தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

திலீபன் எனும் பார்த்திபன் ராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்திலும் உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர்.

இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம். 1987 செப்டம்பர் 15-ம் தேதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள் :

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறையின் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

1987-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>