கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்!

கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்!

கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்!

மண்ணில் புதையுண்டுபோன எத்தனையோ வரலாறுகளை இந்தியத் தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் மீட்டெடுத்திருக்கின்றன. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மூவேந்தர்களில் பாண்டியர்க்கு மட்டுமே உரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாறுகளையும் அகம், புறம் சார்ந்த 2300-க்கும் மேற்பட்ட சங்கப் பாடல்களைக் கொண்டு ஓரளவு நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. புலவர்களின் பாடல்களில் கற்பனை கலந்திருந்தாலும் வரலாற்று உண்மைகளும் பெருமளவு இடம்பெற்றுள்ளன.

கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள்

மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் “கீழடி’ என்ற பழைமையான கிராமம் அமைந்துள்ளது. ஆளரவமற்ற இக்கீழடி கிராமத்தில் உயர்ந்து நிற்கும் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களிடையே காணப்பட்ட தடயங்களைக் கொண்டு இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் இதுவரை 5000க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளதாகத் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத் தொல்லியல் துறை வரலாற்றில் அதிகமான செங்கல் கட்டடங்கள் உள்ள இடமாகவும் கீழடி கருதப்படுகிறது. இன்றைய அளவிலான மூன்று செங்கற்கள் இங்குக் காணப்படும் ஒரு செங்கல்லுக்குச் சமமானதாக உள்ளது. இத்தகைய செங்கற்களைக் கொண்டு மிக நுட்பமான முறையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தநிலை கால்வாய், மேற்புறம் செங்கற்கள் கொண்டு மூடப்பட்ட கால்வாய், சுடுமண் உருளைகளால் அமைக்கப்பட்ட கால்வாய் என மூன்றும் வெவ்வேறு கோணங்களிலிருந்து ஓரிடத்தில் வந்துசேரும்படியாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வியப்பை ஏற்படுத்துகிறது!

சுடுமண் கலையங்கள், பெரிய பானைகள், இரும்பால் செய்யப்பட்ட ஈட்டிமுனை, கோடாரி, ஆணி, செம்பாலான வளையல், மோதிரம், மைத்தீட்டும் குச்சி, நெல்மணிகளின் பதிவுகளைக்கொண்ட முத்திரைகள், ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளின் கொம்பு அல்லது கூர்முனை கொண்ட எலும்புகள், சங்கு வளையல்கள், அலுமினியத்தாலான காசுகள், எலும்பில் செய்யப்பட்ட கூரிய அம்பு போன்றவையும், இதுவரை வேறெந்த அகழாய்விலும் காணக்கிடைத்திராத யானை தந்தத்தால் செய்யப்பட்ட காதணி, தாயக்கட்டை உள்ளிட்ட பொருள்களும் கண்டெடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கிடைக்கப்பெற்ற பொருள்களின் தன்மைகளைக் கொண்டு இவை கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு. 10-ஆம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலக்கட்டத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என அறிஞர்களால் மதிப்பிடப்படுகிறது. இங்குக் கிடைக்கப்பெற்ற பொருள்களில் வேந்தன், திசன், இயணன்,
சேந்தன், அவதி முதலிய சொற்களும், “”வணிக பெருமூவர் உண்…” என்ற முழுமை அடையாத வாக்கியமும் காணப்படுகின்றன.

சங்கப்பாக்களில் சேந்தன் என்ற மன்னனைப் பற்றிய குறிப்பும் (குறுந். 258:4-7) சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிப்பிடும் மூவர் (புறம். 109, 110) என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளமை அறியப்படுகிறது. “”வணிகப் பெருமூவர்” என்பது வணிக வளத்தில் சிறந்து விளங்கிய மூவேந்தர்களைக் குறிப்பிடுவதாகவும் கருத இடமளிக்கிறது.

கீழடி அகழாய்வில் காணப்படும் கட்டட அமைப்புகள் மற்றும் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் கொண்டு நோக்குகையில் தொழில்நுட்பத்தோடு கூடிய பொருள் உற்பத்தி நிறுவனம் இயங்கி வந்தமைக்கான அடையாளம் தென்படுகிறது.

பழந்தமிழரது தொழில்நுட்பத்தையும் கண்டுப்பிடிப்புகளையும் ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அருங்காட்சியகம் அமைத்து அவற்றைப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கீழடி மக்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமாக உள்ளது. பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாற்றையும் போற்றிப் பாதுகாப்பதில்தான் தமிழராகிய நம் ஒவ்வொருவரது பெருமையும் அடங்கியிருக்கிறது என்பதை மறத்தலாகாது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் யாவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு ஆய்வுப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுமாயின், உலக அரங்கில் தமிழரது பெருமை மேலும் மணம் வீசும்.

– முனைவர் சு. சதாசிவம்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: