இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி டெல்லியில் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சே, இலங்கையில் இருக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முயற்சிகளை எடுப்போம் எனத் தெரிவித்தார்.
3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கோட்டாபய ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை இருவரும் கூட்டாக சந்தித்தபோது மோதி இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையை வலுவாக கட்டியெழுப்பும் கடமை உங்களுக்கு (கோட்டாபய ராஜபக்சேவுக்கு) வழங்கப்பட்டுள்ளது. வலுவான இலங்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்கே நன்மைபயக்கும். இலங்கையில் தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றை நிலைநாட்ட இலங்கை அரசு நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன், இந்த நல்லணக்க வழிமுறையில் 13ம் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் அடங்குகிறது, என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
வியாழக்கிழமை மாலை இந்திய தலைநகர் டெல்லி வந்தடைந்த கோட்டாபய ராஜபக்சே, நவம்பர் 30ம் நாள் வரை 3 நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். நேற்று மாலை இந்தியா வந்தடைய கோட்டாபயவை மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் வரவேற்றார். இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கோட்டாபய மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் இது.
இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அப்போது, பல்லாயிரம் தமிழர்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு என்பது குறிப்பிடதக்கது.