கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா!

கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா!

கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா!

போரின் கொடூரத்தை எழுத்துகளால் மட்டுமே படித்துவந்த காலம் கடந்து, காட்சிகள் வழியேயும் காணச் செய்யும் தொழில் நுட்பக் காலம் இது. தமிழ் நிலப்பரப்பில், அரசர் காலத்துப் போர்களைப் படித்து வந்த நமக்குக் குருதி வழிந்தோட, உறுப்புகள் சிதைந்து சிதற… நிலமெங்கும் துயரத்தைத் தந்தது 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடத்தப்பட்ட இறுதிப்போர். இலங்கையில், பல ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் தம் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருந்தனர். அகிம்சை போராட்டம், ஆயுத போராட்டமாக மாற்றமடைந்தது. அதை ஒடுக்க, பல்வேறு நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு தொடுத்த பெரும் போர்தான் அது. அதில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக, அதிகாரபூர்வமாக அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் எண்ணம். ஆயுதம் தாங்கிய இயக்க வீரர்களைப் போலவே, கலை சார்ந்து இயங்கியவர்களும் கொல்லப்பட்டனர். (கவிஞர் புதுவை ரத்தினத்துரைக்கு என்னவாயிற்று என்பது இதுவரை தெரியவில்லை) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் மரணம் உலகையே உலுக்கியது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


யாழ்ப்பாணம் மாவட்டம், நெடுந்தீவில் 1981-ம் ஆண்டு மே மாதம் 2-ம் நாள் பிறந்தவர் (சோபனா) இசைப்பிரியா. யாழ்ப்பாணம் கல்லூரியில் படித்து வந்தவர், அந்நகர் இலங்கை அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் வன்னிக்கு இடமாறுகிறார். ஆயினும், யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்கள் இசைப்பிரியாவைப் பெரிதும் பாதித்தது. வன்னியில் மேல் படிப்பு முடித்தவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில் 1998-ம் ஆண்டு இணைகிறார். அங்குதாம், சோபனா எனும் பெயர் இசையருவி என்று மாற்றப்படுகிறது. நிகழ்ச்சிகளில் இடம்பெறும்போது இசைப்பிரியா என்று குறிப்பிடப்பட்டது. இயக்கத்தின் செய்திகளை, கருத்துகளை, நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பணியைச் சிறப்பாகச் செய்துவந்தார்.

தமிழீழத் தொலைக்காட்சியில் போராட்டத்தில் மாண்டுபோன மாவீரர்களைப் பற்றிய ”துயிலறைக்காவியம்’ நிகழ்ச்சி இசைப்பிரியாவின் குரலில்தான் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி, இன்றும் பலரின் நினைவுகளை விட்டு அகலாத ஒன்று. செய்திகள் வாசிப்பது என்று மட்டுமல்லாமல், பல்வேறு குறும்படங்களில் நடிப்பதும் அதன் பணிகளில் பங்கேற்பதும் இசைப்பிரியாவின் வழக்கம். அவ்வகையில், ‘ஈரத்தி’ எனும் படம் மிகவும் முக்கியமானது என எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார். ‘அந்தப் படத்துக்கான திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்தது ஈழத்துப் பெண் போராளிகள்’தாம் எனப் பதிவுசெய்திருக்கிறார்.

விடுதலைப் போராட்டமே தம் வாழ்க்கை என்றிருந்தவருக்குத் திருமணம் செய்துவைக்க குடும்பம் விரும்பியது. அவரின் 26 வது வயதில் இயக்கத்தின் தளபதியாக இருந்த ஶ்ரீராம் என்பவரோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அகல்யா எனும் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், 2009-ம் ஆண்டு போர்ச்சூழலில் சரியான மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் அக்குழந்தை இறந்துவிடுகிறது. இது இசைப்பிரியாவைத் தாளமுடியாத வேதனைக்குள்ளாக்குகிறது. போரின் தீவிரம் முற்ற இலங்கை அரசிடம் சரணடைந்தவர்கள் ஏராளம். அவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். ஆனால், அங்கே அவர் கடுமையான பாலியல் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசைப்பிரியா கொல்லப்பட்டு கிடக்கும் படங்களும் ராணுவம் அவரிடம் கருணையற்று நடந்துகொண்ட வீடியோவும் பார்க்கும் ஒவ்வொருவரையும் கண்ணீர் சிந்த வைப்பவை.

அகரமுதல்வன் இசைப்பிரியாவைப் பற்றி ஈழத்து எழுத்தாளர் அகரமுதல்வன், ”இசைப்பிரியாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். முதன்முறையாக எப்போது என்று நினைவில் இல்லை. ஆழிப்பேரலை அனர்த்தகாலத்துக்குப் பின்னான புனர்வாழ்வுப் பணிகளில் அடிக்கடி அவரைப் பார்ப்பேன். ஆனால், கதைத்தது கிடையாது. 2000-க்குப் பிறகான ஈழத்தலைமுறைக்கு இசைப்பிரியா அக்காவின் முகத்தை மறக்க முடியாது. அவர் கலை நிகழ்ச்சிகள் வழியே தன் விடுதலைக்கான பங்கை ஆற்றினார். ஈழப் பெண்களின் உடல்மொழிக்கான ஓர் அடையாளமாக இசைப்பிரியா அக்கா நடித்த காட்சிகளைக் கூறலாம். குறிப்பாக, மீன்காரப் பெண்ணாக ஒரு பாடலில் வருகிறாரல்லவா. அது மட்டுமல்ல நிறையக் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்பவராக இசைப்பிரியா பணியாற்றினார். புலிகள் இயக்கத்தின் ஒளிபரப்புச் சேவையில் செய்திகளை வாசித்து வந்தமையால் அவரை நிறையச்சனங்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். இதனால், இயக்கத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருக்கும் எல்லோருக்கும் இசைப்பிரியாவின் முகம் பழக்கமானது.

இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கலை, பண்பாட்டு, அரசியல் முகம் எனச் சொல்லாம். ஏனென்றால், புலிகள் அரசியல் சார்ந்த முன்னெடுப்புகளில் காட்டிய கவனத்தை, கலை பண்பாட்டில் செலுத்த வில்லை எனும் குற்றச்சாட்டுகளுக்கு இவர் போன்ற நிறையப் பெண் போராளிகள் ஒரு சான்று. இசைப்பிரியாவின் பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரைக் கொடூரமாய் கொன்றொழித்த காலத்தை ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாது. போராட்ட காலத்திற்குள் ஈழப்பெண்களின் வாழ்வியல் உடல்மொழியை உலகுக்கு உணர்த்திய எங்கள் இசைப்பிரியாவே இன்று எங்கள் தேசத்தின் பெண்களுக்கு நடந்த போர் குற்ற வன்முறைகளுக்குச் சாட்சியாகவும் தோன்றுகிறாள். இசைப்பிரியா அக்கா இன்னும் உலகின் அநீதியோடு போராடிக்கொண்டேயிருக்கும் தமிழீழப் பெண்களின் சித்திரம். அவரின் இறுதி நேரம் பற்றிய செய்திகள் வாசிப்பவரைப் பதற வைக்கிறது. இவ்வுலகம் நீதி வழுவாமல் நின்று போர் செய்த தமிழினத்திற்கு தந்த குரூரங்களை இசைப்பிரியாவும் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இசைப்பிரியா இப்போதும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழீழ விடுதலைப் போராளி.” என்பதாக நினைவுகூருகிறார்.

இசைப்பிரியாவைப் பற்றி எழுத்தாளர் தமிழ்நதி எழுதிய கவிதை:

மறுபடியும் மறுபடியும்…

அவள் மறுபடியும் மறுபடியும்
சேற்றிலிருந்து எழுந்து வருகிறாள்
மறுபடியும் மறுபடியும்
‘நானில்லை நானில்லை’ என்று மறுதலிக்கிறாள்
எல்லாக் கனவிலும் அப்பியிருக்கிறது சேறு
எல்லோர்மீதும்
சுழன்று சுழன்று இறங்குகிறது வெள்ளைத்துணி
திறந்த மார்புகளும் விரிந்த கால்களுமாய்
எல்லோரும் நிர்வாணமாகக் கிடக்கிறோம்
எல்லோர்மீதும்
இழிவின் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன
குற்றவுணர்வோடு மண்டியிட்டிருக்கும்
எல்லோரது தேகங்களும் அதிர்ந்துகொண்டிருக்கின்றன
நினைவின் முடிவற்ற சாலையில்
அவளும் விரைந்து தொலைவாள்
எல்லோரும் தொலைந்ததுபோல்!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: