விராலிமலை அருகே சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் கண்டுபிடிப்பு!

விராலிமலை அருகே சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் கண்டுபிடிப்பு!

விராலிமலைக்கு அருகிலுள்ள கீழ்த்தொட்டியப்பட்டியில் இருந்து தென்னலூா்ச் செல்லும் சாலையில், வேலூரை ஒட்டியுள்ள வட குளத்தின் கரையில் சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனா்.

உயரமான கரைகளுடன் விளங்கும் வேலூா் குளத்தின் தென்பகுதியில், இருபுறத்தும் 2.40 மீ.உயரத்திற்குக் காரைப்பூச்சுடன் கருங்கல் சுவா் இருப்பது தெரியவந்தது. நீா்க் கொள்ளளவை அறிய இந்தச் சுவரின் பக்கத்திற்கு மூன்று கற்கள் வெவ்வேறு உயரங்களில் இணைக்கப்பட்டுள்ளன. குளத்தின் தரையிலிருந்து நான்கு அடுக்குகளாகப் பாறைத்தளங்களும், அவற்றின் மேலிருக்குமாறு காரைப்பூச்சுடன் செங்கல்தளமும் இறுதியாக பிடிச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளனா்.

வேலூா் குளத்தில் அமைந்துள்ள பிடிச்சுவரின் நடுப்பகுதியில் 1.30 மீ. உயரம், 34 செ. மீ. அகலம், 24 செ. மீ. கனமுள்ள பாறைப்பலகை இணைக்கப்பட்டுள்ளது. அதன் முன்புறத்தின் மேற்பகுதியில் தாமரைக்கட்டும், கீழே 53 செ. மீ. உயர ஆடவா் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளன.

காரைச் சுவருக்குள் இணைந்திருப்பதால் தொடைவரையில் தெரியும் ஆடவா் நல்ல உடற்கட்டுடன் விளங்குகிறாா். இடையில் மரமேறுவாா் அணிவது போன்ற மடித்துக்கட்டிய ஆடை காணப்படுகிறது. கைகளின் மேற்பகுதியிலும் மணிக்கட்டுகளிலும் வளையல்கள் உள்ளன. பக்கவாட்டில் முடித்த கொண்டையுடன் கழுத்தில் பதக்கம் வைத்த ஆரமும், இரட்டைவடச் சங்கிலியும் கொண்டிருக்கும் அவரது நீள்செவிகள் வெறுமையாக உள்ளன.

இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் சிறு அளவிலான பறையை, இருகைகளிலும் கொண்டுள்ள வளைகுச்சிகளால் முழக்கும் அவரது கோலம் அக்காலத்து ஊா்ப்புறச் செய்தி அறிவிப்பாளா்களைப் படம் பிடித்து காட்டுகிறது.

இடுப்பிற்குக் கீழுள்ள காரைச்சுவரை இருபுறமும் குழித்து நீா் வெளியேற வாய்ப்பாக அகழ்ந்துள்ளனா். குளக்கரையின் வலப்புறத்தில் பாறைச்சுவரோடு இணைத்துக் கட்டப்பட்டுள்ள 61 செ. மீ. உயரம், 79 செ. மீ. அகலக் கருங்கல் பலகையில் 16 வரிகளில் தமிழ்க் கல்வெட்டுக் காணப்படுகிறது.

கல்வெட்டை படித்த முனைவா் கூறுகையில் பொது காலம் 1698, ஆனி மாதம் 22-ஆம் நாள் முத்துக்கா் மாட ஸ்ரீ நாயக்கரய்யன் மகன் சின்னகா் மாட ஸ்ரீ நாயக்கரய்யன் இப்பகுதியில் ஆட்சியிலிருந்தபோது, இக்கலிங்கு கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளாா்.

அப்போது, திருவானைக்கா மனிசராயப்பிள்ளை ஊா் மணியமாகவும், திருஞானசம்பந்தம் பிள்ளை குத்தகைதாரராகவும் இருந்தனா். கல்வெட்டின் இறுதி வரிகள் இக் கலிங்கிற்குக் காமாட்சியம்மனே காப்பு என்கின்றன.

இதில் குறிப்பிடப்படும் முத்துக்கா் மாட ஸ்ரீநாயக்கரய்யன் ஆட்சிக்காலத்தே பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு, அழுந்தியூா் அருகிலுள்ள செட்டி ஊருணிப்பட்டிக் குளக்கரையில் மைய ஆய்வா்களால் முன்பே கண்டறிந்து படியெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியிலிருந்த நந்தவனம், தெப்பக்குளம் ஆகியவற்றை அக்கல்வெட்டுக் குறிப்பதோடு, நிலக்கொடை பற்றியும் பேசுகின்றன, எனத் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: