செயற்கை கோள்களை குறைந்த செலவில் ஏவும், உலகளாவிய விண்வெளி மையமாக இந்தியா வேகமாக உருவாகி வருகிறது என ஒன்றிய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்சபை கூட்டமைப்பு (FICCI) நடத்திய, ‘இந்தியா முன்னிலை வகிக்கிறது-2021’ என்ற உச்சி மாநாட்டில் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு பேசியதாவது:
‘சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலம் அனுப்பியது, செயற்கை கோள்களை உருவாக்கியது, வெளிநாட்டு செயற்கை கோள்களை பல ஆண்டுகளாக ஏவியது ஆகியவற்றால் உலகளாவிய அங்கீகாரத்தை இந்தியா பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, விண்வெளித்துறை உலகளவில் லாபகரமான தொழில்துறையாக உருவாகி வருகிறது. நானோ, குறு மற்றும் சிறு செயற்கைகோள்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் சிறு செயற்கைகோள்களை ஏவும் ராக்கெட்டுகளுக்கான தேவைகள் போன்றவை விண்வெளிச் சந்தையை நன்கு இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளித் திட்டங்களை அமல்படுத்த, பல பொதுத்துறை மற்றும் தனியார் துறை தொழில் நிறுவனங்களுடன் வலுவான உறவை இஸ்ரோ ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் குழுவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், விண்வெளி திறன்களின் மேன்மையால், விண்வெளித்துறையில், இந்தியா அதிக அளவில் பங்களிப்பு செய்வது பெருமைக்குரியது. சந்திரயான், செவ்வாய் கிரகம் மற்றும் வரவிருக்கும் ககன்யன் ஆகியவற்றால் உலகம் இன்று ஈர்க்கப்பட்டுள்ளது.,’இவ்வாறு டாக்டர் ஜிதேந்திர சிங் பேசினார்.
நன்றி : தினகரன்