கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு!

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடி 2,600 ஆண்டு கால வரலாற்றை சுமந்து நிற்குகிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது.

கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி பணியில், கிடைத்த ஒவ்வொரு பொருட்களும் ஆதி தமிழரின் பெருமையை வெளிச்சம் போட்டு காட்டியது. முதல் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி முடிந்த நிலையில், நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக தொல்லியல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்க உள்ள நிலையில், 110 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் கட்டட தொழில்நுட்பம், வேளாண்மை, நெசவு உள்ளிட்டவற்றில் தமிழர்கள் மேம்பட்டவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், கீழடியில் பழங்கால மனிதர்கள் தங்குமிடமாக பயன்படுத்தும் கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது. பாறைகளின் மறைவில் மழை, வெயில் போன்றவற்றிற்காக கல்திட்டை அமைத்து அதில் பண்டைய கால மனிதர்கள் வசிப்பிடமாக பயன்படுத்தியிருக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் அகழாய்வு நடந்து முடிந்த சில மீட்டர் தூரத்தில் தென்னை மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு மனிதர்கள் பதுங்கும் வகையில் கல்திட்டை அமைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஆதிமனிதர்கள் மழை, வெயில் காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்க பூமிக்கடியில் பாறைகளின் மறைவில் கல் திட்டை அமைத்து தங்கி இருந்திருந்தார்கள்.

அதன்படி கீழடியில் வாழ்ந்த ஆதிதமிழர்கள் இரவு மற்றும் மழை, வெயில் காலங்களில் தங்களை பாதுகாக்க இந்த கல்திட்டை அமைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்திட்டையை பார்வையிட்ட அதிகாரிகள் 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கும். இதுதொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தனர்.

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் இடங்களை உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதன்மூலம் கீழடியின் பெருமை சர்வதேச அளவிற்கும் பரவியுள்ளது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>