தமிழ் இசைக்குத் தொண்டு செய்த மூவரான முத்துதாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மும்மூர்த்திகளைப் போற்றும் வகையில் சீர்காழியில் தமிழிசை விழா இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
பிறமொழி இசையால் தன் புகழ் மங்கியிருந்த தமிழ் இசையை மீண்டும் தம் பாடல்களால் மக்கள் மத்தியில் புகழ்பெறச் செய்தவர்கள் இந்த மூவரையும் `தமிழிசை மூவர்’ என்று பெயர் பெற்றனர்.
முத்துத் தாண்டவர் :
முத்துத் தாண்டவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
முத்துத் தாண்டவர் சிதம்பரத்தில் தங்கி அங்கு தில்லைவாழ் இறைவன்மேல் தினமும் ஒரு பாடல் பாடுவார். அதற்கு ஈடாக இறைவன் தினமும் அவருக்கு சில தங்க நாணயங்களை அவருக்குப் பரிசளிப்பார். ஒரு நாள் அவரைப் பாம்பு தீண்ட `அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே’ என்று பாடல் பாடினார். உடனே அவர் விஷம் இறங்கியது. ஒருமுறை கொள்ளிடத்திலிருந்து அவர் சிதம்பரம் திரும்பியபோது காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சிதம்பர தரிசனம் காண இயலாது போனதே என்று வருந்தி `காணாமல் வீணிலே காலம் கழித்தோமே’ என்ற பாடலை மனமுருகப் பாடினார். உடனே காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிட்டது. இதுபோன்ற அநேக அற்புதங்களைத் தன் வாழ்வில் செய்தவர் முத்துத் தாண்டவர்.
பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற் புவனத்தில் வேறுமுண்டோ, சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் போன்ற பல்வேறு புகழ்பெற்ற பாடல்களைப் பாடியவர் முத்துத் தாண்டவர்.
தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத் தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.
இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றைத் உள் வாங்கிக் கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.
மாரிமுத்தாப் பிள்ளை :
மாரிமுத்தாப் பிள்ளை 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் சீர்காழியிலே பிறந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன.
சிதம்பரம் நடராஜர் மீதான பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார் அவற்றில் சில :
- தில்லை சிதம்பரமே – அல்லால் – வேறில்லை தந்திரமே … – இராகம்: ஆனந்த பைரவி
- தெரிசித்தபேரைப் பரிசுத்தராகச் சிதம்பரமன்றி யுண்டோ… – இராகம்: சௌராஷ்டிரம், தாளம்: ஆதி தாளம்
- தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை – இந்தவைபோகமெங்கெங்குமில்லை… – இராகம்: பூர்வகல்யாணி, தாளம்: ஏக தாளம்
- எந்தத் தலத்தையு மிந்தத் தலத்துக்கிணை, சொல்லக் கூடாதே ஐயன்… – இராகம்: தேவகாந்தாரி, தாளம்: ஆதி தாளம்
- எந்நாளும் வாசமாம் சிதம்பரஸ்தலத்திலே, இருக்கத்தவஞ்செய்தே… – இராகம்: பியாகடை, தாளம்: ஆதி தாளம்
சிதம்பரத்தின் மகிமையையும் தில்லை நடராஜப் பெருமானின் பெருமைகளையும் பாடும் நூல் `புலியூர் வெண்பா.’ இதை எழுதிப் பாடியவர் மாரிமுத்தாப் பிள்ளை. மாரிமுத்தாப் பிள்ளையின் முதல் மகன் சற்று சுகவீனமாக இருந்தபோது இறைவன் அவரை சிதம்பரத்தின் மீது பாடல் பாடுமாறு பணித்தார். உடனே மாரிமுத்தாப்பிள்ளை பாடியதே புலியூர் வெண்பா எனப்பட்டது. புலியூர் என்பது சிதம்பரத்துக்கு மற்றுமொரு பெயர் எனப்படுகிறது. மிகவும் உருக்கமாக இறைவனைப் புகழ்ந்துபாடும் பாடல்கள் இவருடையவை.
அருணாசலக் கவிராயர் :
அருணாசலக் கவிராயர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். இவர் தனது இசையால் தமிழின் மாண்பையும் பக்தியையும் போற்றி வளர்த்தார். `ராம நாடகக் கீர்த்தனம்’ என்னும் புகழ்பெற்ற இசைக் காவியத்தை இயற்றியவர். `கடன்பெற்றார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்னும் வரி இவருடையதே. `ஏன் பள்ளி கொண்டீர் ஐயா’, `ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே’ஆகிய புகழ்பெற்ற பாடல்களைப் பாடியவர் இவர்.
அருணாசலக் கவிராயர் தில்லையாடி என்னும் ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்லத் தம்பி – வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார். இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்து, குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.
சீர்காழியில் வாழ்ந்ததால் சீ காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததுடன் பல நூல்களையும் இயற்றினார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.
இத்தகைய சிறப்புகளை உடைய தமிழ் இசை மேதைகளின் புகழை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மூவர் விழா, கலை – பண்பாட்டுத்துறை சார்பில் சீர்காழியில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா பிப்ரவரி 27-2019 தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சியைத் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். மூன்று நாள்களும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.