‘கிராஸ் கன்ட்ரி’ மினி மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவன்!

‘கிராஸ் கன்ட்ரி' மினி மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவன்!

‘கிராஸ் கன்ட்ரி’ மினி மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவன்!

கோவையில் கட்டிடத் தொழிலாளியின் மகன் தேசிய அளவிலான `கிராஸ் கன்ட்ரி` மினி மாரத்தான் போட்டியில் வென்றுள்ளார். இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.சதீஷ்குமார் (18).

கோவை ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கலைப் பிரிவு படித்து வருகிறார் சதீஷ்குமார். பள்ளியிலும், ஊர் விழாக்களிலும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று வந்த சதீஷ்குமார், அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், இந்திய தடகள சம்மேளனம் நடத்திய 53-வது ‘நேஷனல் கிராஸ் கன்ட்ரி’ போட்டியில் 6 கிலோ மீட்டர் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதித்துக் காட்டியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து 16 பேர் பங்கேற்றதில், இவர் ஒருவர் மட்டுமே பதக்கம், அதுவும் தங்கப் பதக்கம் வென்றது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்த 25, 26-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 2-வது மாநில இளையோர் தடகளப் போட்டியில் 5,000 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், 2018 நவம்பரில் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர் போட்டியில் 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம், நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி தடகளப் போட்டியில் 5,000 மீட்டர், 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம், சென்னையில் நடைபெற்ற மாநில ஜூனியர் தடகளப் போட்டியில் 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், நெல்லையில் நடைபெற்ற மாநில சீனியர் தடகளப் போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி என பதக்கங்களைக் குவித்துள்ளார்.

இதுகுறித்து சதீஷ்குமார் கூறியதாவது: “என்னுடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் பயிற்சியாளர் வைரவநாதன். எனது திறமையைக் கண்டுபிடித்து வெளிக்கொணரச் செய்தவர். இதுவரை எனக்கான அனைத்து செலவுகளையும் அவர்தான் கவனித்து வருகிறார். என்னுடைய பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் தாமஸ், உடற்கல்வி ஆசிரியர் அபிபுர் ரஹ்மான் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக உள்ளனர். `நேஷனல் கிராஸ் கன்ட்ரி` போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், டென்மார்க்கில் நடைபெறும் `வேர்ல்டு கிராஸ் கன்ட்ரி` போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அந்தப் போட்டியிலும் தங்கம் வென்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன். அதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இத்துடன், படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறேன்” எனக் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>