வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்!

வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்!

வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்!

அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்கு நேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்ல முடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.

“கட்டபொம்மு நாயக்கர் பிடிபடுவதிலும், அவரது மந்திரியான சுப்ரமணியபிள்ளை பிடிபட்டதே நமக்கு வெற்றி” என்று வெள்ளையர்கள் மேலே நடந்த நிகழ்ச்சியை மேலிடத்திற்கு இப்படித்தான் தெரிவித்தார்கள். கட்டபொம்முவின் மந்திரியாக இருந்த தானாபதிப் பிள்ளைதான் அந்த இளைஞன். பெயர் சுப்ரமணிய பிள்ளை. தூக்கிலிட்டாலும் மீண்டும் எழுந்து வந்துவிடுவாரோ என்று பரங்கியரை அஞ்சி நடுங்க வைத்த இந்த சுத்த வீரரைத் தந்த சமூகம் `பிள்ளைமார்’ என்று அழைக்கும் வேளாளர் சமூகம்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம்.

கன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள வேளாளர்கள்தான் பெரும்பாலும் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், முசுகுந்தநாடு வெள்ளாளர், அரும்பு கோத்த வேளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

தென் தமிழகம்தான் இவர்களின் பூர்வீகம் என்றாலும் வேலை நிமித்தமாக இப்போது தமிழகம் முழுவதும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். எங்கு சென்று வாழ்ந்தாலும் `பிள்ளைமார்’ தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள்.

தொடக்கத்தில் பிள்ளை என்ற பட்டம் இவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இடைக்காலத்தில் பிற சமூகத்தினரும் கூட இப்பட்டத்தைப் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுடன் பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.

சேர, சோழ, பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்து வழி நடத்திச் சென்றவர்களாக இவர்களைச் சொல்வதுண்டு. மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவில் முடி எடுத்துக் கொடுக்கும் உரிமை இருந்ததாகக் கூறுவோரும் உண்டு.

பிள்ளைமார்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். என்றாலும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து விவசாயத் தொழில் செய்கின்றனர்.

அன்றைய பாண்டிய நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. தனது நாட்டில் மழையைப் பொழிவிக்காத மேகங்களைப் பிடித்து வந்து பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சிறையில் அடைத்து விட்டான். தேவர்கள் உட்பட அனைவரும் கார்முகில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இனிமேல் மேகங்கள் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்யும் என்று யாராவது ஒப்புதல் கொடுத்து பிணையக் கைதியாக இருந்தால் மட்டுமே மேகங்களை விடுவிப்பேன் என்றான் மன்னன். அப்போது வேளாளர் ஒருவர்தான் மேகங்களுக்குப் பதில் தான் சிறையில் இருப்பதாக வாக்குறுதி அளித்து மேகங்களை விடுவித்தாராம். இதனால் அவர்கள் கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டதாக செவிவழிக் கதை உண்டு. அந்தளவிற்கு பிறரின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக பிள்ளைமார் சமூகத்தார் இருந்திருக்கிறார்கள்.

வேளாளர்களில் ஒரு பிரிவினர் சைவப் பிள்ளைமார். இவர்கள் அதிகாலை சிவநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் விழிக்கிறார்கள். காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும் இறைவழிபாடு நடத்துவதை இவர்கள் மறப்பதே இல்லை.

இவர்களுக்கு பல குலதெய்வங்கள் இருக்கின்றன. பிள்ளைமார்களில் வைணவத்தைக் கடைப்பிடிப்போரும் இருக்கிறார்கள். நாமதாரி பிள்ளைமார்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். இப்போது சைவம், வைணவம் கடைப்பிடிப்போரிடையே திருமண உறவு வைத்துக் கொள்வதும் உண்டு.

திருச்செந்தூர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி, குற்றாலம் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது சைவப் பிள்ளைமார்களின் வழக்கம். அதேசமயம், வைணவத்தில் ஈடுபாடுடைய பிள்ளைமார்கள் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாங்குனேரி போன்ற நவ திருப்பதி ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது பிரசித்தம்.

இவர்களுள் கோட்டைப் பிள்ளைமார் நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடபகுதியில் உள்ளனர். இக்கோட்டைக்குள் இருக்கும் கல்வெட்டில் `பிள்ளைமார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வருவதே இல்லை. வெளி உலகம் என்னவென்றே தெரியாமல் இவர்கள் வாழ வேண்டிய சூழ்நிலை. கோட்டைக்குள் மற்ற எந்த சமூகத்தவரும் நுழையத் தடை விதித்திருந்தனர். ஒரு பெண் பூப்படைந்த பின்னர் உடன் பிறந்த சகோதரன், தந்தை, தாய்மாமன் தவிர மற்ற ஆண்களைப் பார்க்கக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கடுமையான விரதங்கள் இருந்து கணவன் காலமான சிறிது காலத்திற்குள்ளேயே உயிர் விடும் நிலை இருந்தது.

இன்று அவர்களின் நிலை என்ன?.

இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர். இந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது.

பொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.

திருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது.

முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவ முறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார்.

மாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்’ என்கின்றனர்.

திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம்.

மணப்பெண் வீட்டிலும், மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம்.

பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர்.

பெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்’ அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம். இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது.

விதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது.

கணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.

இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளைமார்களின் பங்கு மகத்தானது.

உறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் ஐயா வ.உ.சி.

நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்கு முறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார்.

நமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர். பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது.

அதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.

அன்றைய சென்னைப் பட்டினம் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடந்தது. திடீரென பொழிந்த வெடிகுண்டு மழையில் ஜனங்களைவிட வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அவர்கள் நடுக்கத்துடன் உச்சரித்த ஒரே பெயர்?

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை – ஏன்?

1914-ல் செப்டம்பர் மாதம் 22-ஆம் நாள் எம்டன் நீர்முழுகிக் கப்பலில் பயணித்து சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன். இந்தியாவை விட்டு வெள்ளையர்களை வெளியேற்ற, இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசீய தொண்டர் படையை (ஐ.என்.வி.) ஆரம்பித்தவர். அதன் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷார் கலக்கம் அடைந்தனர். சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ.வுக்கு முன்னோடி அது.

இப்படி தன்னலம் கருதாத வீரர்களை தாய்மண்ணின் விடுதலைக்கு அர்ப்பணித்ததன் விளைவு, பிள்ளைமார் சமூகத்தின் மேல் மற்ற சமூகத்தார்க்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கூடியது.

பழங்காலந்தொட்டே, “தம் சமூகத்தாரையும் தம்மை சுற்றியுள்ள பிற சமூகத்தாரையும் கல்வியும் பக்தியிலும் சிறந்து விளங்க வைக்க பிள்ளைமார் சமூகத்தார் எடுத்துக் கொண்ட முயற்சிகள்” போற்றப்பட வேண்டியவை.

பிள்ளைமார்களின் சமயப் பற்றுக்கும் அருள்நெறித் தொண்டிற்கும் சான்றாய் விளங்குவதுதான் பதினெட்டு சைவ ஆதீனங்கள். அவை சைவ சமய வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடுவையாக இல்லாமல், கல்வியையும் நீதிநெறிகளையும் மக்களுக்கு கற்றுத் தரும் மடங்களாக விளக்குவதுதான் அவற்றின் சிறப்பு. சைவ சித்தாந்த நூல்களை தமிழுக்குத் தந்தார்கள். அதன் மூலம் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதித்தார்கள்.

மனித சமூகம் வாழ வழிகாட்டிய வடலூர் வள்ளல் பெருமான் இச்சமூகத்தாரின் பெருமைகளை நிலை நாட்டியதில் முன்னவராய்த் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.

சைவத்தையும் தமிழையும் வளர்த்திடும் குறிக்கோளுடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஆரம்பித்ததன் மூலம் திருவரங்கம் பிள்ளையும் திரு. வ. சுப்பையா பிள்ளையும் வரலாற்றுச் சாதனை படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள்.

தமிழுக்கு இச்சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்பு விலை மதிக்க முடியாதது. மறைமலையடிகள், எம்.எஸ். பொன்னுலிங்கம், க.சு. பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அப்பாதுரை, சாத்தன்குளம் ராகவன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அகிலன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி., வண்ண நிலவன், ரா.சு. நல்லபெருமாள், வண்ணதாசன், நெல்லைக் கண்ணன்,சுகிசிவம், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் என்று மிகப் பெரிய வரலாற்றுப் பட்டியலைக் கொண்டது இச்சமூகம்.

சைவர்களாக இருந்த பலர் திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பங்குபெற்ற வரலாறும் உண்டு.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஏ.சி.பி. வீரபாகு, இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்த தியாகி எம்.சி. வீரபாகு, சுயமரியாதை இயக்கத்தில் பெரும் பங்காற்றிய சி.டி. நாயகம் என்று பலர் பாடுபட்டுள்ளனர்.

தோழர் ஜீவா போன்றவர்களால் இம்மன்ணில் கம்யூனிசக் கோட்பாடுகள் மலர்சி கண்ட வரலாற்றை மறக்க முடியாது. இன்று மேயர்கள், மந்திரிகள் என்று அரசியலில் வலம் வரும் இச்சமூகத்தாரின் எண்ணிக்கை அதிகம்.

சமயம், கல்வி, இலக்கியம், சமூகப்பணி, பதிப்புப் பணி, பத்திரிகை, வணிகம், அரசியல் என்று இச்சமூகத்தார் கால் பதிக்காத துறையே இல்லை.

“தமிழகத்தின் ‘பொற்காலம்’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாடுபடுவோர் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு. பக்தி இலக்கியங்கள் மட்டுமல்லாது பாமரர்களும் பயன்பெறும் வகையில் இலக்கியங்களை அடுத்த தளத்திற்கு இயங்க வைத்தவர்களில் பெரும்பாலோர் இச்சமூகத்தைச் சார்ந்தவர்களே” என்கிறார் சைவநெறி காந்தி.

தமிழ்நாடு சைவ வேளாளர் “தமிழகத்தின் தொன்மையான இனம், வேளாளர் இனம். சைவமும் தமிழும் வளர பெரும்பணி செய்து வருகிறார்கள்.

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அப்பரின் வாக்கிற்கும்,
“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற வள்ளலாரின் கொள்கைகளையும்
வ.உ.சி போன்றோரின் தேசபக்தியையும் கடைபிடித்து வருபவர்கள்.
நாம் நல்லவர்கள் நமக்கு அனைவரும் நல்லவர்களே என்ற அடிப்படையில் பணி செய்து வருபவர்கள்.”

இப்போது சில பிள்ளைமார் நட்சத்திரங்களைப் பார்ப்போம்.

எம்.சி.வீரபாகு : சுதந்திரப் போராட்ட தியாகி. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தவர். அரசியல் சட்ட ஒப்புமையில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்தவர். வ.உ.சி.க்குப் பின், அவரது பெயரில் கப்பல் கம்பெனியை நிறுவியவர்.

பரலி சு நெல்லையப்பர் : பாரதியாரின் உற்ற தோழர். அவரது நூல்கள் வெளிவர காரணமாக இருந்தவர். பாரதியாரின் இறுதிக்காலம் வரை உடன் இருந்த தேசத் தொண்டர்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை : உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இவரது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” பாடலைத்தான் வழிநெடுக முழக்கமிட்டார்கள்.

கி ஆ பெ விஸ்வநாதம் : தமிழர்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். ‘தமிழர் மாநாடு’ கூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழர்களைத் தட்டி எழுப்பியவர். ‘தமிழ் மருந்துகள், தமிழ்ச் செல்வம்’ உள்ளிட்ட 25 நூல்கள் எழுதியவர். 96 வயது வரை பெருவாழ்வு வாழ்ந்தவர்.

#பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம் : பொதுவுடைமை கருத்துக்கள் ஏழை எளிய மக்களை எளிதில் சென்றடையும்படி பாடல்களை எழுதியவர். குறுகிய காலத்தில் அவர் அடைந்த புகழ் திரையுலகில் யாரும் அடையாதது.

கணிதமேதை #எஸ்_எஸ்_பிள்ளை : உலகப் புகழ் பெற்ற கணித மேதை. 300 ஆண்டுகளாக விடை காணாத கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் வாரிங் என்பவரின் கணிதப் புதிருக்கு விடை கண்டு பிடித்தவர். 1950-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலக கணித விஞ்ஞானிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கச் சென்றபோது விமான விபத்தில் உயிர் நீத்தவர்.

பட்டுக்கோட்டை ஏ ஆர் மாரிமுத்து அவர்கள் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர். 6 தமிழக முதல்வர்களுடன் (காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா) நெருங்கிப்பழகிய முதுபெரும் அரசியல் சகாப்தம்.

அகிலன் : தமிழ் மொழிக்கு சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்தவர். இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீடவிருதை தமிழில் முதன் முதலாகப் பெற்று சரித்திரம் படைத்தவர்.

வல்லிக்கண்ணன் : தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர். ‘கிராம ஊழியன்’ ஆசிரியர். நாடகம், புதுக்கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு தளங்களில் தமிழை வளர்த்தவர்.

ஜெயகாந்தன் : நாவல், சிறுகதை உலகின் புரட்சி மன்னர். சிறந்த மேடைப் பேச்சாளர். யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதைத் துணிச்சலுடன் எழுதும் வல்லமை படைத்தவர். பல விருதுகளைப் பெற்ற இவரை ‘ஞானபீட விருது’ தேடிவந்து பெருமை கொண்டது.

திரு.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கலைவாணர் திரு என் எஸ் கிருஷ்ணன்

(இன்னும் நூற்றுக்கணக்கான அறிஞர்களை இச்சமூகம் தந்து வரலாறு படைத்துள்ளது).

மேலே சொன்ன பட்டியலில் விட்டு போனவர்களில் ஒருவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. “யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். ‘தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன?’ என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதை தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்தவர்” என அவரைப் பற்றி எழுதுகிறார், குன்றக்குடி பெரிய பெருமாள் என்பவர்.

உவேசா அவர்களது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை மடத்தின் ஆதரவில் இருந்தவர். அம்மடமும் அவரும் இல்லாவிட்டால், உவேசா அவர்களது தொண்டும் தமிழுக்கு கிடைக்காமல் போயிருக்கக் கூடும்.

இங்கு பதிவில் எழுதியுள்ள தகவல்கள் பல்வேறு தளங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. இவண்-நாகராஜராமன் முதலியாா்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: