தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு!

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு!

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு!

சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் புவியியல் தகவல்களைப் (Geographical Facts)படிப்போர், அவர்களுடைய பரந்த அறிவை எண்ணி வியப்பார்கள். குமரி முதல் இமயம் வரை என்று இன்று நாம் பயன்படுத்தும் சொற்றொடரை முரஞ்சியூர் முடிநாகராயர், ஆலத்தூர்கிழார், காரிகிழார், குறுங்கோழியூர் கிழார், முடமோசியார், பரணர், குமட்டூர் கண்ணனார் முதலிய புலவர்கள் பயன்படுத்துகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


உலகிலேயே உயரமான மலை இமயமலை என்பது, இன்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயரத்தை அளப்பதற்கு நவீன விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே, மிக உயரமான மலை இமயம் என்பதை பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் மன்னர்களை, “இமயம் போல வாழ்க” என்று வாழ்த்தினர். உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயரும் (புறம் 2) விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழாரும் (புறம் 166) கோபெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனாரும் (புறம் 214) இவ்வாறு வாழ்த்துகின்றனர்.

“அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கின், துஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே
-புறம் 2-

………..நெடுவரைக் கசைவளர் இமயம்போல,,
நிலிசீயர் அத்தை, நீ நிலம் மிசையானே
-புறம் 166

………….இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே
-புறம் 214

ஏறக்குறைய 25 இடங்களில் இமயத்தைப் புகழ்ந்து பாடுகின்றனர் சங்கப்புலவர்கள். அது மட்டுமல்ல. பரணர் என்ற புலவர் இமயமலைக்காட்சிகளை தத்ரூபமாக வருணிக்கிறார். அதிலுள்ள புகழ்பெற்ற “பொற்கோடு” என்ற சிகரத்தையும் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “காஞ்சன சிருங்கம்” என்று வடமொழியில் கூறப்படும் இது மருவி, “கஞ்சன் ஜங்கா” என்று இன்று அழைக்கப்படுகிறது.

“பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன”
-பரணர், புறம் 369-

“ஆரியர் அலறத்தாக்கி, பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை வணங்குவில் பொறித்து”
பரணர், அகம், 396

“கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை
வடதிசை எல்லை இம்யமாகத்
தென்னங்குமரியோடாயிடை அரசர்
-பரணர், ப.பத்து 43-

இதில் “கடவுள் நிலை இய கல்லோங்கு நெடுவரை” என்பது காளிதாசனின் “தேவதாத்மா ஹிமாலய” என்ற வரியை பிரதிபலிப்பதாக உள்ளது. குமரி முதல் இமயம் வரை உள்ள பகுதிகளை பரணர் அறிந்திருந்தார். குமட்டூர் கண்ணனார் என்ற புலவரும் (ப.பத்து 11) இதே கருத்தைப் பாடியுள்ளார். இமயமலையிலுள்ள அன்னப்பறவைகளையும் பரணர் (நற்.356) வருணிக்கிறார்.

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியும் (மேகாலயா, இந்தியா) இமயமலைத்தொடரில் தான் உள்ளது. இதை அறிந்துதானோ என்னவோ சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாராட்டும் ஆலத்தூர் கிழார் இவ்வாறு கூறுகிறார்.

“சான்றோர் செய்த நன்றுண்டாயின்
இமயத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமசை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே.
–புறம் 34–

“இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்மை இருக்குமாயின், இமயமலையில் திரண்டு இனிய ஓசையை உண்டாக்கிவரும் பெரிய மேகம் பெய்த நுட்பமான மழைத்துளிகளை விடப் பலகாலம் வாழ்வாயாக” என்று ஆலத்தூர் கிழார் வாழ்த்துகிறார்.

கடல் பற்றி பரணர் கூறும் கருத்தும் அற்புதமானது. கடலில் மேகங்கள் எவ்வளவு உண்டானாலும் நீர் அளவு குறையாது. கடலில் எவ்வளவு நதிகள் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் கடல் நிரம்பி வழியாது.

மழை கொளக்குறையாது புனல்புக நிறையாது
–ப.பத்து 45–

பலரும் சிந்தித்துப் பார்க்காத புவியியல் உண்மை இது. பல்லாயிரக் கணக்கான ஆறுகள் ஒவ்வொரு நிமிடமும் பலகோடி கனஅடிநீரைக் கொட்டியபோதிலும் கடல் நிறைவதில்லை. அதே போல கடலிலிருந்து எவ்வளவு மழைமேகம் திரண்டாலும் கடல் குறைவதில்லை. இது இயற்கை நியதி. தமிழர்கள் எந்த அளவுக்கு பூமியை உற்றுக் கண்காணித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று.

கப்பலைத் தாக்கி அழிக்கும் மீன் வகைகள் பற்றியும் பரணர் குறிப்பிடுகிறார்.

“தனம் தரு நன்கலம் சிதையத்தாக்கும்
சிறுவெள் இறவின் குப்பை அன்ன”
–அகம் 152–

பிண்டன் என்பவனின் படை, தங்கம் கொண்டு வரும் கப்பலைத் தாக்கி அழிக்கும் இரால் மீன் கூட்டம் போன்றது என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர். ஒருவகைக் கடற்புழுக்கள் (Tereda Navalis) கப்பலின் அடியில் ஒட்டிக்கொண்டு கப்பலையே அரித்து அழித்துவிடும் என்று தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரணர் குறிப்பிடும் ‘இறவின் குப்பை’ இத்தகைய வகை கடற்புழுக்களா என்பது ஆராய வேண்டிய தகவலாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: