மைசூரில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இதுவரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மை படிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசு நியமிக்கவில்லை. அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப் படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாசாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன. அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர், 1967ல், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன. அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை. எங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.
மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர். தொல்லியல் துறைபடியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்க வேண்டும்.தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.
ஏற்கனவே, தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு அறிக்கைகள் வெளிவராத நிலையில், இது போன்ற ஆவண அழிப்பில், துறை சார்ந்தோரே ஈடுபடுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தினமலர்