மண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

மண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

மண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியை அகிலா மற்றும் வரலாற்றுத் துறை மாணவர்கள், திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் நளினி ஆகியோர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகிய மணவாளத்தில் பல்லவர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர். கல்வெட்டுகளை ஆய்வு செய்த டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் கலைக்கோவன் கூறுகையில், அழகியமணவாளம் அருகே உள்ள பாச்சில் மேற்றளி என்றழைக்கப்படும் கோயிலில் இருந்து 1992ம் ஆண்டு 4 கல்வெட்டுகள் மத்திய அரசின் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டிருக்கிறது. இப்புதிய கண்டுபிடிப்புகளுள் பொதுக் காலம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவரின் 2 கல்வெட்டுகள் மிக பழமையானவை.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அவை பொறிக்கப்பட்டுள்ள கருங்கல் பலகை, கோயில் நந்தி மண்டபம் அருகே காணப்படுகிறது. பலகையின் ஒரு புறம் பெரிய அளவிலான முத்தலை ஈட்டியும், மறுபுறம் அரிவாள், சுருள்கத்தி, துரட்டி ஆகியவையும் செதுக்கப்பட்டுள்ளன. நந்திவர்மனின் 15ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள், மணத்துள் அரைசன், குடிதாழி கோவணத்தான் எனும் இரண்டு இடையர் பெருமக்கள் மேற்றளி கோயிலில் விளக்கேற்றிய தகவலை தருகிறது. பொதுக்காலம் 10ம் நூற்றாண்டை சேர்ந்த முதற் பராந்தக சோழரின் 4 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று மேற்றளி கோயிலின் கருவி கலைஞர்களுள் ஒருவரான பாதசிவன், இக்கோயிலில் பகல் விளக்கு ஏற்றுவதற்காக நெற்குப்பையை சேர்ந்த கீழூரில் தரிசாய் கிடந்த நிலத்துண்டை பயன்படுத்தி கோயிலுக்கு அளித்ததாக கூறுகிறது.

அழகிய மணவாளத்துக்கு அருகில் பாச்சில் கிராமத்தில் மணி கிராமத்து மணியர்கள் இருந்ததாக கூறும் மற்றொரு கல்வெட்டு அவர்களுள் ஒருவரான சிராகன், கோயிலுக்கு அளித்த நிலக்கொடையை குறிப்பிடுகிறது. சுந்தர சோழர் அல்லது முதலாம் ராஜராஜனுடையதாக கொள்ளத்தக்க 10ம் நூற்றாண்டு கல்வெட்டு மேற்றளி கோயிலில் ஆடல் வல்ல பெண்கள் இருந்தமையை தெரிவிப்பதோடு அவற்றுள் ஒருவரான தளித்தேவனார் மகள் நக்கன்பாவையான வல்லானைபாகத் தலைக்கோலி. இக்கோயிலில் பகல் விளக்கேற்ற ஏழு கழஞ்சு பொன் அளித்ததாகவும் அதை பெற்ற கோயில் பணியாளர் சிங்கன் ஆச்சான் ,அது கொண்டு நிலத்துண்டு ஒன்றை விளக்கி பெற்று அதன் விளைவால் விளக்கேற்ற ஒப்பியதாகவும் கூறுகிறது. தலைக்கோலி என்பது ஆடல் கலையில் வல்ல பெண்களுக்கு சோழர் காலத்தே அளிக்கப் பெற்ற மிகச் சிறந்த பட்டமாகும்.

நன்னர் பெயரற்ற கல்வெட்டுகள் இரண்டு இக்கோயிலில் பகல் விளக்கேற்ற தரப்பட்ட கொடைகளை பகிர்ந்து கொள்கின்றனர். நக்கன் பெற்றாள் எனும் பெருமாட்டி தன் மகன் சங்கன்பட்டிலியின் நன்மைக்காக 40 வௌ்ளாடும், 5 செம்மறி ஆடும் அளித்து ஒரு விளக்கேற்ற காணப்புலி என்பாரின் நன்மைக்காக மற்றொரு விளக்கும் ஏற்றப்பட்டது. இவ்விரண்டு கொடைகளையும் கோயிலார் தம் பொறுப்பில் ஏற்று அறக்கட்டளையை நிறைவேற்றினர். இந்த புதிய கல்வெட்டுகளால் இப்பகுதியிலிருந்த சில ஊர்களின் பெயர்களும், நில பண்படுத்துதல் தொடர்பான செய்திகளும், நீர் பாசனம் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளதாக வரலாற்றாய்வாளர் கலைக்கோவன் தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் கல்வெட்டு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: