தமிழ்(Part-1)

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” இது நம் தமிழ் இனத்தின், தமிழ் மொழியின் வரலாற்றை பதிவு செய்திட்ட வைர வரிகள். உலக அளவில் பழமை வாய்ந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று.

இலக்கண வளமும் இலக்கியச் செறிவும் தன்னகத்தே கொண்டு தமிழருக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறது தமிழ்மொழி. இன்று கடல் கடந்தும் வாழும் மொழிகளில் தமிழ் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறது.காரணம் எந்த மொழியும் சொல்லாத வாழ்க்கைக்கான இலக்கணத்தை நம் தாய்மொழி தமிழ் தரணிக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறது.

அகத்தையும், புறத்தையும் அள்ளிக் கொடுத்தது. அறத்தையும், விருந்தோம்பலையும், சொல்லிக் கொடுத்தது. வள்ளுவத்தை உலகறியச் செய்தது, வரலாற்றுக் காப்பியங்களை காவியமாக்கியது. இதெல்லாம் தமிழின் அடையாள அடிச்சுவடுகள்.

பண்பட்ட மொழி

தலைமுறை கடந்து வாழும் தமிழ் காலத்திற்கேற்ற புதுமைகளை உள்வாங்கி உலக அளவில் உயர்ந்து நிற்கிறது. இன்று இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தமிழ் மொழியின் பயன்பாடு தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. இளமையும், புதுமையும் தமிழோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது.

பிறமொழிக் கலப்பின்றி தனித்து இயங்கும் வல்லமை கொண்ட வரலாற்று மொழி தாய்மொழித்தமிழ் ஒன்றே. பக்தியின் மொழியென்று அடையாளம் காட்டப்பட்ட தமிழ், பண்பட்ட மொழியாக தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதி பதிவிட்டு சென்றிருக்கிறான். பாரதி பல மொழிகளில் பட்டறிவும், புலமையும் மிக்கவர். அதனால்தான் அவன் அறிந்த மொழிகளில் சிறந்த மொழி தமிழ் என்று சிறப்புச் செய்திருக்கிறான். “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று தமிழை உயிராக மதித்தவர் பாரதிதாசன்.வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த ஜி.யு.போப் தமிழைக் கற்று அதன் அன்பையும், அழகையும் நேசித்தார். கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றினார். தமிழின் அழகில் மெய்மறந்து போன ஜி.யு.போப் தன் கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” எனப் பதிவிடச் சொல்லி மறைந்து போனவர்.

திருக்குறள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று.

கடல் கடந்து வாழும் மொழி

கம்பனையும், கண்ணதாசனையும் அறிமுகம் செய்துவைத்தது தமிழ். வள்ளுவனையும், தொல்காப்பியரையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது தமிழ். இளங்கோவடிகளையும், பாரதி, பாரதிதாசனையும் அடையாளப்படுத்தியது தமிழ்.

வரலாறு போற்றும் காவியங்களையும், காப்பியங்களையும், கவிதைகளையும் அரங்கேற்றம் செய்தது தமிழ். இயலையும், இசையையும், நாடகத்தையும் கற்றுக்கொடுத்தது தமிழ்.இன்று கடல் கடந்தும் வாழும் மொழியாகவும், வாழ்த்தப்படும் மொழியாகவும் தமிழ் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறது. உலக அளவில் ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் செய்யப்படும் செம்மொழித் தமிழாக சிறப்புப் பெற்று இருக்கிறது.

மன்னர்களின் கொடைத்தன்மையை தமிழ் நமக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறது. பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்ற கடையெழு வள்ளல்கள் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்து வாழ்ந்து காட்டியவர்கள்.அற வாழ்க்கைக்கு இலக்கணமும், வன்மம் இல்லாத வாழ்க்கைக்கு வடிகாலையும் சுட்டிக் காட்டிச் சென்றது தமிழ்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: