வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த காசிமணி, திருக்கோயிலூர் ஓய்வுப் பெற்ற தலைமையாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான க. நடராஜனுக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, நடராஜன், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் சோ. கண்ணதாசன், முனைவர் பட்ட ஆய்வாளர் கோ. தில்லை கோவிந்தராஜன், ஆசிரியர்கள் உதயசங்கர், ரவிக்குமார் உள்ளடங்கிய குழுவினர் கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இக்கல்வெட்டு குறித்து கண்ணதாசன் தெரிவித்திருப்பது: திருக்கோயிலூருக்குக் கிழக்கே உள்ள பரணூருக்கு அருகில் வீரசோழபுரம் என்ற ஊரில் ஏறத்தாழ 700 ஆண்டுகள் பழைமையான சிதிலமடைந்த சிவன் கோயிலை அவ்வூர்ப் பொதுமக்கள் புனரமைப்புப் பணி செய்யும்போது பாண்டியர் காலக் கல்வெட்டுக் கிடைத்தது.

கோயில் கருவறைக் கட்டடத்தைப் பெயர்த்தெடுக்கும் பணி மேற்கொண்டபோது 1 அடி அகலமும், 6 அடி நீளமும் உள்ள ஒரு பலகைக் கல்லில் 31 வரிகளைக் கொண்ட கல்வெட்டு ஒன்று இருந்தது.

இதில், முதற்குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் சிற்றரசராக விளங்கிய வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான் என்பவரால் வீரசோழநல்லூர் என்ற பெயரில் ஊரினைத் தோற்றுவித்து நில தானங்கள் வழங்கியதை இவ்வூருக்கருகில் உள்ள அறையணிநல்லூர் கல்வெட்டால் அறிய முடிகிறது.

வீரசோழநல்லூரில் உள்ள சோழர்காலக் கோயிலில் கி.பி. 13 -14 ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டு கிடைக்கப் பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் கோமாறபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலசேகரத்தேவரின் 25 ஆம் ஆட்சி ஆண்டு சித்திரை மாதத்தில் பொறிக்கப்பட்டதாகும். அதில் இவ்வூருக்கு காசயக்குடி எனப்படுவோரும் (வரிகளை நாணயமாகச் செலுத்தும் கைத்தொழில் செய்பவர்கள்) இதர வணிகர்களும் ஊரைவிட்டு ஓடிப்போனதால் நீண்ட நாட்களாக இவ்வூர் பாழ்பட்டு இருந்துள்ளது. எனவே இந்நாள் முதலாயமாக (வரியாக) குடிக்குக் குடியான கடமையும் (நிலவரி), தறிகடமை (தறி மீதான வரி) கொள்ளும் விலையாக இந்த ஆறுமாதம் முதல் நாட்டுமரியாதி (நாட்டு நடைமுறை) கொள்ளவும் இரண்டு சமுதாயத்தாரிடம் ஏற்பட்ட வழக்கு உடைய வாசல்பணம் (ஒருவகை வரி) காணிக்கையாக வழங்கிய செய்தியைக் குறிப்பதாக உள்ளது.

இக்கல்வெட்டைப் படியெடுக்க ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பூபாளநைனார், கலியபெருமாள், இளைஞர்கள் உதவி புரிந்தனர். பழைமையான இக்கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்ய தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என இவ்வூர் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: