தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் பிப்.5-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாட்டை கண்காணிக்க தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் தலைமை அலுவலகத்தில் துறையின் ஆணையர் க.பணீந்திரரெட்டி தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துவதில் ஏதாவது சிக்கல் உள்ளதா?, கடந்த காலங்களில் எத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள் ளன என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: தஞ்சை பெரிய கோயிலில் காலம்காலமாக தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடந்துள்ளது. எனவே, இம்முறையும் இரண்டிலும் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த விவரங்கள் அனைத்தையும் அறிக்கையாக தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அந்த அறிக்கையை நீதிமன்றம் மற்றும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.