இந்த ஆண்டின் ‘சாகித்ய அகாடமி’ விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. எனினும், அவ்விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து ‘சாகித்ய அகாடமி’ சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘சாகித்ய அகாடமி’யின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில், அந்த அகாடமியின் நிர்வாக சபைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ் மொழிக்கான விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் ‘அன்னம்’ பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் இன்குலாப் பின் ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
கீழக்கரையில் பிறந்த இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது. வெள்ளை இருட்டு, சூரியனைச் சுமப்பவர்கள், ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் உட்பட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் இந்திரன், பா.ஜெயப்பிரகாசம், பொன்னீலன் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழு, தமிழ் மொழியில் விருதுக்குரிய நூலை தேர்வு செய்தது.
கவிஞர் இன்குலாப்-பின் மகனிடம் உலகத் தமிழர் பேரவை தொடர்பு கொண்டு, விருதை மறுப்பதற்கான காரணம் கேட்டது. அப்பொழுது:
அப்பா அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே அரசு விருதுகளில் நம்பிக்கையின்மையில் தான் இருந்து வந்துள்ளார். அரசிடமிருந்து போராளிகளுக்கு விசாரணையும், வழக்கும்தான் பரிசாக வருவதுண்டு. எனக்கும் அதையே எதிர்பார்த்திருக்கிறேன், என்று அடிக்கடி வீட்டில் உள்ளோரிடம் தெரிவித்து வந்துள்ளார் கவிஞர் இன்குலாப். ஒருவேளை இதுபோன்ற விருதுகள் கிடைத்தால் ஏற்க மாட்டேன் என அவர் வாழும்போதே எங்களிடம் சொல்லி வந்துள்ளார். இவ்விருதை மறுத்திருப்பதினால் எவ்வித வருத்தம் எமது குடும்பத்திற்கு ஏற்படவில்லை என்று உறுதியுடன் நமக்கு சொல்லி முடித்தார், கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிவரும், கவிஞர் இன்குலாப்- பின் மகன்.
கவிஞர் இன்குலாப் – பின் மகள் மருத்துவர் ஆமினா சொல்லும்போது, “எங்கள் அப்பா இத்தகைய விருதுகள் வரும் என எதிர்பார்த்ததில்லை. விருதுகள் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டதும் இல்லை” என்றார்.
தனது எழுத்துகளுக்கான விசாரணைகள், எதிர்ப்புக் குரல்கள், கண்டனங்கள் போன்றவற்றைதான் அவர் உண்மையான விருதாக கருதினார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘சாகித்ய அகாடமி’ விருதை ஏற்பதில்லை என அவரது எண்ணப்படியே குடும்பத்தினர் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
‘சாகித்ய அகாடமி’ விருது வழங்கும் விழா 2018, பிப். 12-ல் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. விருது பெறுபவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் மற்றும் செப்புப் பட்டயமும் வழங்கப்படும்.