கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் தண்ணீர் எடுக்க பயன்படும் பானைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. மணலூரில் குறிப்பிடத்தக்க பொருட்கள் கிடைக்காததால் அகழாய்வு பணிகள் நடைபெறவில்லை. கீழடி, அகரம், கொந்தகையில் தலா எட்டு குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ளன. அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா மூன்று அடுக்குகளுடன் கிடைத்துள்ளன.
ஒரு உறைகிணற்றினுள் தண்ணீர் எடுக்க பயன்படுத்திய பானைகளும் கிடைத்துள்ளன. இதில் ஒரு பானை சிதிலமடைந்தும் மற்றொரு பானை முழுமையாகவும் உள்ளன. அருகில் தோண்டப்பட்ட மற்றொரு குழியிலும் சிதிலமடைந்த உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் இதுவரை 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் இதுவரை மொத்தம் 20 உறைகிணறுகள் வரை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அகரத்தில் ஆறாம்கட்ட அகழாய்விலும் 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டன.
நன்றி : தினகரன்