கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்?

கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்?

கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்?

வரலாற்றில் திருத்தப்படவேண்டிய உண்மைகள் ஏராளமாக இருக்கின்றன. கலிங்கப் போரை நிகழ்த்திய ‘தேவ நாம்பியதசி’ என்பவன் வேறு, புத்த மதத்தைத் தழுவியவரும் புகழ் பெற்ற மௌரியப் பேரரசருமான ‘அசோகன்’ என்பவர் வேறு என்றுதான் வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், 1915-ம் வருடம் மத்தியபிரதேச மாநிலத்தில் ததியா மாவட்டத்தில் ஒருநாள் நிலம் தோண்டும் போது கல்வெட்டுத் தூண் ஒன்று கிடைத்தது. அந்தக் கல்வெட்டில், ‘தேவநாம்பியதசி’ என்பவரும் ‘அசோகன்’ என்பவரும் ஒருவர்தான் என்ற உண்மை வெளிப்பட்டு, வரலாறு திருத்தி எழுதப்பட்டது. மேலும், கல்வெட்டுகள் மற்றும் தொன்மச் சின்னங்களின் முக்கியத்துவத்தையும் அது நமக்கு உணர்த்தியது. அதன் தொடர்ச்சியாக, 1920-21 காலகட்டத்தில் சிந்து நதிக் கரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 4,500 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்று நகரம் புதைந்து கிடக்கிறது என்ற உண்மை வெளிப்பட்டது.

வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவதில், சிறு சிறு சிலைகள், கல்வெட்டுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தவும், வெளிப்படுத்தியவற்றை உரிய முறையில் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் தொல்லியல் துறை. 500 வருட வரலாறு கூட இல்லாத மேற்கத்திய நாடுகள்கூட, தங்களுடைய தொன்மச் சின்னங்களை முறையாகப் பாதுகாத்து வரும் வேளையில், பல்லாயிரம் வருட வரலாற்றுக்கு உரியவர்களான நாமோ, நம் நாட்டின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் சிலைகள், கல்வெட்டுகள் பற்றி அறிவதிலும் பாதுகாப்பதிலும் ஆர்வமோ அக்கறையோ இல்லாமல் இருக்கிறோம்.

சிற்பங்கள் கடந்த வருடம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள மணப்பாக்கம் கன்னிக் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள ஒழலூர் கிராமத்தில், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஒரு கொற்றவை சிலையும், ஒரு கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்களில் ஒருவரான ஆசிரியை இராதா குமார் நம்மிடம் பேசினார்…

‘நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகில் கொற்றவை சிலையும் கல்வெட்டும் மண்ணில் மறைந்தும் மறையாமலும் புதைந்து கிடந்ததை நாங்கள்தான் மீட்டெடுத்தோம். இத்தனைக்கும் அவை 1899-ம் வருடம் தொல்லியல்துறையினரால் ஆவணப்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சிலைக்கு அருகில் இருந்த கல்வெட்டு, 2-ம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்தது. தொடக்க காலத்தில் செதுக்கப்பட்ட சிலை என்பதால், வயிறு ஒடுங்கி, இடுப்பு பெருத்திருக்கிறது. 1,200 ஆண்டுகால பழைமையான சிற்பம் அது. ஒரு காலத்தில் நித்திய பூஜைகள் கண்ட கொற்றவை சிலையை, பாதுகாப்பாக வைக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். ஆனால், ஊர் மக்கள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். கொற்றவை சிலையை துரதிர்ஷ்டத்தின் வடிவமாகப் பார்க்கிறார்கள்.

கிராம நிர்வாக அலுவலர், கோட்டாட்சியர், தொல்லியல் துறை, காஞ்சிபுரம் அருங்காட்சியகம் என்று பல இடங்களிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். இன்னும் தீர்வுதான் கிடைக்கவில்லை. இப்பொழுதெல்லாம் என்னைப் பார்த்தாலே, அந்தக் கிராமத்தினர் சண்டைக்கு வருகிறார்கள். நம் மக்களுக்கு நம் தொன்மை பற்றிய விழிப்பு உணர்வு எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்பொழுதுதான் நம்முடைய தொன்மைச் சிறப்பை உணர்த்தும் சிலைகளையும் கல்வெட்டுகளையும் பாதுகாக்க இயலும்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

நம் நாட்டின் தொன்மங்கள் மற்றும் பாரம்பர்யத்தை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல, தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கும் கோமகனிடம் பேசினோம்…

“சிலைகள், சிற்பங்கள் தொடர்பான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. மக்களிடமும் மரபுச் சின்னங்கள் பற்றிய போதிய விழிப்புஉணர்வு இல்லை. கோயில்களில் காணப்படும் சிலைகள் கலைப் படைப்பாகவும், தொன்மைப் படைப்பாகவும் பார்க்கப்படுவதுமில்லை.

நம் தமிழகத்தில் உள்ள சிற்பங்கள் உயிரோட்டம் மிக்கவை. கர்நாடக மாநிலத்திலுள்ள சிற்பங்களில் கலை நுணுக்கம் இருக்கும். ஆனால், அந்தச் சிலைகளின் முகத்தில் உயிர் இருக்காது. நம் சிலைகளின் தொன்மை மற்றும் சிறப்புகள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு சார்பில் கிராமக்குழு அமைக்கப்படுவது ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது. அந்த நிலை மாறி ஊருக்கு ஊர் பண்பாட்டுக் குழு, மரபுக் குழு அமைக்கப்பட்டு நமது பண்பாட்டுச் சின்னங்களும், பாரம்பர்யச் சின்னங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சிலைத் திருட்டும் பெருகிவிட்டது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கும் சிலைகள் மற்றும் சிற்பங்களை ஆவணப்படுத்த வேண்டும். நம்மிடம் ஆவணம் இருந்தால் மட்டுமே நம் சிலைகளைக் காக்கவும் முடியும், திருடப்பட்ட சிலைகளை மீட்கவும் முடியும்.

பல கோயில்களில் தோட்டங்களிலும், மண்டபங்களிலும் பழைய சிற்பங்கள் கேட்பாரற்றுக் காணப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும் என்றால், பள்ளிக்குழந்தைகளிடம் நம் பாரம்பர்யம், மரபு மற்றும் பண்பாடு பற்றிக் கற்றுக்கொடுத்து, நம்முடைய தொன்மைச் சிறப்பை விளக்கும் சிலைகளிலும் கல்வெட்டுகளிலும் பற்றுள்ளவர்களாக மாற்ற வேண்டும். கோயில்களில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற இயலும்.’’

இது தொடர்பாக மேலும் பல விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் குடவாயில் பாலசுப்பிரமணியம்.

“நம் தொன்மங்கள் அழிக்கப்படுவது உண்மைதான். கோயில்களில் திருப்பணி என்ற பெயரில் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதும், பழைய சிற்பங்கள் மற்றும் சிலைகள் அனைத்தும் மண்டபங்கள் மற்றும் தோட்டங்களில் தூக்கியெறியப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பழங்காலச் சிற்பங்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. புதிதாகச் செய்த சிலைகளைக் கோயிலில் வைத்துவிட்டு, பழைய சிலைகளை எறிந்துவிடுகிறார்கள். பழைய சிவாலயங்களில் கிராம தேவதைகள், பல்லவர் காலச் சிற்பங்கள் அனைத்தும் கேட்பாரற்று புதைந்துகிடக்கின்றன. 10-ம் நூற்றாண்டு காலத்தில் கோயில்களில் ஜேஷ்டா தேவி என்பவள் குழந்தைகளையும், நீர் நிலைகளையும் காக்கும் முக்கிய தெய்வமாக கோஷ்டங்களில் இடம்பெற்றாள். ஆனால், இப்பொழுது அவளை மூதேவி என்று தூக்கி வெளியே எறிந்துவிட்டார்கள். சிலையில் சிறு உடைப்பு ஏற்பட்டிருந்தாலும் அந்தச் சிலையின் முக்கியத்துவத்தை உணராமல் எறிந்துவிடுகிறார்கள்” எனத் தெரிவித்தவர் சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் தெரிவித்தார்.

“சிங்கரசன் பாளையத்தில் வயல்வெளியில் புதைந்த கல் ஒன்றைப் பார்வையிடச் சென்றோம். அந்தக் கல் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நிவந்தமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிப்பது. எல்லைக் கல் என்பதைக் குறிக்க கல்லில் வேல் சின்னத்தையும், பசுபதீஸ்வரர் என்பதைக் குறிக்க பசு ஒன்று லிங்கத்துக்குப் பால் சுரப்பதைப் போன்று கலை நயத்துடன் எல்லைக் கல்லை வடித்திருந்தார்கள். அந்தக் கல்லை அந்த இடத்திலேயே நட்டுவிட்டு வந்தோம். பதினைந்து வருடங்கள் கழித்து அங்கு சென்றிருந்தபோது, அந்த எல்லை கல்லை அம்மன் என்று வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்” என மக்களின் மூட நம்பிக்கையைப் பற்றி தெரிவித்தவர் தொடர்ந்து, “திருவாவடுதுறை ஆதீனத்துக்குட்பட்ட கோமுக்தீஸ்வரர் கோயிலில் கிடைத்த பழைமையான சிற்பங்கள் மற்றும் சிலைகளை வரிசையாக நட்டு மக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். இதைப் போன்று பாதுகாத்தால்தான் நம் ஊர்ச் சிற்பங்களைப் பாதுகாத்திட இயலும்” என்றவர், தொடர்ந்து சிலைகளையும் கல்வெட்டுகளையும் பாதுகாப்பதற்கு ஒரு யோசனையையும் முன் வைத்தார்.

“அந்தந்த ஊர்களில் கிடைக்கும் சிலைகளை அந்தந்த ஊர்க் கோயில்களில் வைத்துப் பாதுகாப்பதுடன் அவற்றை ஆவணப்படுத்தவும் வேண்டும். திருவானைக்காவில் பழைய சிலைகள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் மண்டபத்தில் போடப்பட்டு அழியும் நிலையில் இருக்கின்றன. மைசூரில் இருக்கும் மத்திய தொல்லியல் துறை அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட வேண்டும். ஊட்டியில் செயல்பட்டுக்கொண்டிருந்த மத்தியத் தொல்லியல் துறை மைசூருக்கு மாற்றப்பட்ட பிறகுதான் நிலைமை மேலும் மோசமானது. பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் இன்னும் படியெடுக்காமலும், படியெடுக்கப்பட்டவை ஆவணப்படுத்தப் படாமலும் இருக்கின்றன. கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டால் மட்டுமே நம் வரலாறு முழுமையாகத் தெரியவரும்” எனக் கூறி முடித்தார்.

தொல்லியல் துறை அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். அவர், “தமிழகத்தில் அறிவுசார் நிறுவனங்கள் எதற்குமே போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதிலும் தமிழக தொல்லியல் துறையின் நிலை மிகவும் மோசம். ஒரு காலத்தில் தஞ்சை சரஸ்வதி நூலகத்தில் 65 பேர் பணியாற்றினார்கள். ஆனால், இப்போது 18 பேர்தான் பணிபுரிகிறார்கள். இது உதாரணம்தான். பணிகள் அனைத்தும் தேக்கமடைந்திருக்கின்றன. புதிய ஆட்களை நியமித்துப் பல வருடங்கள் ஆகின்றன. தற்காலிக ஊழியர்களுக்குக்கூட ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனதாகச் சொல்லப்படும் சரஸ்வதி நதியைத் தேடுவதில் இருக்கும் முனைப்புகூட, தமிழகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி அகழ்வாய்வில் இருப்பதில்லை. “கீழடியைத் தோண்டி நம் தொன்மையை வெளிப்படுத்தும் அவசியம் நமக்கு இல்லை” என்று கூறும் நிலையில்தான் நமது அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஓர் இனத்துக்கு வாழ்வாதாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று தொன்மையும் மிகவும் முக்கியம் என்பதைத் தமிழர்களாகிய நாம் இனியேனும் உணர்ந்து செயல்பட்டால்தான், இன்று நாம் இழந்துகொண்டிருக்கும் வாழ்வாதாரத்தையும் தொன்மைச் சிறப்பையும் ஒருசேர மீட்டெடுக்க முடியும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: