உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் `தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர்.

காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையின் பார்வைக்கு எடுத்து வந்தவர் நம் `தமிழ்த் தாத்தா’ அவர்களே! கல்தோன்றும் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் மொழி, இன்றைக்கும் இளமை குன்றாமல் இருப்பதற்கு தமிழ் அறிஞர்களின் தமிழ் மொழி மீதான அர்ப்பணிப்புதான் முக்கியக் காரணம். தமிழுக்காகவே தன்னை வார்த்துக் கொண்ட அறிஞர் பெருமக்களில் தனித்து நிற்பவர் உ.வே.சா. தமிழின் தொன்மைக்கும் உண்மைக்கும் உ.வே.சா. அவர்களின் தீவிரமான தேடுதலில் விளைந்த படைப்புகளே ஆதாரங்கள். இன்றைய தமிழ்த் தலைமுறைப் பிள்ளைகளுக்கான பெரும் சொத்துக்களைத் தேடித்தந்த உ.வே.சா. அவரின் பிறந்த நாளான இன்று, அவரின் அந்த மகத்தான பணியின் சில அத்தியாயங்களைப் பார்ப்போம்.

தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும்போது, அதற்கு மதம் முக்கியமான காரணமாக இருப்பது தெரிகிறது. சமணக் காப்பியமாகிய `சீவக சிந்தாமணி’யைப் பதிப்பிக்கத் தொடங்கிய உ.வே.சாமிநாத ஐயர், அந்நூல் கதை உட்பட எதுவும் புரியாமல் குழம்பித் தவித்தார். அப்போது கும்பகோணத்தில் சமணர்கள் வசிக்கிறார்கள் என்பதை நண்பர் ஒருவர் மூலமாக அறிந்து, அவர்கள் தெருவுக்கு நண்பருடன் போனார். ஒரு வீட்டில் வாழை, தோரணம் எல்லாம் கட்டியிருப்பதைக் கண்டார். விசாரித்தபோது `சீவக சிந்தாமணி’ப் பாடமும் பாராயணமும் ஆறு மாதமாக நடந்துவருவதை அறிந்தார். அங்கிருந்த சமணர்கள் மூலமாகவே உ.வே.சா.வுக்கு அந்த நூல் பற்றிய தெளிவு பிறந்தது. `சீவக சிந்தாமணி’யை ஓர் இலக்கியமாக அல்லாமல், சமண மத நூலாகக் கருதியே அம்மதத்தினர் போற்றிப் பாராயணம் செய்துவந்தனர். அதன் காரணமாக அந்நூல் பாதுகாக்கப்பட்டது. மதக் கருத்துகளைச் செய்யுள் நடையில் பாடிவைத்த எத்தனையோ நூல்கள் இலக்கியச் சிறப்பில்லாமலும் கூடக் காலத்தைக் கடந்து வந்திருக்கின்றன; அவற்றை இன்றைக்கும் மடங்கள் உள்ளிட்ட மத நிறுவனங்கள் தொடர்ந்து அச்சிடுகின்றன.

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான சுவாரஸ்யமான கதை :

சேலம் இராமசுவாமி முதலியார் ;

“கல்லூரி வேலையைப் பார்த்துக் கொண்டும், வீட்டுக்கு வரும் மாணாக்கர்களுக்கு ஒழிந்த நேரங்களில் பாடம் சொல்லிக் கொண்டும் பொழுது போக்கி வந்தேன். அந்தச் சமயம் அரியலூரில் இருந்து கும்பகோணத்துக்கு முன்சீப்பாக சேலம் இராம சுவாமி முதலியார் என்பவர் மாற்றலாகி வந்தார். முதலியார் சேலத்தில் ஒரு பெரிய மிட்டா ஜமீன்தார் பரம்பரையினர். இளமையிலேயே பேரறிவு படைத்து விளங்கினார். தமிழிலும், சங்கீதத்திலும், வடமொழியிலும் பழக்கமுள்ளவர். கும்பகோணத்தில் வேலை பார்த்து வந்த காலத்தில் அவருடைய திறமை ஓரளவு வெளிப்பட்டு ஒளிர்ந்தமையால் அவரைத் தக்க கனவான்கள் சென்று பார்த்துப் பேசிவிட்டு வந்தார்கள்.

முதலியாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் முதலில் என்னிடம் இல்லை. ஆனால், ஆதீன மடத்தில் இருந்து சொல்லியனுப்பினமையின், ஒருநாள் புறப்பட்டேன். அன்று வியாழக்கிழமை (21-10-1880) அவர் இருந்த வீட்டை அடைந்து அவரைக் கண்டேன். நான் கல்லூரியில் இருப்பதையும் மடத்தில் படித்தவன் என்பதையும் சொன்னேன். அவர் யாரோ அயலாரிடம் பாராமுகமாகப் பேசுவது போலப் பேசினார். என்னோடு மிக்க விருப்பத்தோடு பேசுவதாகப் புலப்படவில்லை. `அதிகாரப் பதவியினால் இப்படி இருக்கிறார்; தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார்?’ என்று நான் எண்ணலானேன்.

`நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?’ என்று அவர் கேட்டார்.

`மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன்’ என்றேன்.

பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி உண்டாகும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய உத்தியோகத்துக்காக என்னை மதிக்காவிட்டாலும், பிள்ளையவர்கள் மாணாக்கன் என்ற முறையிலாவது என்னிடம் மனம் கலந்து பேசலாமே. அவர் அப்படிப் பேச முன்வரவில்லை. கணக்காகவே பேசினார்.

“என்ன பிரயோசனம்?”

`பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடைப் பெயர்ச்சியே இல்லாமலிருக்கும் இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது… எல்லாம் பொய்யாக இருக்கும்’ என்று நான் தீர்மானம் செய்துகொண்டேன்.

அவர் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. `என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வி அடுத்தபடி அவரிடம் இருந்து வந்தது. `இதற்கு நாம் பதில் சொல்லும் வகையில் இவரைப் பிரமிக்கும்படி செய்துவிடலாம்’ என்ற நிச்சய புத்தியோடு நான் படித்த புத்தகங்களின் வரிசையை ஒப்பிக்கலானேன்.

`குடந்தை யந்தாதி, மறைசை யந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை…’ என்று சொல்லிக்கொண்டே போனேன். அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழ்களில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள் இப்படியே பிரபந்தங்களை அடுக்கினேன். அவர் முகத்தில் கடுகளவு வியப்பு கூடத் தோன்றவில்லை.

`இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?’ என்று திடீரென அவர் இடைமறித்துக் கேட்டார். நான் மிக்க ஏமாற்றம் அடைந்தேன். `இவர் ஆங்கிலம் படித்து அதிலே மோகங்கொண்டவராக இருக்கலாம். அதனால்தான் இப்படிச் சொல்கிறார்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் நான் விடவில்லை. புராண வரிசையைத் தொடங்கினேன்.

`திருவிளையாடற் புராணம், திருநாகைக் காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், குற்றாலப் புராணம்…’

அவர் பழையபடியே கற்சிலைபோல இருந்தார்.

`நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞானசித்தியார் உரை…’ என்னும் நூல்களின் பெயர்களைச் சொன்னேன். இலக்கண நூல்களை எடுத்துக் கூறினேன். அப்போதும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. `அடடா! முக்கியமானவற்றை அல்லவா மறந்துவிட்டோம்? அதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவரை வழிக்குக் கொண்டு வந்திருக்கலாமே!’ என்ற உறுதியுடன், `கம்பராமாயணம் முழுவதும் இரண்டு, மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்களைப் பாடம் கேட்டிருக்கிறேன்’ என்றேன்.

இராமசுவாமி முதலியார், `சரி, அவ்வளவுதானே?’ என்று கேட்டார். எனக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. `கம்பராமாயணத்தில் கூடவா இவ்வளவு பாராமுகம்… இவ்வளவு அசட்டை!’ என்ற நினைவே அதற்குக் காரணம். அதற்கு மேலே சொல்ல என்ன இருக்கிறது? ஆனால், அவர் என்னை விடுகிறவராக இல்லை. மேலும் கேள்வி கேட்கலானார்.

`இந்தப் பிற்காலத்துப் புத்தகங்களெல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?’

எனக்கு அவர் எதைக் கருதிக் கேட்டார் என்று தெரியவில்லை. `பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையே நான் படித்திருப்பதாக இவர் எண்ணிக் கொண்டாரோ? கந்த புராணம், பெரிய புராணம் முதலியவைகளெல்லாம் பழைய நூல்களல்லவோ? கம்பராமாயணம் பழைய நூல்தானே? பழைய நூலென்று இவர் வேறு எதைக் கருதுகிறார்?’ என்று யோசிக்கலானேன். `நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே!’ என்றேன் நான்.

`அவற்றுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?’ என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.

`தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லையே?’ என்றேன்.

`சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?’

அவர் சொன்ன நூல்களை நான் படித்ததுஇல்லை; என்னுடைய ஆசிரியரே படித்தது இல்லை. புத்தகத்தைக் கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும், `இவ்வளவு புத்தகங்களைப் படித்ததாகச் சொன்னதைப் பொருட்படுத்தாமல், எவையோ இரண்டு, மூன்று நூல்களைப் படிக்கவில்லையென்பதைப் பிரமாதமாகச் சொல்ல வந்துவிட்டாரே!’ என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்துகொண்டது.

`புத்தகம் கிடைக்கவில்லை; கிடைத்தால் அவையும் படிக்கும் தைரியமுண்டு’ என்று கம்பீரமாகச் சொன்னேன்.

சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்த முதலியார், நிமிர்ந்து என்னை நன்றாகப் பார்த்தார். `நான் புத்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் சொல்வீர்களா?’ என்று கேட்டார்.

`அதிற் சிறிதும் சந்தேகமே இல்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்’ என்று தைரியமாகச் சொன்னேன். அறிவு பலத்தையும் கல்வி-கேள்விப் பலத்தையும் கொண்டு எப்படியாவது படித்து அறிந்துகொள்ளலாம் என்ற துணிவு எனக்கு உண்டாகிவிட்டது.

`சரி, சிந்தாமணியை நான் எடுத்து வைக்கிறேன். நீங்கள் படித்துப் பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள்’ என்று அவர் சொன்னார். நான் விடைபெற்றுக் கொண்டு வந்தேன். பார்க்கச் சென்றபோது அவர் இருந்த நிலையையும் நான் விடை பெறும்போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் சாமான்ய மனிதரல்லர் என்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் உடையவரென்றும் உணர்ந்தேன்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை இராமசுவாமி முதலியாரிடம் போனேன். அன்று அவர் மிகவும் அன்போடு என்னை வரவேற்றார். அவரைப் பார்ப்பதை விட அவர் சொன்ன புத்தகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது.

அவர் தம்மிடம் இருந்த சீவக சிந்தாமணிக் கடிதப் பிரதியை என்னிடம் கொடுத்தார். `இதைப் படித்துப் பாருங்கள். பிறகு பாடம் ஆரம்பிக்கலாமா?’ என்றார். `அப்படியே செய்யலாம்” என்று உடன்பட்டேன். பிறகு, அவர் அந்தப் பிரதியைத் தாம் பெற்ற வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

முதலியார் சிந்தாமணி பெற்ற வரலாறு!

`எனக்குச் ‘சிந்தாமணி’ முதலிய பழைய புத்தகங்களைப் படிக்க வேண்டும்என்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இந்தத் தேசத்தில் நான் சந்தித்த வித்துவான்களில் ஒருவராவது அவற்றைப் படித்ததாகவே தெரியவில்லை. ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கவில்லை. ஒரு சமயம் ஸ்ரீ வைகுண்டத்துக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் பரம்பரை வித்துவான்களாக இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒருவர் ஒரு வழக்கில் சாக்ஷியாக வந்தார். அந்தச் சாக்ஷியை விசாரித்தபோது, அவர் கவிராயர் பரம்பரையைச் சேர்ந்தவரென்றும், அவருடைய முன்னோர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்களென்றும் என் நண்பருக்குத் தெரியவந்தது. விசாரணையெல்லாம் முடிந்த பிறகு, முன்சீப் அந்தச் சாட்சியைத் தனியே அழைத்து அவர் வீட்டில் ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தார். அவர், `இருக்கின்றன’ என்று சொல்லவே, சிந்தாமணிப் பிரதியிருந்தால் தேடி எடுத்துத் தர வேண்டுமென்று கூறினார். அதிகாரப் பதவியில் இருந்தமையால் அவர் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவக சிந்தாமணிப் பிரதியைக் கொண்டுவந்து கொடுத்தார். அதற்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கி எனக்கு அனுப்பினார். அதிலிருந்து காகிதத்திற் பிரதி பண்ணிய புத்தகம் இது.

`இவ்வளவு கஷ்டப்பட்டு இதனைப் பெற்றும் படிப்பதற்கு முடியவில்லை. நான் கல்லூரியில் படித்தபோது இதன் முதற்பகுதியாக நாமகளிலம்பகம் மாத்திரம் பாடமாக இருந்தது. அதை ஒரு துரை அச்சிட்டிருந்தார். அதில் தமிழைக் காட்டிலும் ஆங்கிலம் அதிகமாயிருந்தது. நூல் முற்றும் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் நான் போகும் இடங்களில் உள்ள வித்துவான்களை எல்லாம் விசாரித்துப் பார்க்கிறேன். எல்லோரும் அந்தாதி, பிள்ளைத் தமிழ், புராணங்கள் இவற்றோடு நிற்கிறார்களே ஒழிய, மேலே போகவில்லை. அதனால் நான் மிகவும் அலுத்துப்போய்விட்டேன்.

`புத்தகம், மிகச் சிறந்த புத்தகம். கம்ப ராமாயணத்தின் காவ்ய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி. இதைப் படித்துப் பொருள் செய்துகொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்.’ என்றார்.

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>