1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் – (1863-1962)
ஒரே ஒரு சிறுகதை எழுதி, சிறுகதை வரலாற்றில் இடம்பெற்ற மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திராவிட இயக்கத் தூண்களில் ஒருவர். பா.ஜீவசுந்தரி எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் முன்னுரையில் அமரர் சின்னக்குத்தூசி இவ்வாறு எழுதுகிறார்…
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
`திராவிடர் இயக்க வரலாற்றை யார் எழுதினாலும் அதில் `தந்தை பெரியாருடன் பணியாற்றியவர்கள்’ என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் முதல் வரிசையில் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாருக்கு இடம் தராமல் எழுத முடியாது. பெரியார் காங்கிரஸில் இருந்தபோது அவருக்கு அனுசரணையாக இருந்து கட்சிப்பணிகளில் உறுதுணையாக இருந்தவர் மூதாட்டியார்.
காங்கிரஸிலிருந்து விலகுவது என பெரியார் முடிவுசெய்தபோது, `நானும் விலகுகிறேன்’ என்று அறிவித்துவிட்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார் அவர். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது, அதிலும் சேர்ந்து அவரது கொள்கைகளை மக்களிடம், குறிப்பாகப் பெண்களிடம் கொண்டுசேர்ப்பதில் முதல் இடம் வகித்தவர்.
பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது என்றிருந்த இருண்ட காலத்தில் `தேவதாசிகள்’ என்று அழைக்கப்பட்ட குலத்திலேயே பிறந்து, தேவதாசி ஒருவராலேயே வளர்க்கப்பட்ட அவர், தைரியமாக அரசியலில் அடியெடுத்துவைத்தார். ஆண்களுக்கு இணையாகப் பிரசாரம் செய்தார். போராட்டங்களில் கலந்துகொண்டார்.
அம்மையாருடைய இளமைக்காலம் பற்றிக் குறிப்பிடும் பா.ஜீவசுந்தரி, அம்மையாரின் தாய்-தந்தையர் இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஆனால் தேவதாசி முறையை ஏற்க மறுத்து வாழ்ந்தவர்கள் என்பதும் தெரியவருகிறது. மனைவி, மகளைக் காப்பாற்ற வழியில்லாத அவரது தந்தை, வீட்டைவிட்டு ஓடிவிட்டார். நிர்க்கதியான தாய், தனது மகளை ஒரு தாசியிடம் பத்து ரூபாய்க்கும் ஒரு பழம்புடவைக்கும் விற்றுவிட்டுச் சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது’ என்று எழுதுகிறார்.
எத்தகைய வறுமையான, அநாதரவான ஒரு வாழ்க்கையை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எதிர்கொண்டிருப்பார் என்பதை இதற்குமேல் விளக்கத் தேவையில்லை. இத்தனை தடைகளையும் தாண்டி திராவிட இயக்கத்தின் ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தின் தலைவராக அவர் உயர்ந்தார்.
`1949-ம் ஆண்டில் திராவிடர் கழகம் உடைந்து திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகிறது. பெரியார்-மணியம்மை திருமணமே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. திருமணம் ஏன் என்பதற்குக் காரணம் கூறும்போது `எனக்குப் பிறகு இந்த இயக்கத்தை நடத்த எவருக்குமே தகுதியில்லை’ என்று பெரியார் கூறினார். அப்போது `எனக்குக்கூடவா தகுதியில்லை. என்னை ஏன் வாரிசாக ஏற்றுக்கொள்ளக் கூடாது?’ என்று மூவலூர் அம்மையார் கேட்டுள்ளார். அண்ணாவுடன் தி.க-விலிருந்து வெளியேறிய மூவலூரார் தி.மு.க-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக அந்த 70 வயதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்’ என்று ஜீவசுந்தரி குறிப்பிடுகிறார்.
26.6.1962-ம் ஆண்டில் அவர் மறைந்தபோது, முரசொலியில் கலைஞர் இவ்வாறு தலையங்கம் எழுதினார்.
`வீரத்தாயை இழந்தோம்
பால்நுரைபோல் தலை
தும்பை மலர்போல் உடை!
கம்பீர நடை!
