தமிழ் நாட்டில் முதல் மொழிப் போராட்டம் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த 1937ஆம் ஆண்டில்தான் ஆரம்பித்தது. இதனால் காங்கிரஸ்தான் இங்கே இந்தியை முதலில் புகுத்தியது என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸின் தேர்தல் புறக்கணிப்பால் 1920இல் சென்னை மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை நீதிக்கட்சி கைப்பற்றியது. அது காங்கிரஸை கடுமையாக எதிர்த்து வந்த போதிலும் மொழிக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரஸின் பாதையிலேயே நடைபோட்டது.
சென்னை மாகாணத்தில் இத்தியைப் பரப்ப முயற்சி மேற்கொண்டதில் நீதிக்கட்சி அரசாங்கத்துக்கு முக்கிய பங்கிருக்கிறது. சென்னை மாகாண கல்விச் சட்டத்தை (Madras Education Act) திருத்தி ஒரு உத்தரவை அது வெளியிடப்பட்டது. அதன் மூலம் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை விருப்பப் பாடமாக எடுத்துப் பயில்வதற்கு சென்னை மாகாணத்தில் முதன்முதலாக வழி செய்யப்பட்டது.
பொப்பிலி தலைமையில் அமைந்த நீதிக்கட்சி அரசாங்கம் உயர்நிலைப் பள்ளிகளில் இரண்டாவது மொழியாக பயிலப்பட்டு வந்த இந்தியை கட்டாயப் பாடமாக மாற்றி உத்தரவிட்டது.
பொப்பிலி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் உயர்நிலைப் பள்ளியின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. தென்னக மொழியொன்றைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களின் நலன் கருதி இந்தி இரண்டாவது மொழியாகப் பயிலப்படலாம் என அப்போது உத்தரவிடப்பட்டது. நீதிக்கட்சியின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக சென்னை மாகாணத்தில் பல பள்ளிகளில் இந்தியும் இந்துஸ்தானியும் கற்பிக்கப்பட்டன.
1936இல் நீதிக்கட்சி அமைச்சரவை பதவி விலகியது ராஜாஜி அமைச்சரவை தேர்ந்தெடுக்கப் படுவதற்கும் (1937) நீதிக்கட்சி அமைச்சரவை பதவி விலகிய காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகாரத்திலிருந்த ‘இடைக்கால அமைச்சரவை’ மில் பொதுப்பணித்துறை அமைச்சராக கலிபுல்லா என்பவர் இருந்தார். உருது பேசும் முஸ்லீமான கலிபுல்லா தமிழிலும் நிரம்பத் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் இத்திரைப்படத்தில் புகுத்திய நீதிக்கட்சியின் செயலை அவர் கடுமையாக விமர்சித்தார். இப்போது திராவிடக் கட்சியினர் பலர் கூறிக் கொண்டிருப்பது போல தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்திக்கான அடித்தளத்தைப் போட்டது ராஜாஜி அல்ல.
அவர் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சியின் போது மாவட்ட போர்டுகளின் ( District Boards) கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 104 பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப் பட்டு வந்தது.
1921க்கும் 1931க்கும் இடையிலான பத்து ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
1931இல் சென்னை மாகாணத்து மக்கள் தொகையில் பன்னிரண்டு இலட்சத்து முப்பதாயிரம் பேர் இந்துஸ்தானியும் , 19740 பேர் இந்தியும் பேசுபவர்களாக இருந்தனர். அதில் 14963 பேர் சென்னை நகரத்திலும், அதன் அருகாமையிலுள்ள தமிழ்ப் பகுதிகளிலும் வசித்தனர்.
சென்னை மாகாணத்தில் தமிழ் நாடு தவிர, பிற பகுதிகளில் இந்தி மீதான “மோகம்’ அதிகமாக இருந்தது.
1938இல் இந்தி பிரச்சார சபா நடத்திய தேர்வில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 17574 பேர் கலந்து கொண்டனர். அவர்களுள் 2437 பேர் மட்டுமே தமிழ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் நீதிக்கட்சிக்காரர்கள் குதித்தது வெறுமனே அரசியல் இலாபத்துக்காகத்தான்
என்பது புரியும்!
- ரவிக்குமார்