நாமக்கலைச் சேர்ந்த தமிழறிஞர் மற்றும் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனருமான சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 91.
மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். இவர் நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் கிராமத்தில் 1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. (தமிழ்), பி.டி., பி,எல்., பிஎச்,டி படித்த இவர் நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு பேருரையாற்றினார். சிலம்பொலி செல்லப்பன் கலந்து கொள்ளாத தமிழ் மாநாடோ, முக்கியக் கருத்தரங்குகளோ இல்லையென்று கூறும் அளவுக்கு ஆகச் சிறந்த ஆளுமையாக வலம் வந்தார்.
சிலம்பொலி , சிலப்பதிகாரம்- தெளிவுரை, சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய அற்புதமான இலக்கிய நூல்களைப் படைத்த சிலம்பொலி செல்லப்பன் ம.பொ.சிக்கு அடுத்து சிலப்பதிகாரத்தை பட்டிதொட்டியெங்கும் கடந்த 60 ஆண்டு காலமாகப் பரப்பினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி மிகப்பெரும் சாதனை படைத்த இவர் சிலப்பதிகாரம் , மணிமேகலை, பெருங்கதை, சிற்றிலக்கியங்கள் , சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, ராவண காவியம், பாரதிதாசன் கவிதைகள், சீறாப் புராணம், ராஜநாயகம், தேம்பாவணி, பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகள் ஆகிய தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி சாதனை படைத்தார்.
சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு , கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாட்டுச் சிறப்பு மலர் தயாரிக்கும் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பணியைச் செய்து முடித்தவர் சிலம்பொலி செல்லப்பன். செம்மொழித் தமிழைப் பரப்புவதில் 60 ஆண்டு கால உழைப்பைக் கொட்டிய தமிழ்ப் பண்பாளர். தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்களில் ஒருவர். எந்தக் குறிப்பும் கையில் வைத்துக் கொள்ளாமல் , தமிழைக் கேட்போர் மயங்கும் வண்ணம் அருவியாய்க் கொட்டுபவர்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர், தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் போன்ற பணிகளில் பணியாற்றிய போது தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். செம்மொழி எண்பேராயக் குழுவில் சீர்மிகு உறுப்பினராய்ச் சிறப்பாகப் பணியாற்றினார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ், ஐக்கிய அரபு நாடுகள் , அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பையேற்றுச் சென்று தமிழ் பரப்பினார்.
சங்க இலக்கியத் தேன், பாரதிதாசன் ஒர் உலகக் கவிஞர், இலக்கியச் சிந்தனைகள், பெருங்குணத்துக் கண்ணகி, செம்மொழித்தமிழ் அகப்பொருள் களஞ்சியம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். சிலம்பொலி, செந்தமிழ் அருவி, செந்தமிழ்க் களஞ்சியம், குறள்நெறிக் காவலர், இலக்கியச் செல்வர், சிந்தனைச் செல்வர், தமிழ் நலக் காவலர் உள்ளிட்ட பல பட்டங்களை சிலம்பொலி செல்லப்பன் பெற்றுள்ளார். பாவேந்தர் விருது, கம்பர் விருது, கலைஞர் விருது, தமிழ் வாகைச் செம்மல் விருது, தமிழ்ச் சான்றொர் விருது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 22 வயதில் ஆரம்பித்த இவரது தமிழ்ப் பணி 91 வயது வரை தொடர்ந்தது.