கனல் தெறிக்கும் பேச்சு!
அனல் பறக்கும் வாதத்திறன்!
அநீதியைச் சுட்டெரிக்கச் சுழலுகின்ற கண்கள்!
அடிமை விலங்கு தகர்த்தெறிய ஆர்ப்பரிக்கும் உள்ளம்!
ஓயாத பணி… ஒழியாத அலைச்சல்!
பேச்சு, மூச்சு, செயல் அனைத்திலும் திராவிடம்… திராவிடம்!’
வாழ்வின் இறுதிக்காலத்தில் தன் ஒரே மகன் செல்லப்பாவுடன் மாயவரத்தில் வாழ்ந்து மறைந்தார். கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையிலும் இலக்கியத்தையும் தன் வாழ்வின் ஓர் அங்கமாக அவர் கொண்டிருந்தார். குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்களை தானே எழுதிப் பாடியிருக்கிறார்.
தேவதாசிகளின் வாழ்க்கைமுறை, அவலங்கள், அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எவையெல்லாம் உதவியாக இருந்தன என்பதையெல்லாம் பேசும் `தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்கிற நாவலை அவர் 1936-ம் ஆண்டில் எழுதி சிவகிரி ஜமீந்தாரிணி வெ.வெள்ளத்துரைச்சி நாச்சியார் அவர்களின் உதவியுடன் தாமே வெளியிட்டார். மீண்டும் 65 ஆண்டுகள் கழித்துதான் அந்த நாவல் மறுபதிப்புக் கண்டது.
இப்பேர்ப்பட்ட தலைவி, ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார் என்பது சிறுகதை வரலாற்றில் குறிப்பிடத்தக்கச் செய்தியல்லவா? சிறுகதை வடிவம் முக்கியத்துவம் பெற்ற ஒருகாலத்தில் (1945-ம் ஆண்டில்) `தமயந்தி’ என்கிற இந்தக் கதையை அண்ணா அவர்கள் நடத்திய `திராவிட நாடு’ இதழில் ஐந்து வாரம் தொடராக எழுதியுள்ளார்.
தமயந்தி
`நீர்வளம், நிலவளம் பொருந்திய புவனகிரியை ஆண்ட குணசேகர ஜமீன்தாரை அறியாதார் தமிழ்நாட்டில் மிகச் சிலரே. இந்த ஜமீன்தாருக்கு தமிழரசி என்கிற ஒரே புதல்வி. இவரின் அரசாங்கத்துக்கு இரண்டு மந்திரிகள். முதல் மந்திரி வெங்கடேச அய்யரும், இரண்டாவது மந்திரி திருநாவுக்கரசும் உத்தியோகம் செய்துகொண்டிருந்தார்கள்.
கல்வியில் சிறந்த மடாதிபதி ஒருவரை தமிழ் வளர்ச்சிக்காக நியமித்து, தேவார, திருவாசகப் பாடசாலைகள் மூலம் பைந்தமிழைப் பலப்படுத்த ஏராளமான பொருளையும் மடத்துக்கென வைத்து மடத்துக்குப் பணிசெய்ய மடவடையாள் எனும் மனோன்மணி தாசியையும் ஆலயப் பணிக்குத் தாசி மதன சுந்தரியையும் ஏற்படுத்தியிருந்தார்’ எனத் தொடங்கும் இந்தக் கதையில், தமிழரசிக்குக் கல்வி கற்றுத்தரும் பொறுப்பை மனோன்மணியின் மகள் தமயந்தி ஏற்கிறாள். மடாதிபதியும் வெங்கடேச அய்யரும் பிற்போக்கான மனிதர்கள். திருநாவுக்கரசு, தமயந்தி ஆகியோர் முற்போக்கான சிந்தனை உடையவர்கள். தமயந்தி தன் தாயின் விருப்பப்படி தாசி தொழிலுக்குப் போக மறுத்து, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாள். மடாதிபதியின் சூழ்ச்சியால் திருநாவுக்கரசர் பதவி பறிபோகிறது. அவர் மக்களிடம் சென்று தொண்டாற்றப் போய்விடுகிறார்.
மடாதிபதி, தமயந்தி மீது மையல்கொண்டுள்ளான் என மதனசுந்தரி சொல்லக் கேட்டு, தமயந்தி ஆவேசத்துடன் பேசுகிறாள். “இத்தகைய சாத்திரங்களைச் சுட்டுப்பொசுக்க வேண்டும். கடவுளின் பேரால் ஒரு வகுப்பாரை விபச்சாரிகளாக்கிய விபரீதச் செயலை விலக்கத்தான் வேண்டும். உலகத்தை உண்டாக்கிய கடவுள், ஆக்கல், அளித்தல், அழித்தல் எனும் முத்தொழில் புரியும் கடவுள், அன்புக் கடவுள், தனக்கு மனைவியாகச் சிலரை ஏற்று பலர் அறியச் செய்வதா? அவருக்கு வெட்கம் மானமில்லையா? அது மாத்திரமா…
நமது நாட்டில் எத்தனை மதங்கள்? எவ்வளவு சாதிகள்? பார்ப்பனர் தவிர மற்ற யாவரும் சூத்திரர், தீண்டாதாராகவே கருதப்படுகிறார்கள். உத்தமர்கள் உதித்த நம் நாடு ஏன் இன்று ஊதாரிகள் நிறைந்த நாடாயிற்று? வீரர்கள் தோன்றிய நாடு ஏன் இன்று வீணர்கள் மலிந்த நாடாயிற்று? நமது நாட்டுப் பெண்மணிகள், உத்தமிகளாய், வீரர்களாய், வலிமை பொருந்தியவர்களாய் விளங்கவே நான் பாடுபடப்போகிறேன்.”
ஜமீனுக்கு ஆண் வாரிசு இல்லை. மகளுக்கு மடாதிபதி ஆலோசனையின் பேரில் தமிழகத்துக்கே தாயகமாய் விளங்கிய தருமபுரியை ஆண்டுவந்த துரைராஜரின் மகன் வீரகுணசீலனை மணம் பேசி முடிக்கிறார். வீரகுணசீலன் ஏழைதான். ஆனால் நல்லறிவு பெற்றவன்; உயர்தரக் கல்வி கற்றவன்; பல மொழிகள் பயின்றவன்; விஞ்ஞானத்தில் தேர்ச்சிபெற்று விளங்கியவன்; தன் தந்தையைப்போலவே பகுத்தறிவாளன்.
வீரகுணசீலனும் தமிழரசியும் இன்ப வாழ்க்கை நடத்திவந்தார்கள். வீரகுணசீலன் தன் நாட்டிலே தங்கம் விளையும் இடத்தைக் கண்டுபிடித்து மாமனார் உத்தரவு பெற்று தோண்டி எடுத்தார். அதைக் கண்ட மாமனார், மருமகனின் அறிவையும் ஆராய்ச்சியையும் புகழ்ந்து முன் தனக்கு இருந்த செல்வத்திலும் அதிகமாகப் பெருகியதைக் கண்டு அகமகிழ்ந்தான். பூமியில் கிடைத்த பொருளில் மூன்றில் ஒரு பாகம் பிராமணாளுக்குச் சொந்தம் என்ற மனுமுறைப்படி அவர்களுக்கு ஏராளமான பொன்னைத் தந்தார். ஆனால், வீரகுணசீலனுக்கும் தமிழரசிக்கும் சற்றும் பிடிக்கவில்லை. என்ன செய்வது?
இந்தச் செய்தி அறிந்த திருநாவுக்கரசு ஏழைகளிடம் சென்று “தோழர்களே தங்கசுரங்கத்தைக் கண்டவர் ஒருவர், வெட்டி எடுத்தவர்கள் நீங்கள். அதிக பலனை அனுபவிப்பவர்கள் ஆரியர். இதென்ன அநீதி? உழைப்புக்குத்தக்க ஊதியம் உங்களுக்கு இல்லை. நெற்றிவியர்வை நிலத்தில் விழ பாடுபட்டவர்களுக்குக் கூலி சுவல்பம். இந்த முறை ஒழிய வேண்டாமா? உங்களுக்கு உணர்ச்சியில்லையா… ஊக்கமில்லையா?” என உருக்கமுடன் எடுத்துக்காட்ட மக்கள் பலர் அவர் முன்னேற்றச் சங்கத்தில் சேர்ந்தார்கள்.
ஒருநாள் வீரகுணசீலன் தன் காரில் காட்டு மார்க்கமாகப் போகும்போது திடீரென கார் நிறுத்தப்பட்டது. டிரைவர் தலையில் குல்லாய் விழுந்தது. ஒரு வெடிச் சத்தம் கேட்டது. ஒருவன் இறந்து கிடந்தான். வீரகுணசீலனைக் காணவில்லை. நகர் முழுவதும் அழுகுரல். அல்லோலகல்லோலம். தந்தித் தபால்கள் பறந்தன. போலீஸார் தீவிரமாகப் புலன்விசாரித்தனர். வீரகுணசீலனைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இனாம் என்ற விளம்பரம். ஆனால், ஒன்றும் பயன்படவில்லை
இப்படிப் பல திருப்பங்களுடன் செல்லும் கதை முடிவில் வீரகுணசீலன் உயிருடன் திரும்ப, திருநாவுக்கரசு தமயந்தியை மணம் முடிக்க, பகுத்தறிவாளர்களின் வெற்றியோடு கதை முடிகிறது.
புதுமைப்பித்தன் கு.ப.ரா போன்றோர் முன்னெடுத்த சிறுகதை வடிவத்தோடு இந்தக் கதை எந்த அளவுக்குப் பொருந்திப்போகுமோ தெரியாது. ஆனால், 1930-களில் வந்துகொண்டிருந்த சிறுகதைகள், குறிப்பாக பெண் படைப்பாளிகளின் கதைகள் அக்கிரஹாரத்தையும் வீட்டு வாசல்படியையும் தாண்டாதபோது அம்மையாரின் கதை ஒரு வெடிகுண்டைப்போல வெப்பத்தையும் வெளிச்சத்தையும் உள்ளுறையாகக்கொண்டுள்ளது முக்கியமல்லவா?
அவர் எழுதியது இந்த ஒரு கதையைத்தான் என்று சொல்லப்பட்டாலும், பா.ஜீவசுந்தரி தேடிக் கண்டுபிடித்து இணைத்துள்ள `தாயைக் கண்டேன்’ என்கிற நடைச்சித்திரம் ஒரு சிறுகதையைப்போலத்தான் உள்ளது.
2. கு.ப.சேது அம்மாள்
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலின் சகோதரியான இவர், தன் வீட்டில் நிலவிய இலக்கியச் சூழலின் உந்துதலால் எழுதத் தொடங்கியவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதியவர். இவருடைய படைப்புகள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டன.
`மங்கை’, `கலைமகள்’, `கலா மோகினி’ ஆகிய இதழ்களில் இவர் தொடர்ந்து எழுதியுள்ளார். `வீர வனிதை’ (1958), `தெய்வத்தின் பரிசு’ (1965), `உயிரின் அழைப்பு’ (1966) ஆகியவை இவர் எழுதிய முக்கிய நூல்கள்.
புதுமைப்பித்தன் குடும்பத்திலிருந்து வந்த கமலாவிருத்தாச்சலம் குறைவில்லாக் கதை தந்ததுபோல அமரத்துவம்மிக்க பல சிறுகதைகளைத் தந்த கு.ப.ரா-வின் சகோதரி எப்படி எழுதியிருக்கிறார் என்று பார்க்கும் குறுகுறுப்பு எல்லோரையும்போல எனக்கும் இருந்தது.
1908-ம் ஆண்டில் பிறந்த அவருக்கு அன்றைய கால வழக்கப்படி 11 வயதில் திருமணம் செய்விக்கப்பட்டது. அவருடைய மனதில் இலக்கியத்தின்மீதும் படிப்பின்மீதும் ஆர்வத்தை விதைத்தவர் அவருடைய சகோதரர் கு.ப.ராஜகோபாலன். சேது அம்மாளை, தாகூரின் சாந்தி நிகேதனில் படிக்கவைக்க கு.ப.ரா ஆசைப்பட்டாராம்.
கு.பா.ரா
ஆனால், அம்மாவின் வீட்டோ அதிகாரத்தால் அந்த வாய்ப்புப் பறிபோனது. கு.ப.ரா-வுக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட பிறகு, அவர் சொல்லச் சொல்ல அவருடைய கதைகளை எழுதும் பொறுப்பை சேது அம்மாள் ஏற்றுக்கொண்டார். அப்போது ஏற்பட்ட ஆர்வமே அவரை சொந்தமாகக் கதை எழுதத் தூண்டியது. அவருடைய முதல் கதையான `செவ்வாய்தோஷம்’ `காந்தி’ இதழில் 1939-ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து 500 சிறுகதைகளும், 9 நாவல்களும், சில ஓரங்க நாடகங்களும் அவர் எழுதியுள்ளார். இவையெல்லாம் இன்று வாசிக்க எளிதில் கிடைப்பதாக இல்லை.
`சிறுகதையின் வடிவத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு அதன் சர்வ லட்சணங்களோடு கதை எழுதிய முதல் பெண்மணி இவர்தான்’ என்று அவர் எழுதத் தொடங்கிய காலத்திலேயே பாராட்டப்பட்டவர்.
“ஒரு விஷயத்தை எழுத வேண்டும் என முடிவு செய்த பிறகு அதை சிறுகதையாக எழுதுவதா, நாவலாக எழுதுவதா என்பதை எப்படித் தீர்மானிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு அவரது பதில்…
“சிறுகதை என்பது ஓர் அங்கம்தான். முழு வாழ்வு அல்ல.” அவருடைய மனதுக்கு மிக நெருக்கமான நாவல் எனத் தன்னுடைய `குரலும் பதிலும்’ என்கிற நாவலையே குறிப்பிடுகிறார். ஆணாதிக்கச் சூழலில் பெண்கள் தங்களுக்குள் அன்பால் கட்டுண்டு வாழ்வை எதிர்கொள்ளும்விதத்தை அதில் சித்திரித்துள்ளார். காந்தியத்தின்பால் ஈர்ப்புக்கொண்டு பல கதைகளை அவர் எழுதியுள்ளார்.
“இளம் பெண் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு “எழுதுவது வாசகரின் மனதில் நிற்க வேண்டும். நம்முடைய புத்தகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு அவர்களுக்கு ஏற்படும்படி எழுத வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.
இனி, அவரது `புயல் ஓய்ந்தது’ கதை.
ஐப்பசி மாதத்து அமாவாசை. அந்தியில் பிடித்த மழை விடாமல் ஒரே மாதிரியாக அடித்துப் பெய்துகொண்டிருந்தது.
நல்ல நிசிவேளை. இடியும் மின்னலுமான அந்த அடைமழையிலும் சாரதா, தன் அறையின் ஜன்னல்களையும் கதவையும் திறந்து போட்டுவிட்டுத் தூக்கம்கொள்ளாமல் மறுகும் மனவேதனையை வெளியுலகத்து ஆர்ப்பாட்டத்தோடு கலந்து கண்டுகொண்டு சாய்மானத்திலேயே கிடந்தாள். இன்னும் பலமான மழை வலுக்கவே அவள் மீது சாரலடித்தது. எழுந்து ஜன்னலை மூடும் சமயம் வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
நின்று கேட்டாள். ஒரு தடவை, மறுதடவை, பிறகு தொடர்ந்து தட்டுவது கேட்டது. சரி நமது வீட்டுக்கதவுதான் என்று மாடியிலிருந்து இறங்கி வந்து கதவு அருகில் நின்று, கதவைத் திறக்காமலேயே “யாரது?” என்று கேட்டாள்.
“நான்தான் சாரதா, திற.” – குரலைக் கேட்டதும் அப்படியே நின்றுவிட்டாள். ஒருகாலத்தில் அமுதச் சுவையாக இனித்த அந்தக் குரல், இன்று கர்ணகடூரமான த்வனியாகக் கேட்டது. உள்ளே இருந்து பதிலுமின்றி, கதவும் திறக்கப்படாதது கண்டு மறுபடியும், “சாரதா, கதவைத் திற… நான்தான்” என்றது வெளியிலிருந்த குரல்.
தாழ்ப்பாளை நீக்கிவிட்டு உள்ளே வந்துவிட்டாள் சாரதா. கதவைத் திறந்துகொண்டு நடராஜன் அவள் பின்னாலேயே கூடத்துக்கு வந்து நின்றான். சாரதா திரும்பி நின்று வந்தவனைப் பார்த்து “வாருங்கள் ராஜா, சௌக்கியமா?” என்று பாதகமான தொனியில் கேட்டவுடனேயே நடராஜனின் நம்பிக்கையில் ஒரு பாதி செத்துவிட்டது.
அந்த அதிர்ச்சியால் தூண்டப்பட்டவனாக மெய்ம்மறந்துபோய் அவளை நோக்கிப் பாய்ந்தான். சட்டென இரண்டடி பின்வாங்கி நின்றுகொண்டாள் சாரதா. கூரிய சிரிப்பொன்று சிரித்துக்கொண்டு, “இவ்வளவு பிரேமை உங்களுக்கு எப்போது உதித்தது?” என்று அவனைப் பார்த்துக்கொண்டே கேட்டாள். அவளுடைய அந்தத் தீஷண்யமான சிரிப்பு பாணம்போல நடராஜனின் உள்ளத்தில் தைத்தது. ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நின்று பிறகு தெளிவடைந்து, “சாரதா, உன் தயாளத்தை நம்பி எனது தவறை உன் முகத்தின் முன் ஒப்புக்கொண்டு, உனது மன்னிப்பையும் உன்னையும் கேட்கிறேன். என்னை ஏமாற்…”
எட்டிக் கசப்பை விழுங்குவதுபோல அந்த வார்த்தைகளை வாங்கிக்கொண்ட சாரதாவின் தோற்றத்தைக் கண்ட நடராஜன், மேலே பேசத் தெரியாமல் திகைத்து நின்றான்.
நிலைமையைச் சமாளித்துக்கொண்டு சகஜ பாவத்துடன் சாரதா, “உட்காருங்களேன். தீர்த்தம் வேண்டுமா?” என்றாள் உபசாரமாக, “வேண்டும். கொண்டு வா” என்றான். வந்ததும் வாங்கிக் குடித்தான். உட்கார்ந்துகொண்டான், பேசாமல் எதிரே சிலைபோல நிற்கும் மனைவியை ஐந்து நிமிஷம் உற்றுப்பார்த்தான். ஐந்து வருஷங்களுக்கு முன்பு எந்தக் கம்பீர ரூபத்தையும், ஞான சோபைபையும் கண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுத்தானோ… அதே கம்பீர ரூபமும் தேஜஸும் அவளுடைய தோற்றத்தை மறுமுறையாக அதுவும் ஸ்பஷ்டமாகக் கண்டான். மனம் படாதபாடுபட்டது. தத்தளித்து உருகினான். அதே அளவில் குரலும் கெஞ்ச, “சாரதா. வா இப்படி உட்கார் என் பக்கத்தில். மாட்டாயா?” என்று விம்மினான்.
குழந்தை இல்லை என்கிற காரணத்தைக் காட்டி மறுமணம் செய்துகொண்டு போய்விட்ட கணவன், நீண்டகாலத்துக்குப் பிறகு இன்று மீண்டும் வந்து தன் குடும்பத்தோடு இருக்குமாறு அழைக்கிறான். அவள் உறுதியாக மறுக்கிறாள்.
“என் வீடா! அது எங்கு இருக்கிறது? அந்த வீட்டில் உங்கள் குழந்தைக்கே அன்னமும் இடமும் இல்லையென்றால், எனக்கு எங்கிருந்து கிடைக்கும்? ஒருகாலத்தில் உங்களுக்கு இந்தக் கழிவிரக்கம் தோன்றாமல் இருக்காது என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பதிலாகத்தான் இந்திரா இருக்கிறாளே! நீங்கள் கருதியபடி மலடியாக நின்றுவிடாமல் காத்த கடவுள் கருணாநிதி! அதுபோதும் என்ற திருப்தியுடன் உங்களுக்கு பாரமாக அங்கு இருந்துகொண்டு என்ன பயன்? வந்துவிட்டேன்! எனது பர்த்தா சுகமடைய வேண்டி அதற்கானதைச் செய்து எனது ஆயத்தை நான் நிறைவேற்றிவிட்டேன். நான் அவளுக்குக் கற்றுக்கொடுத்த பதி சேவையை அவளே எனக்குப் போதிக்கும் அளவில் உயர்வடைந்துவிட்டாள். என் வேலை சித்தியாகிவிட்டது. எனது துயரமும் இன்றோடு நிவர்த்தி. உங்களையும் மறுமுறையாகக் கண்டுவிட்டேன். துயரம் தீர்த்த தங்களுடைய பாதங்களுக்கு நமஸ்காரம்!”
