பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார்.
பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவல் துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
உரும்பிராயில் 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகனாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர் கல்வி கற்றவர், அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970 களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
1971-ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.
அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பது மட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக் கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.
1973-ல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.
யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.
உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.
சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.
ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.