திருப்புல்லாணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான வெளிநாட்டு நாணயங்கள்!

திருப்புல்லாணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான வெளிநாட்டு நாணயங்கள்!

திருப்புல்லாணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான வெளிநாட்டு நாணயங்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த 5 நாணயங்களைப் பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தமிழகத்தில், சங்க காலம் முதல் காசுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களால் ஆன காசுகள் பெருமளவில் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள், 2010 முதல் தங்கள் பகுதிகளில், கீழே கிடக்கும் பழைமையான காசுகளைக் கண்டெடுத்து சேகரித்துவருகிறார்கள். பாண்டியர், சோழர், டச்சுக்காரர் கால காசுகளை ஏற்கெனவே சேகரித்துள்ள அவர்கள், தற்போது இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளில், ஆங்கிலேயர் காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகளைக் கண்டெடுத்துள்ளனர்.

இதுபற்றி இப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு கூறுகையில், ”திருப்புல்லாணி இந்திரா நகரைச் சேர்ந்த பாதசெல்வம் என்ற 8-ம் வகுப்பு மாணவர், இலங்கை ‘சதம்’ காசுகளை சேதுக்கரையிலும், தென்னாப்பிரிக்கா ‘பென்னி’ காசை திருப்புல்லாணியிலும் கண்டெடுத்துள்ளார். இலங்கைக் காசு 1 சதம் ஒன்றும், அரை சதம் இரண்டும் கிடைத்துள்ளன. இவை, கி.பி 1901, 1912, 1926 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவை. இவற்றின் ஒரு பக்கத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில், தாளிப்பனை மரம் உள்ளது. அதனருகில் காசின் மதிப்பு தமிழிலும், சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில், அரை என்னும் பின்னம் 10-ம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் உள்ளதைப் போன்ற தமிழ் எண்ணுருவில் உள்ளது. தாளிப்பனை இலங்கையில் அதிகம் காணப்படும் பனை வகை ஆகும். இவை, வட்டவடிவ செப்புக் காசுகள். 1 பென்னி நாணயம், தென்னாப்பிரிக்கா ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்தபோது, கி.பி.1941ல் ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்டது. இதில், மன்னர் மற்றும் பாய்மரக் கப்பலின் படங்கள் உள்ளன. இது, பெரிய அளவிலான வட்டவடிவ வெண்கலக் காசு ஆகும்.

இதேபோல, திருப்புல்லாணியைச் சேர்ந்த மு.விசாலி என்ற 10-ம் வகுப்பு மாணவியின் பாட்டனார் குப்பு, இந்திய விடுதலைக்கு முன், மலேசியா பினாங்குக்கு வேலைக்காகச் சென்று வந்தபோது, 1 சென்ட் காசை அங்கிருந்து கொண்டுவந்துள்ளார். இதை, அவர் வீட்டில் இருந்த பழைய பெட்டியில் தேடி எடுத்துள்ளார். இது, 6-ம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1943ல் வெளியிடப்பட்டது. சதுர வடிவத்தில் உள்ள இதன் முனை வட்டமானது. வெண்கலக்காசு. ‘கமிஷனர்ஸ் ஆஃப் கரன்சி மலேசியா’வால் இது வெளியிடப்பட்டுள்ளது. பினாங்கு, தற்போதைய மலேசியாவின் ஒரு மாநிலமாக உள்ளது.

திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்கள் ராமாயாணத்துடன் தொடர்புடையன. சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். மேலும், வைகையின் கிளை ஆறான கொற்றக்குடி ஆறு, திருப்புல்லாணி வழியாகச் சென்று சேதுக்கரையில் கடலில் கலக்கிறது. இதனால், இக்கடலோரம் பழைய காசுகள் கிடைப்பதுண்டு. ஆங்கிலேயர் ஆட்சியில், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. புனித நீராட இலங்கையிலிருந்து மக்கள் இங்கு வந்துள்ளார்கள். இதன் காரணமாக, இந்த நாணயங்கள் இப்பகுதிக்கு வந்திருக்கலாம். மேலும், இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை ஆங்கிலேயர்கள் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு அதிகளவில் அழைத்துச் சென்றுள்ளனர். இதன்மூலமும் இக்காசுகள் இப்பகுதிக்கு வந்திருக்கலாம். வரலாற்றின் ஆதாரமாக காசுகள் உள்ளன. இப்பகுதிகளில் கிடைக்கும் காசுகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சேகரிக்கும் பணியை மாணவர்கள் செய்துவருவதன் மூலம், நமது வரலாற்றை வெளிக்கொண்டுவரும் அரிய பணியையும் அவர்கள் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: