பாரதி கவிதைகளின் முதல் மொழி பெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ்!

பாரதி கவிதைகளின் முதல் மொழிபெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ்!

பாரதி கவிதைகளின் முதல் மொழிபெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ்!

மகாகவி பாரதியின் பாடல்களை உலக மொழிகளிலெல்லாம் மொழி பெயர்க்க வேண்டும் என முதலில் கனவு கண்டவர் பாரதிதாசன். ‘தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த தமிழ்ப்பாட்டை மொழி பெயர்த்தால் தெரியும் சேதி’ என்று அவர் பாடினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

பாரதியின் ‘சுதேச கீதங்கள்’ கவிதை நூலுக்கு ஆங்கிலேய அரசாங்கம் 1928-ல் தடைவிதித்தபோது, காந்தியடிகள் தம் ஆங்கில ஏடான ‘யங் இந்தியா’விலும் குஜராத்தி ஏடான ‘நவஜீவ’னிலும் பாரதி பாடல்களின் மொழி பெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டார். சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு 1963-ல் பாரதியின் பாடல்கள் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் எனக் கருத்துரைத்தார்.

இன்று உலக மொழிகள் பலவற்றிலும் பாரதி பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ராஜாஜி தொடங்கி செக் நாட்டின் கமில் சுவலபில் வரை பலரும் மொழி பெயர்த்திருக்கின்றனர். ‘செக் மொழியில் பாரதி பாடல் தொகுதி ஒன்று பல லட்சம் பிரதிகள் விற்றுள்ளதாம்’ என்று ரா.அ.பத்மநாபனின் ‘சித்திர பாரதி’ என்ற நூலில் ஒரு குறிப்பு உள்ளது. பாரதியின் கவிதைகளை மொழி பெயர்க்கும் முயற்சி இன்று நேற்றல்ல, பாரதி வாழ்ந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது. பாரதியே தன் கவிதைகள் சிலவற்றை முதலில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆங்கிலேய அரசுக்குச் சமர்ப்பிப்பதற்காக அரசின் மொழி பெயர்ப்பாளர்கள் பல கவிதைகளை மொழி பெயர்த்தனர் என்பதும் வரலாறு.

பாரதி வாழ்ந்த காலத்திலேயே புகழ் பெற்றிருந்த அயல்நாட்டு அறிஞர் ஒருவர் பாரதி பாடலை முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார். அவர்தான் அயர்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் எச்.கஸின்ஸ். அந்தக் கவிதை மொழிபெயர்ப்பு அன்னிபெசண்ட் நடத்திய ‘நியூ இந்தியா’ இதழில் 21.06.1916 அன்றய தினம் வெளி வந்தது. ‘வேண்டுமடி எப்போதும் விடுதலை’ எனத் தொடங்கும் ‘விடுதலை’ என்னும் கவிதையே அவரால் ‘லிபரேஷன்’ என்னும் தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டது.

பாரதியின் கவிதையை முதலில் மொழி பெயர்த்ததோடு, பாரதியை அவர் வாழும் காலத்திலேயே இந்தியாவின் நான்கு முதன்மையான கவிஞர்களுள் ஒருவராகவும் கஸின்ஸ் மதிப்பிட்டிருந்தார். பிற மூன்று கவிஞர்கள் அரவிந்தர், தாகூர், சரோஜினி நாயுடு. அந்தப் பதிவு அன்னிபெசண்ட் நடத்திய ‘காமன்வீல்’ இதழில் 08.12.1916-ல் இடம்பெற்றது.

அயர்லாந்து நாட்டிலிருந்து வருகைதந்து அன்னிபெசண்ட்டோடு இணைந்து செயல்பட்டவர் கஸின்ஸ். சிறந்த கவிஞராகவும் திறனாய்வாளராகவும் திகழ்ந்த இவர் பெசண்ட் நடத்திய இதழில் இலக்கியப் பகுதிக்குப் பொறுப்பேற்றிருந்தார். மதனப்பள்ளியில் நிறுவப்பட்டிருந்த கல்லூரியிலும் பதவிவகித்தார். பல முக்கியமான நூல்களை எழுதிய அவர் சிலகாலம் ஜப்பான் ‘இம்பீரியல்’ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். இப்படிப்பட்ட பெருமைக்குரிய இவர்தான் பாரதி எழுதிய கவிதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவராக வரலாற்றில் முகங்காட்டுகின்றார்.

பாரதியின் ‘வேண்டுமடி எப்போதும் விடுதலை’ கவிதையைக் கஸின்ஸ் மொழிபெயர்த்ததையும், அந்த மொழிபெயர்ப்பு ஏற்படுத்திய விளைவையும் பாரதிதாசன் விரிவாகவும் சுவையாகவும் தனது ‘தேன்கவிகள் தேவை’ என்னும் கவிதையில் விவரித்துள்ளார். ‘சுதேசமித்திரன்’ இதழ் பாரதியின் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தராமல், அவரது உரைநடைக்கே முக்கியத்துவம் தந்த நிலையை, ‘நியூ இந்தியா’வில் வெளிவந்த இந்த மொழிபெயர்ப்பு மாற்றியமைத்து, அவரது கவிதைகளை ‘சுதேசமித்திரன்’ வெளியிட வழிவகுத்ததாம். பாரதிக்கு இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டது என்று பாரதிதாசன் எடுத்துரைத்துள்ளார்.

கஸின்ஸ் பாரதியைச் சந்தித்திருக்கலாம். பாரதியும் கஸின்ஸை நன்றாக அறிந்திருந்தார். பாரதியின் நூல் வெளியீட்டு முயற்சிக்காகப் பாரதியின் பார்வையில் உருவான ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ அறிக்கையில் கஸின்ஸ் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தார்:

‘‘ஐர்லாந்து தேசத்து மஹா கவிகளில் ஒருவரும், ஜப்பான் தேசத்தின் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்திலுள்ள இம்பீரியல் யூனிவர்ஸிடி என்ற ஸாம்ராஜ்ய ஸர்வ கலா ஸங்கத்தில் இங்கிலீஷ் ஆசிரியராக விளங்கியவருமாகிய ஜேம்ஸ்-எச்-கஸின்ஸ் என்பவர் இவருடைய தமிழ்ப் பாட்டுக்கள் சிலவற்றை இங்கிலிஷில் மொழிபெயர்த்து மேல் நாட்டார் வியப்புறும்படி செய்திருக்கிறார்.”

இந்தப் பதிவு பாரதியின் சில கவிதைகளை கஸின்ஸ் மொழிபெயர்த்ததற்கு முக்கியச் சான்றாகும். எனினும், இதுவரை கஸின்ஸ் மொழிபெயர்த்த ஒரு கவிதை மட்டுமே கிடைத்திருந்தது. பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் இந்த அறிக்கை வழங்கும் செய்தியின்படி கஸின்ஸ் மொழிபெயர்த்த வேறு கவிதைகளும் இருத்தல் வேண்டும் என்பதனையும் அவற்றைத் தேட வேண்டும் என்பதனையும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“தமிழ் வளர்ப்புப் பண்ணை அறிக்கையில், ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் அவர்கள் பாரதியின் பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்துள்ளதாகத் தெரிவித்திருந்தபோதிலும், நமக்குக் கிடைத்துள்ளது இந்த விடுதலைப் பாட்டு ஒன்று மட்டும்தான். ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட பாரதியின் வேறு சில பாடல்கள் கிடைக்க வழி உண்டா? என்பதை அறிய பாரதீய உலகம் முயல வேண்டும்.” (காலவரிசை. பாரதி படைப்புகள், தொகுதி. 12, பக். 423)

கஸின்ஸ் மொழிபெயர்த்த பாரதி பாடல் ஒன்று மட்டுமே இதுவரை கிடைத்திருக்கிறது. எனவே, பாரதி பாடல்கள் சிலவற்றை அவர் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிடும் வாசகம் மிகை நவிற்சியோ என ஐயுறுவாரும் தமிழுலகில் உள்ளனர். இந்நிலையில், கஸின்ஸ் மொழிபெயர்த்த பிறிதொரு பாரதி பாடல் இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

1917-ல் வெளிவந்த கஸின்ஸின் ‘தி கார்லாண்ட் ஆஃப் லைஃப்’ (போயம்ஸ் ஆஃப் வெஸ்ட் அன்ட் ஈஸ்ட்) என்னும் நூலில் இம்மொழிபெயர்ப்புக் கவிதை வெளிவந்துள்ளது. ‘சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ?’ எனத் தொடங்கும் ‘கண்ணம்மா என் காதலி’ பாடலையே கஸின்ஸ் மொழிபெயர்த்து இந்நூலில் வெளியிட்டுள்ளார். இம்மொழிபெயர்ப்பு ‘எ கோபி சாங்க் டூ  கிருஷ்ணா’ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இந்நூலில் இக்கவிதை ‘இந்தியன் பாராப்ரேசஸ்’ என்னும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தியக் கவிதைகளுக்கான இப்பகுதியில் கஸின்ஸ் தமிழுக்கே முதலிடம் தந்திருக்கின்றார்.

தமிழிலிருந்து மொழிமாற்றம் செய்த கவிதைகளை முதலில் இடம்பெறச் செய்த பின்னரே மராட்டியின் துக்காராம் கவிதையையும், ரகுநாத பண்டிதர் கவிதையையும் சம்ஸ்கிருதத்தின் பர்த்ருஹரி கவிதையையும், இந்தியின் ராணி மீராபாயின் கவிதைகளையும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளார். தமிழிலிருந்து இரு கவிதைகளைக் கஸின்ஸ் மொழிமாற்றம் செய்து உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார். தமிழிலிருந்து முதலிடம் பெறுவது பாரதியின் கவிதை. அடுத்து, ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்னும் அப்பர் கவிதையின் மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. இந்திய அளவில் மொழிபெயர்த்து உலகுக்கு அறிமுகம் செய்யப்பெற்ற கவிஞர்களுள் சமகாலக் கவிஞராகப் பாரதி மட்டுமே விளங்குகின்றார். இந்த ஆங்கில ஆக்கத்தைத் துல்லியமான மொழிபெயர்ப்பு வடிவம் என்பதைவிடச் சாரத்தை உள்ளடக்கிய மொழிமாற்று வடிவம் என்பது பொருத்தமாக இருக்கும். கஸின்ஸே ‘இந்திய மொழிக் கவிதைகளை வரிக்கு வரி மொழிபெயர்ப்பது என்பது இயலாத செயல்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். சிருங்கார பாவம் விஞ்சியிருக்கும் ஒரு பகுதி கஸின்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விடுபட்டுள்ளது.

பாரதி குறித்த ஒரு முக்கியமான குறிப்பையும், இக்கவிதை மொழிபெயர்ப்பு தொடர்பான சில செய்திகளையும் நூலின் இறுதியில் தனியே பதிவு செய்துள்ளார் கஸின்ஸ். பாரதி பாடலை மொழிபெயர்க்கும்போது, பரம்பொருளை அடைய முயலும் மனித ஆன்மாக்களைப் பெண்கள் எனவும் இறைவனை ஆண் எனவும் வழக்கமாகக் கொள்வதுபோலக் கொண்டு முதலில் எண்ணியதாகவும், பின்னரே பாரதி ஆன்மாவை ஆணாகவும் பரம்பொருளைப் பெண்ணாகவும் படைத்திருப்பதனை அறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

பாரதியைப் பற்றி இந்தக் குறிப்பில் கஸின்ஸ், ‘சி.சு.பாரதி நன்கு அறியப்பட்ட தமிழ்க் கவிஞர்’ எனவும், சென்னைக்குத் தெற்கே சில கல் தொலைவில் உள்ள புதுச்சேரி என்னும் பிரெஞ்சு ஆட்சிப் பகுதியில் அரசியல் அகதியாக அரவிந்தரோடு வாழ்ந்துவருகின்றார் எனவும் பதிவு செய்துள்ளார். இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இம்மொழிபெயர்ப்புக் கவிதையும், குறிப்பும் பாரதி சமகாலத்தில் உரிய இலக்கிய வட்டங்களில் சிறப்பாக மதிக்கப்பட்ட நிலையை உணர்த்துகின்றன. வாழும் காலத்திலேயே பாரதி உலகளாவிய அயல்நாட்டு அறிஞர் ஒருவரின் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளைப் பெற்றுப் போற்றப்பட்ட பெருமித நிலையை வெளிப்படுத்துகின்றன.

  • ய.மணிகண்டன்- பேராசிரியர்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: