கடாரம் அழிவுப்பாதையை நோக்கி…..

kedah_Lembah_Bujang_4கெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்ததாகும். கடாரம் என்ற தமிழ்ச் சொல் எப்படி வந்தது? கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அவர் தென் கிழக்கு ஆசியாவின் மீது படை எடுத்த போது இந்நிலத்திற்கு கடாரம் என்று பெயரிட்டிருக்கிறார். நாளாடைவில் அது கெடா என மாறி அது இப்பொழுது வழக்கத்தில் உள்ளது.

இந்நாடு தென்கிழக்காசியாவின் முதன்மையான நாடுகளில் ஒன்று. முதன் முதலில் தோன்றிய நாடுகளில் ஒன்று. அந்த நாடு, தென் தாய்லந்திலிருந்து மலேசியாவின் வட பேராக் மாநிலம் வரைக்கும் பரவியிருந்தது. கடலால் பாதுகாக்கப்பட்ட அருமையான துறைமுகமும் கடற்படைத் தளமும் கொண்டதாக விளங்கியது. வற்றாத ஜீவநதிகள் பல ஓடின. காட்டுவளமும் மலைவளமும் கனிவளமும் நிறைந்த நாடு. வெள்ளீயம், பொன் ஆகியவை ஏராளமாக அகப்பட்டன. ஒருவகையான முத்துவும் இங்கே ஒரு காலத்தில் கிடைத்தது. இதனுடைய வளத்தின் காரணமாக உணவுப் பொருட்களை அது பலநாடுகளுக்கும் வழங்கியது. அத்துடன் கைவினைப்பொருட்களும் பல நாடுகளுக்கும் சென்றன.

பட்டினப்பாலை

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலையில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது. பூம்புகார் நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்திப் பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.

கடாரம் அழிவுப்பாதையை நோக்கி.....

கடாரம் அழிவுப்பாதையை நோக்கி…..

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு

தமிழகம், ஆந்திரம், கலிங்கம், வங்கம் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தது. அத்துடன் ஏனைய தென்கிழக்காசிய நாடுகள், காம்போஜம், சம்ப்பா, சீனம் ஆகியவற்றுடனும் ரோமாபுரி, அராபியா, எகிப்து, ஃபினீஷியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. பல கோயில்களும் பௌத்த விகாரைகளும் இருந்தன. பைரவ, பாசுபத சைவமும் சாக்தமும் தழைத்தன. அவற்றுடன் பௌத்தமும் செல்வாக்குடன் விளங்கியது. ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் பாலி ஆகிய மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற கடாரத்துக்கு வருவார்கள். தமிழகத்தின் பாண்டியர்கள், பல்லவர்கள் சோழர்கள், வங்கத்தின் பாலர்கள், கலிங்கத்தின் கங்கர்கள் முதலிய அரசவம்சங்களுடன் கடாரத்தரசர்களுக்கு தொடர்புகள் இருந்தன.

பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழரின் படையெடுப்புக்கு ஆட்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்று. மீண்டும் இரண்டாம் ராஜேந்திர சோழரின் காலத்தில் ராஜேந்திரன் என்ற இயற்பெயர் பெற்ற முதலாம் குலோத்துங்க சோழரின் தலைமையில் கடாரத்தரசர்களிடையே சமரசம் நிலவும் வண்ணம் ஒரு கடற்படையெடுப்பும் நடந்தது.

kedah_Lembah_Bujang_kaliamman_templeராஜேந்திர சோழன் அமைத்த ‘Lembah Bujang’

‘Lembah Bujang’ ஒரு மலாய் மொழி வார்த்தையாகும். ஆங்கிலத்தில் இவ்விடத்தை ‘Lembah
Bujang’ என்று அழைக்கிறார்கள். ‘Lembah Bujang’ மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில்
அமைந்திருக்கும் சரித்திர புகழ் பெற்ற சுற்றுலா தளமாகும்.

அக்காலத்தில் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட வியாபார மையமாகவும், ஆட்சியிடமாகவும் இருந்ததுதான் ‘Lembah Bujang’ ஆகும். இதற்கான சான்றுகள் ‘பட்டிணபாலை’ என்ற தமிழ் நூலில் இருந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமிற்றி அப்பொழுது வியாபாரத்திற்கு வந்து சென்ற அரபு மற்றும் சீன நூல்களிலும் ‘Lembah Bujang’-கை பற்றி நிறைய தகவல்கள் இருபதாக Braddly மற்றும் Wheatly-யின் ஆராய்சியில் கூறியிருக்கிறார்கள்.

கெடா மாநிலத்தின் நிலை

kedah_political_mapகெடா, மலேசியத் தீபகற்பகத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். கடாரம் என்பதே இதன் தமிழ்ப் பெயர்.

இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் (Rice Bowl of Malaysia) என்றும் அழைப்பார்கள். இதன் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). அமைதியின் வாழ்விடம் என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. இங்கு லங்காவி எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவு இருக்கிறது.

பொதுவாக, கெடா சமதரையான நில அமைப்பைக் கொண்டது. இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப்படுகிறது. லங்காவித் தீவைச் சுற்றிலும் சின்னச் சின்னத் தீவுகள் நிறைய உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. கெடாவைச் சியுபுரி (Syburi) (தாய்லாந்து மொழியில்: ไทรบุรี) என்று சயாமியர்கள் முன்பு அழைத்தனர்.

கெடா மாநிலத்தின் வடக்கே பெர்லிஸ் மாநிலம், தாய்லாந்து உள்ளன. தெற்கே பேராக், பினாங்கு மாநிலங்கள் இருக்கின்றன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் தலைநகரம் அலோர் ஸ்டார்.

மேரோங் மகாவங்சா:

கெடா மாநிலத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் மேரோங் மகாவங்சா (Hikayat Merong Mahawangsa) எனும் ஒரு காப்பியம் உள்ளது. இதில் மேரோங் மகாவங்சா எனும் இந்து மன்னர், கெடா சுல்தானகத்தைத் தோற்றுவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சுல்தானகம் பிரா ஓங் மகாவங்சா எனும் மன்னரால் 1136 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் இந்த மன்னர் இஸ்லாம் சமயத்தைத் தழுவி சுல்தான்
முஷபர் ஷா என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் கெடா மாநிலப் பகுதி ஸ்ரீ விஜயா பேரரசின் பிடிமானம் இல்லாத கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஸ்ரீ விஜயா பேரரசின் ஆளுமைக்குப் பின்னர் சயாமியர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுக்கு அடுத்து மலாக்கா பேரரசு கெடாவைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களும் சுமத்திராவின் ஆச்சே அரசும் கெடாவின் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தின.

போர்த்துகீசியர்களின் தாக்குதல்:

இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா போர்த்துகீசியர்களின் கைவசம் இருந்தது. வெளித்தாக்குதல்களில் இருந்து கெடாவைத் தற்காத்துக் கொள்ள, 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் பிரித்தானியர்களுக்கு பினாங்குத் தீவு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. பிரித்தானியர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று கெடா பெரிதும் நம்பி இருந்தது.

இருப்பினும் 1811-இல் சயாமியர்கள் கெடாவைத் தாக்கிக் கைப்பற்றினர். பிரித்தானியர்கள் உதவிக் கரம் நீட்டவில்லை. 1909 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில் கெடா சுல்தானகம், சயாமியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

ஜப்பானியர் படையெடுப்பு:

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் மலாயாவின் மீது படையெடுத்தனர். அந்தப் படையெடுப்பில் முதன் முதலாக கிளந்தான் மீது தான் ஜப்பானியர்கள் தாக்குதல் நடத்தினர். அடுத்த தாக்குதலில் கெடா வீழ்ந்தது. அந்தக் கட்டத்தில் சயாமிய அரசு ஜப்பான் நாட்டின் தோழமை நாடு என்பதால் ஜப்பானியர்கள் கெடா மாநிலத்தை முழுமையாகச் சயாமியரிடம் ஒப்படைத்தனர்.

