கூகுள் CEO சுந்தர் பிச்சை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், மாணவர்களுடன் கல்லூரியில் உள்ள தாகூர் வெட்டவெளி அரங்கில் இன்று கலந்துரையாடினார். அவர் படித்த கல்லூரி என்பதால் 3,500 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உற்சாகம் பொங்க உரையாடினார்.
‘என் கல்லூரி காலங்களில் வகுப்பை மட்டம் அடிப்பேன். அதே சமயம் படிப்பில் அதிக கவனம் செலுத்துவேன். எனக்கு இந்தி சரியாக தெரியாது. நான் சென்னையில் இருந்து வந்தவன் என்பதால் கல்லூரியில் படித்த போது பிறர் ஹிந்தியில் பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வேகம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அனைத்து இந்திய மொழிகளிலும் கூகுள் இயங்க வழிவகை செய்யப்படும். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு கூகுள் நிறுவனம் பேராதரவளிக்கும்’ என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்தார்.