சித்தன்னவாசலில் உள்ள சமணப் படுகைகளும், குடவரைக் கோயில்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சித்தன்னவாசல் மற்றும் நார்த்தாமலையில் பழைமையான உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ளன. அவை போதிய விழிப்புணர்வும், பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து சேதமடைந்துகொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த ஓவியங்கள் முற்றிலுமாய் அழிந்து போகும் அபாயம் உள்ளது.
கொடும்பாளூரில் முற்றிலும் தரைமட்டமான நிலையில் ஐவர் கோயிலும், பெரும்பகுதி சிதிலமடைந்த நிலையில் மூவர் கோயிலும் ஏரிக்கரை சிவன் காணப்படுகிறது. இக்கோயில்கள் வரலாற்று விழிப்புணர்வு இல்லாத காலங்களில் அழிந்ததைவிடக் கடந்த சில காலங்களில் சேதமடைந்ததே அதிகமென்கிறார்கள் கிராமவாசிகள்.
மலைக்குன்றைச் சுற்றி, அமைந்துள்ள குடுமியான்மலையில், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசை கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. இவை இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு பாறையைக்குடைந்து கட்டப்பட்ட சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சிறப்புமிக்க இவற்றை தொல்லியல்துறை முறையாகப் பாதுகாக்கவில்லை என்பதுதான் வேதனை.
புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குன்றாண்டார் கோயில். நந்தி வர்ம பல்லவனால் கலைநயத்துடன் எழுப்பப்பட்ட குடைவரைக்கோயில் இது. எங்கும் காணக்கிடைக்காத வகையில் சிற்பங்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திருவிழாவின்போது மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களை இங்கு காணலாம். மற்ற நேரங்களில் குன்றாண்டார் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. கலைநயத்துடன் எழுப்பப்பட்டிருக்கும் இந்தச் சிற்பங்களைப் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
மலையடிப்பட்டியில் சிவபெருமான் மற்றும் விஷ்ணுபெருமான் குகை கோயில்கள் அருகருகே காணப்படுகின்றன, பெருமாள் கோயில் மண்டபத்தில் தசவதார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பெருமாள் கோயில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அருகிலேயே இருக்கும் சிவன் கோயில் பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. சிவன்கோயிலை பராமரிக்க வேண்டுமென்பது பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
பல சிறிய மலைகளும், சிலைகள் நிறைந்த குகைகளும் நார்த்தாமலையில் அதிகம் காணப்படுகின்றன. இங்குள்ள விஜயாலய சோழீஸ்வரர் கோயிலில் ஏராளமான கலையழகு மிளிரும் சிற்பங்களும் பல அற்புதச் சிலைகளும் உள்ளன. அரிதாக காணப்படும் வட்டவடிவிலான கருவறை கொண்டது இக்கோயில். கோயில் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள பண்டைய ஓவியங்கள், சிற்பங்கள் பல அழிவின் விளிம்பில் உள்ளன.
விகடன்