தமிழ் மொழிக்கான தேவையை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம். அண்மையில் கூட `ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும்’ எனச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. பின் வாபஸ் பெறப்பட்டது. மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் தமிழகம் கொந்தளித்தது. `இந்தி எதிர்ப்புக்கு’ எதிராகவும் தமிழ் மொழியின் அவசியத்தையும் பறைசாற்றும் மாநிலங்களில் முக்கியமானது தமிழகம்.
அந்த வகையில், 2018 ம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பாளர் குளச்சல் முகமது யூசுஃப்க்கு வழங்கப்பட்டது. வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் 14-6-2019 அன்று இந்நிகழ்வு நடை பெற்றது. விருதுகளை சாகித்ய அகாடமி தலைவர் வழங்கினார். இந்த விருதை பெற்றுக்கொண்ட குளச்சல் யூசுஃப், `விருதில் பொறிக்கப்பட்ட இந்தி எழுத்துகளை மாற்றி தமிழில் வழங்கும்படி’ கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது : `13-ம் தேதி திரிபுரா சென்றேன். 14 அன்று எனக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 15-ம் தேதி அவரவர்களின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் மற்றும் படைப்பனுபவங்கள் குறித்து கட்டுரை எழுதச் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து கவி அரங்கம் நடைபெற்றது. இந்தக் கவி அரங்கத்துக்கு தமிழகத்திலிருந்து, கவிஞர் சல்மாவும் வந்திருந்தார். விருது கொடுக்கப்பட்டதும் அதைப்பார்த்தேன். அதில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த விருதை என் வீட்டில் வைத்துக் கொண்டேன் என்றால், எனக்கும் இந்தி தெரியாது. என் குடும்பத்தில் யாருக்கும் இந்தி தெரியாது. என் நண்பர்களுக்கும் இந்தி தெரியாது. இந்தியில் எழுத்துகளைப் பார்த்ததும், எனக்கு இந்தி தெரியாது தமிழில் பொறித்துக் கொடுக்க வேண்டும் என்று பொறுப்பாளர்களிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டு, `கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றலாம். பிரச்னை இல்லை. நீங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள், நாங்கள் அதைப் பரிசீலனை செய்து உங்கள் விருதை தமிழில் மாற்றித்தருகிறோம்’ என்றனர். தொடர்ந்து ஏற்கெனவே விருது வாங்கியவர்களிடம், `உங்களுடைய விருதுகள் இந்தியில் இருக்கிறதா? இல்லை ஆங்கிலத்திலா?’ என்று கேட்டேன். அவர்கள், `எங்களுக்கு இந்தியில்தான் இருக்கிறது’ என்றனர்.
தமிழில் மாற்றித் தர வேண்டும் என்ற என் கோரிக்கையை மின்னஞ்சல் மூலம் அனுப்ப இருக்கிறேன். தாய்மொழி என்பது நம் தொடர்பு மொழியல்லவா. அது முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் விருதை கொடுத்திருக்கலாம். அப்படியில்லாமல் தமிழ் மொழிபேசுபவர்களுக்கு இந்தியில் எழுதபட்ட விருதை கொடுத்தால் எப்படி. தமிழில் வாங்கப்பட்ட விருதாக இருந்தால், அது வீட்டில் வைத்திருக்கும்போது, வருபவர்கள் பார்த்துப் படித்து தெரிந்துகொள்வார்கள். இந்தி எழுத்துகள் இருக்கும்போது, அது எனக்கே படிக்க முடியவில்லை. மற்றவர்கள் எப்படி படிப்பார்கள். விருதுக்கான மதிப்பு என்பது, மற்றவர்களிடம் பெருமையாகக் காட்டுவதில் தானே இருக்கிறது. என் பெயரை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஃபேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்ட பின், இதுதான் உங்கள் பெயர் என்று ஒருவர் கூறுகிறார். அப்போ விருது வாங்கியவர்களாலே அந்தப் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால்அப்பறம் என்ன பயன்?.
வடமாநிலத்தில் இலக்கிய அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, பின்னர் விருது கொடுத்தால், அவர்கள் தாய்மொழியில் கொடுக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும். ஆனால், அரசு கொடுக்கும் விருதில் நமக்கு தெரியாத மொழியில் கொடுப்பதை எப்படி ஏற்க முடியும். உலகத்தில் முக்கியமான மொழி தமிழ். அதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். அந்த மொழியில் எதற்கு ஓர வஞ்சனை. முந்தைய காலத்தில், எழுத்து தெரிந்தவர்களை வைத்து செதுக்க வேண்டும். ஆனால், இப்போது கம்ப்யூட்டரில் டிசைன் செய்கின்றனர். அதை ஆங்கிலத்தில் செய்யலாம் இந்தியில் செய்யலாம் தானே? வருபவர்களிடம் வெறும் சாகித்ய அகாடமி விருது என மட்டும் கூறிக்கொள்ளவேண்டியதுதான். அங்கிருந்த யாருமே இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. தாய்மொழி மீது பற்றுக்கொண்டுள்ள காஷ்மீரிகள்கூட இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. தமிழில் எழுத்துகளைப் பதித்து கொடுக்கவேண்டும் என்ற என் கோரிக்கையை அவர்கள் பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார்கள் பார்ப்போம்!” என்றார்.