மனிதனின் மதி கெடுக்கும் மதுவை ஆதரித்த பெரியாரின் மறுபக்கம்!

மனிதனின் மதி கெடுக்கும் மதுவை ஆதரித்த பெரியாரின் மறுபக்கம்!

அண்மையில் (2015) தோழர் திருமாவளவன் செப்.17 பெரியார் பிறந்த நாள் அன்று மதுவிலக்கு பரப்புரை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அதுபோல், அன்புமணி இராம்தாசு ஸ்டாலினுக்கு விடுத்த 10 வினாக்களில், ‘பெரியார் மதுவை கூடவே கூடாது’ என்று கூறியதாக குறிப்பிடுகிறார்.

தோழர் திருமாவளவனும், அன்புமணி இராம்தாசும் பாலர் பள்ளிக்கூடத்தில் பெரியார் தென்னை மரங்களை வெட்டினார் என்று சொல்லிக் கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை போலும். பெரியார் காங்கிரசு பேரியக்கத்தில் இருந்த காலத்தில் தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டி மதுவிற்கு எதிராக செயல்பட்டார் என்பது உண்மை தான். ஆனால் அதற்குப் பின்னர் சாகும் வரை மதுவிற்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதே கசப்பான உண்மையாகும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதை பெரியாரே ஒப்புக் கொண்டு பேசியுள்ளார். அது பின் வருமாறு: “இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது. அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது. கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து. முடிந்த முடிவு. இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும் இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி சொல்கிறேன். (விடுதலை 18.3.71)

1937இல் முதல்வர் இராசாசி சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை கொண்டு வந்தார். அதை ஒடுக்கப்பட்டோர் படித்து வரும் பள்ளிக்கூடங்களை மூடும் பார்ப்பன சூழ்ச்சியாக கருதி மது விலக்கை கடுமையாக எதிர்த்தார்.

அதன் பிறகு கல்விக்கண் திறந்த காமராசர் ஆட்சியிலும் மது விலக்கை ஆதரிக்க மறுத்ததோடு நல்ல சரக்கு வழங்குவது தான் மது விலக்கு கொள்கை என்று வியாக்கினம் தந்து பேசினார். அது வருமாறு:

“மது விலக்கு என்பது உயிர்ச்சத்துள்ள மதுவை விலக்கி விட்டு விஷ சத்துள்ள மதுவை குடிகாரர்களுக்கு உதவுவது போலாகும் என்றும் சொன்னேன். மதுவிலக்கு என்பது மது அருந்துபவர்கள் மதுகடைகளுக்குப் போய் அருந்துவதற்குப் பதிலாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு மது தானே தேடிக் கொண்டு வரும்படி செய்வதாகும். (விடுதலை 29.11.1962)

அடுத்து கும்பகோணத்தில் மது ஆதரவாளர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் குடிப்பவர்களுக்கு சுத்தமான அசல் சரக்கு கிடைக்குமிடத்தை அடையாளங்காட்டும் வகையில் உரை நிகழ்த்தினார். அது பின் வருமாறு: “கள்ளுக்கடைகளில் மது விற்க அனுமதிப்பது கூட சரியான தீர்வு அல்ல. தென்னந்தோப்பில் விற்கப்பட்டுருந்த கள் வணிகப்பொருளாக கடைகளுக்கு விற்பனைக்கு வந்த பிறகு தான் ஊமத்தை இலை, கஞ்சா இலை போன்றவற்றைச் சேர்த்து அதன் தன்மை விஷமாக்கப்பட்டது. நான் பழையபடி கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆரம்பத்தில் சொன்னபடி தோப்பில் கள் விற்க வேண்டும். (விடுதலை 1.2.1963)

நல்ல மதுவை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்த பெரியார் அடுத்து வந்த அண்ணா, கருணாநிதி ஆட்சிக்காலங்களில் மது குடிப்பது தனிமனித உரிமை என்றும் பேசத் தொடங்கினார். அதற்காக கட்டிய மனைவியோடு கலவி செய்வதை ஒப்பிட்டு பேசவும் தயங்க வில்லை. அவர் கடைசி ஐந்து ஆண்டுகள் பேசியதை தொகுத்துப் பார்ப்போம்.

“பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் முட்டாள்தனமான போராட்டமேயாகும்.

(விடுதலை 29.11.1968)

“மது தடைப்படுத்தப்பட்ட நாடு அடிமை நாடேயாகும்” (விடுதலை 16.2.69)

“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.” (விடுதலை 18.3.1971)

“தீபாவளிக்கு லீவு விடுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதை விட இரண்டு பங்கு முட்டாள் தனம் மதுவிலக்கு எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும்.” (விடுதலை 21.10.1969)

“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார்!” (விடுதலை 18.3.1971)

“பத்து கள்ளுக்கடைகள் மூடப்படுவது ஒரு கோயிலைத் திறப்பதற்குச் சமம். கோயிலை மட்டும் வைத்துக் கொண்டு கள்ளுக்கடைகளை மூட வேண்டுமா?”(விடுதலை 20.6.1973)

மேற்கண்ட கருத்துகளை படிக்கும் போது மதுபோதையில் இருப்பவன் கூட இப்படி உளறியிருக்க மாட்டான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 1971இல் முதன் முதலில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்ததற்கு பெரியாரின் மது ஆதரவு கருத்துகளும் காரணமாக இருந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. திருவாரூரில் நடந்த தஞ்சை மாவட்ட தி.க. மாநாட்டில் மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டுமென்று போடப்பட்ட தீர்மானமும் கருணாநிதி மது விலக்கை இரத்து செய்த போது கருணாநிதிக்கு விடுத்த பெரியாரின் பாராட்டு அறிக்கையும் இதனை உறுதி செய்கின்றன.

மனித வாழ்க்கையில் குறிப்பாக தொழிலாளர்களிடமிருந்து மதுவை பிரிக்க முடியாது என்பதால் தான் பெரியார் மதுவை உடலுழைப்போடு இணைத்துப் பார்த்தார் என்று வாதிடுபவர்கள் இங்கு உண்டு. உடலுழைப்புச் சோர்வுக்கு மது தீர்வல்ல என்றும், உறக்கமே நல் மருந்து என்றும் அறிவியல் மருத்துவம் கூறுவதை இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். ஆண்களைக் காட்டிலும் உடலுழைப்பில் கடுமையாக ஈடுபடும் பெண்களையும், அப்பெண்கள் யாரும் குடிப்பதில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்.

மதுவை சிறு வயதில் குடித்துப்பழகியவர் பெரியார். பிற்காலத்தில் அப்பழக்கத்தை அவர் கை விட்டபோதிலும், குடிக்காமலே மதுவில் நன்மை, தீமை பிரித்து வக்காலத்து வாங்கினார் என்பது தான் இங்கு வியப்பான செய்தியாகும். புற்று நோயில் நல்ல புற்று நோய், கெட்ட புற்றுநோய் கிடையாதோ அதுபோல மதுவில் நல்ல மது கெட்ட மது என்பதெல்லாம் கிடையாது.

இறுதியாக ஒன்று. பகுத்தறிவால் மதியை விழிப்படையச் செய்ததாக புகழப்படும் பெரியார் மனிதனை மதியிழக்கச் செய்திடும் மதுவை ஆதரித்த செயலை பகுத்தறிவு உள்ளோர் எவரும் ஆதரிக்க முடியாது!

நன்றி; முனைவர் மா.நன்னன் தொகுத்த ‘பெரியார் கணினி’ நூல்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>