காரைக்கால் அம்மையார்!

காரைக்கால் அம்மையார்!

நாயன்மார்களில் காலத்தால் முந்திய காரைக்கால் அம்மையார் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. சைவ நூலான திருமறையில் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.

முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.

பரமதத்தன் என்ற வணிகர் ஒருவருக்கு மணம் முடிக்கப்பட்டார். சிறிது காலத்திலேயே தனது மனைவி தெய்விக அருள் பெற்றவர் என்பதை உணர்ந்த பரமதத்தன், பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார்.சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு “கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.

அதன் பின் புனிதவதி கைலாசத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். இமயத்தை அடைந்து, பின் அங்கிருந்து சிவனின் இருப்பிடத்தை அடையக் கைகளால் ஏற ஆரம்பித்தார். அவரது பக்தியின் தீவிரத்தைக் கண்ட சிவன் அவரை ‘அம்மையே’ என்று அழைத்து என்ன வேண்டும் என வினவினார்.

அதற்குப் புனிதவதி எனக்குப் பிறவா வரம் வேண்டும். அப்படியே பிறந்துவிட்டாலும், உன் கால்களருகே எப்போதும் இருந்து, நீ ஆடும்போது நான் பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்குச் சிவன் திருவாலங்காட்டிற்கு அவர் சென்றால், அங்கே தனது நடனத்தைப் பார்க்கலாம் என்றார்.

மறுபடியும் அம்மையார் கைகளால் நகர்ந்தே திருவாலங்காடு சென்றார். அங்கே கோயிலில் நுழைந்ததும் கருவறையில் சிவன் நடனமாடுவதைக் கண்டார். இந்தப் புள்ளியில் புனிதவதியின் கதை முழுமையடைகிறது.

சிவன் நடனமாடும்போது கூடவே இருக்கும் வரம் அவருக்கு அருளப்பட்டதால் பல நடராஜர் கற்சிற்பங்களில் ஒருபுறம் காரைக்கால் அம்மையார் உருவம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடியும். ஊர்வலப் படிமமாகச் செப்புச் சிலைகள் உருவாக்கப்பட்டபோது அம்மையார் பேயுருவில் இருக்கும் சிறிய செப்புருவம் தனியாகச் செய்யப்பட்டு நடராஜர் செப்புத் திருமேனியுடன் வைக்கப்பட்டது. முந்தைய பிறவியில் அவர் நீலி என்னும் பேயுருக் கொண்ட தெய்வமாக பிறந்திருந்தபோது சிவன் அவளை மணந்திருந்தார். சில கோயில்களில் அம்மையாரின் உருவம் தனி ஊர்வலப் படிமமாகவும் செய்யப்பட்டது.

நாயன்மார்களின் படிமங்கள் ஒவ்வொன்றும் அவரவரைப் புனிதத் தளத்துக்கு உயர்த்திய நிகழ்வைச் சித்தரிக்கும் வண்ணமே உருவாக்கப்பட்டன. நாயன்மார்களைத் தாங்கள் புரிந்துகொண்டபடியே சிற்பிகள் வடிவமைத்தார்கள். எடுத்துக்காட்டாகக் கண்ணப்ப நாயனார் மூன்று வடிவில் காட்டப்பட்டுள்ளார். காரைக்கால் அம்மையார் சிலையைச் செய்வதற்குச் சிற்பிகள் பேயுருவையே தேர்ந்தெடுத்தனர். அம்மையார் தனது உருவத்தை விவரிப்பதைப் படித்தால், அவரை வேறு எந்த உருவில் காட்டுவதும் தெய்வக் குற்றமாகலாம் போலிருக்கிறது.

கொங்கை திரங்கி நரம்பெழுந்து

குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்பங்கி

சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர்

நீள்கணைக் காலோர் பெய்பேய்

தங்கி அலறி உலறுகாட்டில்

தாழ்சடை எட்டுத்திசையும் வீசி

அங்கங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள்

அப்பன் இடந்திரு ஆலங்காடே

மெலிந்த கை கால்கள் துருத்திக் கொண்டிருக்க, தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருக்கும் அம்மையாரின் உருவம், தீக்கிரையான ஒரு வீடுபோல் இருக்கிறது. அவரது தொய்வுற்ற தோள்கள், எலும்பே உருவான உடல் ஒரு இறுக்கத்தை உருவாக்குகின்றன. நெரித்த புருவமும் புடைத்துக் கொண்டிருக்கும் விலா எலும்புகளும் உடலின் வறட்சியைக் கூட்டிக் காண்பிக்கின்றன.

லட்சுமி போன்று எழிலார்ந்த அழகுடன் இருந்த உருவம் இன்று உருக்குலைந்து குழி விழுந்த கண்கள், உலர்ந்த உதடுகளுடன் காய்ந்து போன மரம் போலிருக்கிறது. படிமம் வைக்கப்பட்டிருக்கும் சதுர பீடமும் அலங்காரமற்று இருக்கிறது. தன்னைப் பற்றி அம்மையார் பதிவு செய்திருந்த விவரிப்பைச் சிற்பி வெற்றிகரமாக ஒரு உருவாகப் படைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

காரைக்கால் அம்மையார் பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்களை பாடியுள்ளார். பதினொராம் திருமுறையுள் நான்கு பனுவல்கள் உள்ளன.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 1 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
திருவிரட்டை மணிமாலை – 20 பாடல்கள்
அற்புதத் திருவந்தாதி – 101 பாடல்கள்
தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் இசைத்தமிழின் அன்னை என்று அறியப்படுகிறார். இவருடையப் பதிக முறையைப் பின்பற்றியே தேவார திருப்பதிகங்கள் பாடப்பட்டன.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் :

காரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும். அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

அற்புதத் திருவந்தாதி :

அற்புதத் திருவந்தாதி என்பது சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.[5] இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும். இந்நூலுக்கு ஆதி அந்தாதி என்றப் பெயரும், திருவந்ததாதி என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.

திருவிரட்டைமணிமாலை :

திருவிரட்டைமணிமாலை என்பது இரட்டை மணிமாலையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலினை காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்ததாதி நூலுக்குப் பிறகு படைத்துள்ளார். இந்நூலில் சிவபெருமானின் சிறப்புகளை புகழ்ந்து காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இதனை காரைக்கால் அம்மையார் கோயில் என அழைக்கின்றனர். அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சன்னதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: