சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் பகுதிகளில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். கீழடியில், 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பழந்தமிழ் மக்களின் வாழ்வு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. வைகை நாகரீகத்தை உயர்ந்ததாக உலகுக்குக் கூறும் கீழடியில் பலவகை மணிக்கற்கள், எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் பிராமி எழுத்துகளுடைய மண்பாண்ட ஓடுகள் உட்பட ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்திருக்கக்கூடிய நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், முதல்முறையாக தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்ற அகழாய்வு குழிகளை வழக்கம் போல் முழுமையாக மூடிவிடாமல், கீழடி அகழாய்வு தொல்லியல் தளம் என்பது தமிழ் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள், பண்பாட்டு பிரியர்களுக்கு பயன்படும் வகையில் அகழாய்வு குழிகள் அமைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி தொல்லியல்துறை இயக்குனராக உள்ள சிவானந்தம் அவர்களுடன் தாமும் கீழடி 7ம் கட்ட அகழாய்வில் செய்யப்பட்டுள்ள அகழாய்வு குழிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண் உறை கிணறுகள், சுடுமண் கொள்கலன்கள் போன்றவற்றை பார்வையிட்டோம். ஏற்கனவே அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு செங்கற்கள் கட்டுமானங்களையும் ஆய்வு செய்தோம் என்று குறிப்பிட்டார்.
நன்றி : தினகரன்