம் 2018-இல் நிறைவடைந்த பிறகும், சட்டவிரோதமாக பதவியில் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ஆட்சிமன்றத்தின் கண்காணிப்பில் தேர்தலை பாரபட்சமில்லாமல், நடுநிலையாக நடத்துவது சாத்தியமில்லாதது. அதனால், சங்கத்தில் நிலவும் குறைகளைக் களைந்து, விதிமுறைகளின்படி தேர்தலை நடத்த நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரியாக இருக்கும் என்பதை சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
இதன்படி, கர்நாடக சங்கங்கள் பதிவுச்சட்டம், 1960-இன் படி, 27-ஆவது பிரிவுபடி பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு கூட்டுறவு சங்கங்களின் துணைக் கட்டுப்பாட்டாளர் மற்றும் மாவட்ட சங்கங்களின் பதிவு அதிகாரி ஆகியோரை ஆணை பிறப்பித்த நாளில் (மார்ச் 14) இருந்து அமலுக்கு வரும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
நிர்வாக அதிகாரிகள், உடனடியாக சங்கத்தின் நிர்வாகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சங்கத்தில் காணப்படும் எல்லா குறைகளையும் சங்க விதிமுறைகளின்படி சீர்செய்து, சங்கத்தின் ஆட்சிமன்றத்துக்கு குறிப்பிட்ட கால அவதிக்குள் தேர்தல் நடத்தி, புதிய ஆட்சிமன்றத்தின் அதிகாரத்தை ஒப்புடைத்துவிட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அரசு நியமித்துள்ள நிர்வாக அதிகாரிகள் சனிக்கிழமை பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு வருகை தந்தனர். ஆனால், சங்கத்தின் தற்போது ஆட்சிமன்றக் குழுவினர் யாரும் இல்லாததால் திரும்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, நிர்வாக அதிகாரிகள் திங்கள்கிழமை சங்கத்தை முறையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.