“நிஜம்தானா சாரதா இது?” “எனது சுபாவம் என்றும் ஒரே மாதிரிதான். சுயநலமற்றது என்று நிமிர்ந்து சொல்ல இடம் வைத்துக்கொண்டுதான் நான் மனிதர்களுடன் பழகுகிறேன். எனது முடிவில் தவறுதல் ஏற்பட இடமே கிடையாது.”
“மிஞ்சிவிட்டாயா உன் கணவனை?”
“ராஜா, அது விதியின் கூற்று. என்னதல்ல. இந்த ஞானமில்லாவிடில் நான் என்றோ தற்கொலை புரிந்துகொண்டிருப்பேன்” என்றாள் சாந்தமாக.
சாரதாவின் பதிலில் ஆழ்ந்தபடியே வெளியுலகைப் பார்த்தான் நடராஜன்.
வெளியே நிகழும் ஆர்ப்பாட்டம் அவனுடைய உள்ளப் போராட்டத்துக்கு எந்தவிதத்திலும் குறைந்திருக்கவில்லை – என்று கதை முடிகிறது.
கதையின் போக்கில் ஓரிடத்தில் இப்படி வரும்:
“…சாரதா, உன் மனதை எவ்வளவு இறுக்கிவிட்டேன் பாபி! என் கண்ணே! உனது அன்பு எங்கே! அதை என் மீது சொரி. இல்லாவிட்டால் உயிர் வாழ என்னால் சாத்தியமில்லை… சாரதா!”
“ராஜா, கொஞ்சம் பொறுங்கள். இருந்த அன்பையெல்லாம் அன்றே உங்களுக்கு அளித்துவிட்டேன். பாக்கி வைத்திருக்கவில்லை, இன்று கொடுக்க! ஆண்களின் அன்புக்கும் பெண்களுக்கும் இதுதான் வித்தியாசம். உங்களுக்குத் தெரியாத தத்துவமா இது?”
“ஆமாம். உண்மை, நிஜமான வார்த்தை, பிறந்து பிறந்து மாய்வதும் நிமிஷத்தில் மாறுதலடைந்துவிடும் சபல சித்தமும்தான் ஆண்களின் அன்பு என்று சொல்கிறாய்… வாஸ்தவம்.”
கு.ப.ரா-வின் வாக்கியம்போல அதற்கு இணையான எழுத்து எனப் போற்றத்தக்க வரிகளோடு இந்தக் கதை எழுந்து நிற்கிறது.
வை.மு.கோதைநாயகி அம்மாள், கலமா விருத்தாச்சலம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், கு.ப.சேது அம்மாள் ஆகிய நால்வரைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். 1930-60 காலகட்டத்தில் இன்னும் பல முக்கியமான பெண் படைப்பாளிகள் சிறுகதைக்கு வளம் சேர்த்துள்ளார்கள். குகப்பிரியை, கமலா பத்மநாபன் (1913-1945), குமுதினி (1905-1986), கௌரி அம்மாள் (1913-1987), எம்.எஸ்.கமலா (1940-கள்) சரோஜா ராமமூர்த்தி (1921-1991), வசுமதி ராமசாமி (1917-2004) கோமகள் (1933-1004) என இன்னும் பல படைப்பாளிகள் உண்டு. அவர்களின் கதைகள் ஆளுக்கு ஒரு கதை வீதம் `மீதமிருக்கும் சொற்கள்’ என்கிற தொகுப்பாக என்.சி.பி.ஹெச். வெளியீடாக அ.வெண்ணிலா தொகுத்து வெளியிட்டுள்ளார்.
- விகடன்