கெடாவை சயாமியர்கள் சியுபுரி என்று அழைத்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் கெடா அரசு பிரித்தானியரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் பின்னர் 1948-இல் கெடா அரசு மலாயா ஒன்றியத்தில் விருப்பமின்றித் தயக்கத்துடன் இணைந்தது. 1958 ஆம் ஆண்டிற்குப் பின்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா (Tuanku Abdul Halim Mu’adzam Shah) அவர்களின் சந்ததியினர் கெடாவை ஆட்சி செய்து வருகின்றனர். இது வரையில் கெடாவை 27 சுல்தான்கள் ஆட்சி செய்துள்ளனர்.

புவியியல்:

மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் கெடா மாநிலம் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு 9,500 ச.கிலோ மீட்டர்கள். (3,700 சதுர மைல்கள்) மாநிலத்தின் மக்கள் தொகை 1,890,098. இங்குள்ள பெடு ஏரி மனிதர்களால் உருவாக்கப் பட்ட மிகப் பெரிய ஏரி ஆகும்.

அரசாங்கமும் அரசியலும்:

அரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இஸ்லாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். கெடா மாநிலத்தில் இப்போது சுல்தான் அப்துல் ஹாலிம் என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 1958-இல் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.

மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார்  (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.

இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார். தற்சமயம் (2011) மாநில மந்திரி பெசாராக டத்தோ ஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் என்பவர் இருக்கின்றார். இவர் (Parti Islam Se-Malaysia எனும் PAS) மலேசிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்தவர்.

பொருளியல்:

கெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று அழைக்கிறார்கள். (மலேசிய மொழியில்: Jelapang Padi) நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு நெல் இங்கு விளைச்சல் ஆகின்றது. ரப்பர், செம்பனை, புகையிலை போன்றவையும் பயிர் செய்யப்படுகின்றது. லங்காவித் தீவு அதிக சுற்றுப் பயணிகளைக் கவரும் சுற்றுலாத் தளமாக சிறப்பு பெறுகின்றது.

1996-இல் கூலிம் உயர் தொழில்நுட்பப் பூங்கா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இது மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்பப் பூங்காவாகும். 14.5 ச.கீலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப் பட்டுள்ளது. இன்டெல் (Intel), பூஜி (Fuji Electric) , சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக்கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்சாலைகளைத் திறந்து செயல்பட்டு வருகின்றன.

அருங்காட்சியகம்:

கெடா மாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வ உருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர். இவை 1500 ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப் பேரரசின் கப்பல் நங்கூரமிட்டு புலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகை தந்தபோது தங்களின் மதச்சடங்குகளையும் பின்பற்றினார்கள்.

அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அரங்கில் காணமுடியும். தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் பருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர். தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களையெல்லாம் அருங்காட்சியகத்தில் காணமுடியும்.

ஒரு காலக் கட்டத்தில் தீபகற்ப மலேசியாவை ஒட்டு மொத்தமாகச் சுவர்ண பூமி என்று சொல்வார்கள்.சுவர்ண பூமிக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொப்புள்கொடி உறவுகள் இன்னும் கூட அறுந்து போகவில்லை. அவை எல்லாம் மறைக்க முடியாத வரலாற்றுப் புதினங்கள்.


உலகத் தமிழர் பேரவை – யில் உங்களை இணைத்துக் கொண்டு, ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை படையுங்கள். இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும் ….


இங்கே குனோங் ஜெராய் எனும் ஓர் உயரமான மலை இருக்கிறது. இதன் உயரம் 1230 மீட்டர். இந்த மலை கடல் கரையில் இருந்து மிகத் தொலைவில் இல்லை. அந்தக் காலங்களில் இந்த மலை கடலோடிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வந்திருக்கிறது.

பூஜாங் பள்ளத்தாக்கு

kedah_Lembah_Bujang_closedகெடா மாநிலத்தில் 1930களில் குவர்ட்ரிச் வேல்ஸ் என்பவரால் பூஜாங் பள்ளத்தாக்கு எனும் ஒரு தொல்பொருள் புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு தொடர்ந்தாற் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-புத்தப் பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், தென் கிழக்கு ஆசியாவிலேயே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரீகம் இருந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அதைத் தவிர, அந்தக் காலக்கட்டத்தில் தென் இந்தியத் தமிழர்ப் பேரரசுகள்பூஜாங் பள்ளத்தாக்கில் ஆட்சிகள் செய்துள்ளன என்பதுவும் தெரிய வந்துள்ளது.

பூஜாங் பள்ளத்தாக்கு (Bujang Valley) மலேசியாவில் வட மூவலந்தீவுப் (வடதீபகற்பம்)பகுதியின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும்புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகத்திற்கும் மேற்கு ஆசியா, ஆசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாகரீகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே கடல் வழியாக வாணிபம் நடந்து வந்தது.

புயங்கம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே “பூஜாங்” என்ற சொல். புயங்கம் என்றால் பாம்பு என்று பொருள்படும். இப்பள்ளத்தாக்கில் உள்ள மெர்போக்கு Merbok River என்ற ஆறு பாம்பைப் போல் வளைந்திருப்பதால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் புயங்கம் என்று பெயர் வைத்தனர்.

இந்தத் துறைமுகம் பெரும்பாலும் ஸ்ரீவிஜயா ஆட்சியுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. பூஜாங்பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா, மேற்கு ஆசியா போன்ற நாகரீகங்களின் சுட்டாங்கல் (செராமிக்) பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை புத்த, இந்து மதங்கள் சம்பந்தப்பட்ட கோவில் கல்வெட்டுகள், கோவில் சிலைகள் போன்றவை ஆகும். இந்த நாகரீகங்கள் மறைந்த கடாரத்துடன் தொடர்பு படுத்துப் படுகின்றன.

அந்த மலையின் அடிவாரத்தில் தான் பூஜாங் பள்ளத்தாக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்கின் பரப்பளவு 224 சதுர கிலோமீட்டர்கள்.

கி.பி.1025 ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்த போது பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதி கடாரம் என்று அழைக்கப் பட்டது. இந்தக் கடாரம் எனும் சொல்தான் காலப் போக்கில் கெடா என்று மருவியது. இராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென்னிந்தியாவில் கரிகாற் பெருவளத்தான் சோழன் எனும் ஒரு வீரமிகு சோழ அரசர் இருந்தார். பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் என்றும் இவருக்கு அடைமொழி உண்டு. பட்டினப்பாலை என்பது பத்துப் பாட்டு இலக்கிய நூல்களில் ஒன்று. இந்தக் காவியத்தைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அதில் வரும் ஒரு பகுதியின் வரிகளைப் படியுங்கள்.

 “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு”

இதில் ‘ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்’ எனும் வரிகள் வருகின்றன. கடாரத்தின் பழைய சொல் காழகம். காழகத்தின் ஆக்கம் என்றால் கடார தேசத்தின் பொருட்கள் என்று அர்த்தம்.

கடார மண்ணின் இறுகிப் போன தமிழர் இரகசியங்கள் இன்னும் மறைந்து போய்  கிடக்கின்றன. கடார மண்ணைப் பற்றி அறிஞர்கள் மிகப் பெரிய அளவில் ஆய்வுகள் செய்துள்ளனர். அந்த ஆய்வுகளை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும். பழம் பெரும் உண்மைகளைச் சொல்ல வேண்டும். உலகத் தமிழர்கள் அந்த அறிஞர்களை என்றென்றும் ஆராதனை செய்ய வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: