பள்ளிபாளையம் அருகே, முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பாரதி நகரில் பூமிக்கடியில் பானை ஒன்று தென்பட்டது. குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி என தெரிந்தது. அதில், எலும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தாழியில் உள்ள எலும்புகளை சேகரித்தனர். மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட தாழியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘கொக்கராயன்பேட்டை ஆற்றோரத்தில் அமைந்துள்ளது. அரசர்கள் ஆட்சி செய்த பகுதி. தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்தால், பல வரலாற்று சின்னங்களை கண்டு பிடிக்கலாம்’ என்றனர்.