இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் சூலை 30. அவர் வெறும் முதல் மருத்துவர் மட்டுமல்ல. பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
திருப்பங்கள் நிறைந்த அவரது வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 – சூலை 22, 1968) இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். முத்துலட்சுமி அவர்களின் பெற்றோரே கடும் சமூக எதிர்ப்புகளுக்கு இடையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் சின்ன தாத்தா (தாத்தாவின் தம்பி) முத்துலட்சுமியின் அப்பா. ஆக, ஜெமினி கணேசனுக்கு முத்துலட்சுமி அத்தை முறை. ஜெமினி கணேசன் மீது அன்பு கொண்ட முத்துலட்சுமியின் அப்பா, இறக்கும் முன்பு ஜெமினி கணேசனுக்கும் சில சொத்துகளை எழுதி வைத்து கார்டியனாக முத்துலட்சுமியை நியமித்தார் என்று ஜெமினி கணேசன் தமது சுயசரிதையில் எழுதியிருப்பார்.
பெண்களுக்கு கல்வி கற்க எதிர்ப்பு இருந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்தபடியே படித்து தனித் தேர்வராக எழுதி மெட்ரிக் தேர்வில் தேறிய முத்துலட்சுமி இன்டர்மீடியட் படிக்க புதுக்கோட்டை மகாராஜா கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமே சலசலப்பை உருவாக்கியது.
ஏனெனில் அதுவரை மகாராஜா கல்லூரியில் ஒரு பெண் படித்ததில்லை. அவர் பிற ஆண் மாணவர்களின் படிப்பு கெட காரணமாக இருப்பார் என்று கல்லூரி முதல்வர் கருதினார். ஆனால் மகாராஜா பைரவத் தொண்டைமான் தலையிட்டு அவர் படிக்க அனுமதித்ததோடு, கல்வி உதவித் தொகையும் வழங்கினார். 1912ல் அவர் மருத்துவர் ஆனார்.
முத்துலட்சுமிக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார்.
அவருடைய கணவர் டி. சுந்தர ரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி – சுந்தர ரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. மருத்துவம் படித்த பகுத்தறிவாளரான சுந்தரரெட்டியை தனது 28-வது வயதில் சாதி மறுத்துத் திருமணம் செய்து கொண்டார் முத்துலட்சுமி. தம்மை சமமாக நடத்த வேண்டும், தனது விருப்பங்களில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனைகளின் பேரிலேயே திருமணத்துக்கு அவர் ஒப்புக்கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் – தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.
- 1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
- அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
- 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத் தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
- 1927 முதல் 1930 வரை அவர் சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார். அப்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டு கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமசோதாவை முன்மொழிந்து, அதற்கென வாதிட்டார். இந்த மசோதாவே 1947 சென்னை தேவதாசிச் சட்டம் என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ள சட்ட உரிமை கிடைத்தது. முதலில் தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமே என்று தொடங்கப்பட்ட இந்த விடுதி பிறகு அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் என்று மாற்றப்பட்டது.
- அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
- சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
- நாட்டு மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிக்காக, 1956-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
- 22, ஜூலை, 1968 அன்று முத்துலட்சுமி ரெட்டி உயிரிழந்தார். அப்போது வானொலியில் பேசிய இந்திரா காந்தி, முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு போன்ற பெண்கள் இல்லாமல் போயிருந்தால் நாம் இன்று உயர்ந்த இடங்களைப் பிடித்திருக்க முடியாது என்று புகழாரம் சூட்டினார்.