இதன் கருத்து வளத்தைக் கொண்டு பல்வேறு சமயங்கள் குறளை எங்கள் சமயத்தை சார்ந்தது என்கின்றனர்.
ஆனால் அதன் தமிழ் வளத்தை, தமிழர் கவிதை மரபை கருத்தில் கொண்டால் குறள் தமிழர்களின் தனிச் சொத்து என்பது எளிதில் புலப்படும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
குறளின் இன்பத்துப்பால் உலகில் தமிழர்கள் மட்டுமே கொண்டாடும் தனி இலக்கிய மரபு.
உலகின் எந்த சமயங்களும் காதலில் “களவு” குற்றம் என்கின்றன. தமிழர் மட்டுமே அதனை “ஒழுக்கம்” என்றனர். திருவள்ளுவனும் இதனையே வழிமொழிகிறான்.
அயற்சொல் கலப்பே இல்லாத முழுவதும் தனித் தமிழால் உருவான தனிச்சிறப்பு பெற்றது குறள். (கவிஞர் மகுடேசுவரன் ஆய்வு இதனை மெய்ப்பிக்கிறது)
குறளின் தமிழ் கவிதைத்தரத்திற்கு இணையாக இதுவரை உலக அளவில் எந்த மொழியிலும் ஒரு கவிதை நூல் வெளிவரவில்லை
என்பது எனது தனிப்பட்ட கருத்து.
திராவிட இயக்கத்திற்கு பின்புதான் திருக்குறள் ஏற்றம் பெற்றது என்பதும் ஏற்பதற்கில்லை.
இளங்கோ முதல் திருத்தக்கதேவர், சேக்கிழார், கம்பன், சுந்தரம் பிள்ளை, பாரதி வரை குறளை ஏற்றி போற்றி புகழ்ந்துள்ளனர்.
கம்பன் எழுநூறு இடங்களில் குறளை பதிய வைத்துள்ளான். மற்றொரு வியப்பு கம்பராமாயணத்தின் மையமே வள்ளுவனின் பிறனில் விழையாமை அதிகாரத்தில் வரும் ஒரு குறள்தான் என்பது யாரும் அறியாதது.
அடுத்த வியப்பு திருவள்ளுவரின் தமிழ்ப்பற்று. தமிழ் மொழியின் அகர வரிசைப்படி “அ” வில் ஆரம்பித்து “ன்” னில் நூலை முடித்த அவரின் பெரும் தமிழ் ஆளுமை.
‘திருக்குறள்’ உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது :
திருக்குறள் பொதுவானதாக இருப்பதால்தான், அது எங்கள் சமய நூல் என்று சிலர் சொல்லிக் கொள்வதுண்டு. அத்தகையவர்களில் இன்றைய சைன மதத்தவர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கிறித்தவர்களும் திருவள்ளுவர் எங்களவர் என்று உரிமை கொண்டாடுவர்.
அடுத்து சைவ சித்தாந்தத்தினர் திருவள்ளுவருக்கு நீறு பூசி, கொட்டை மாலை அணிவித்து காட்டுகின்றனர்.
தமிழறிஞர் மு.வரதராசனார் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ நூலை தொடர்ந்து வெளியிட்டுவரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இன்றும் அப்படித்தான் திருவள்ளுவர் படத்தை பதிப்பிக்கிறது.
இவர்கள் எல்லோரையும் விட ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே, திருக்குறளுக்கு உரையெழுதி தன் சனாதனத்தை திணித்தவர் பரிமேலழகர். இதை அவர் தெளிவாகவே,
‘அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று வகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று வழுவாது ஒழுகுதல்…’ என்று கூறுகிறார். இப்படி திருவள்ளுவரை தங்களுக்கு ஏற்றவாறு திரித்தவர் சிலர்.
ஆனால், திருக்குறளின் சில கருத்துகள் தமிழரின் தொன்மைப் பண்பான மனித நேய சமத்துவத்தை வலியுறுத்துவதாகவே இருக்கிறது. அவை பரிமேலழகர் போற்றும் சனாதனத்திலிருந்து மட்டுமின்றி இன்றுவரை திருவள்ளுவரை தங்களின் சமயத்தாராக, திருக்குறளை தங்கள் சமய நூலாக உரிமை கொண்டாடுவோருக்கு எதிரானதாகவே இருக்கிறது.
திராவிடர் இயக்கமே திருக்குறளின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர முயற்சித்தது. அந்த வகையில் பல புதிய உரை நூல்கள் வெளிவந்தன. நாவலர்.நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய உரை பரிமேலழகரின் உரைக்கு எதிரானதாகவும், திருவள்ளுவரின் உளக்கருத்தை ஓரளவு எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கிறது. இதுபோல் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன.
நான் கடந்த காலத்தில் தொடர்ந்து பதிவிட்டுவந்த பேராசிரியர்.பே.சு.கோவிந்தராசனார் எழுதிய ‘திருக்குறள் மெய்ப் பொருளுரை’ அத்ககைய உரைகளில் ஒன்றாகும்.
திருக்குறளுக்கு உரையெழுதும் முயற்சியைப் பற்றி கலைஞர் கூறுகையில் ‘இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நான் அறியாதவனல்லன்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார். இப்படி இன்றுவரை திருக்குறளுக்கு சற்றொப்ப ஆயிரம் உரைகளாவது எழுதப்பட்டிருக்கும்.
திருக்குறளுக்கு உரையெழுதிய முதல் பதின்மராக கருதப்படுபவர்கள் தருமர், தாமத்தர், தத்தர், பரிதியார், மணக்குடவர், நச்சர்,காலிங்கர் மற்றும் இருவர், பரிமேலழகர் ஆகியோராவர். இப்பதின்மரில் காலிங்கர், பரிதியார், மணக்குடவர், பரிமேலழகர் எனும் நால்வரின் உரைகள் மட்டுந்தான் கிடைத்துள்ளது. அதில் விரிவாக எழுதப்பட்டது பரிமேலழகர் உரை.
தற்போது என்னிடம் முப்பதுக்கும் மேற்பட்ட உரைநூல்கள் என்னிடமிருக்கின்றன. அவற்றிலிருந்து செறிவான உரைகளை தெரிந்தெடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். மேலும் பல உரை நூல்களை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவற்றைக் கொண்டு திருக்குறளைப் பற்றி பேசுவோம்.